Published:Updated:

`தமிழ்நாடு’ விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என் ரவியின் விளக்கமும் பின்னணியும்!

ஆளுநர் ஆர்.என்.ரவி

``தங்களது வளர்ச்சிக்குப் பாதிப்பு ஏற்படும் நிலை வந்தால், கண்டிப்பாக ஆளுநரை மாற்றக்கூட பா.ஜ.க தலைமை தயங்காது.”

`தமிழ்நாடு’ விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என் ரவியின் விளக்கமும் பின்னணியும்!

``தங்களது வளர்ச்சிக்குப் பாதிப்பு ஏற்படும் நிலை வந்தால், கண்டிப்பாக ஆளுநரை மாற்றக்கூட பா.ஜ.க தலைமை தயங்காது.”

Published:Updated:
ஆளுநர் ஆர்.என்.ரவி

தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இடையிலான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மிக்கு தடைகோரிய மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். இதுபோல ஏராளமான மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. மேலும், ஆளுநரும் பல்வேறு சர்ச்சை கருத்துகளை அடிக்கடி தெரிவித்து அரசியலில் பேசு பொருளாகவே இருந்து வருகிறார்.

இந்தநிலையில், கடந்த 5-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற தன்னார்வலர்களைப் பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "பிரதமர் மோடியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதுவும் மிகக் குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம். உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாதான் தலைமையாக இருக்கப் போகிறது" என்று தெரிவித்திருந்தார்.

திருமாவளவன்
திருமாவளவன்

ஆர்.என்.ரவியின் இத்தகைய பேச்சுக்கு சமூக வலைதளங்கள் கண்டனம் எழுந்தது. தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் டிரெண்ட் ஆனது. இதேபோல, ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக கடந்த 13-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடந்தது.

இதேபோல, ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியபோது காங்கிரஸ், வி.சி.க, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் "வாழ்க தமிழ்நாடு" என்று கூறி ஆளுநர் இருக்கையை முற்றுகையிட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர். அதை பொருட்படுத்தாமல், ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து உரையாற்றி வந்தார்.

வெளியேறிய ஆளுநர்
வெளியேறிய ஆளுநர்

அப்போது தமிழ்நாடு அரசு தயாரித்த அந்த உரையிலிருந்த அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி, உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் மற்றும் திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் தனது உரையில் புறக்கணித்தார். ஆளுநரின் உரைக்குப் பின்னர் அவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஆளுநர் தனது உரையில் சில குறிப்பிட்ட வார்த்தைகளைத் தவிர்த்துள்ளது வருந்தத்தக்கது. ஆளுநர் சேர்த்த சில வார்த்தைகள் உரை அவை குறிப்பில் இடம் பெறாது" எனக் கூறி தீர்மானம் கொண்டு வந்த நிலையில் தீர்மானம் நிறைவேறியது.

அப்போது அவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென மரபுகளை மீறி புறப்பட்டுச் சென்றார். இவ்வாறு அரசுக்கும்-ஆளுநருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. பின்னர் 12-ம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் மற்றும் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் ஒன்றை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துக் வழங்கினர்.

ஆர்.என்.ரவி, ஸ்டாலின்
ஆர்.என்.ரவி, ஸ்டாலின்

இந்தச்சூழலில், இரண்டு நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த கடந்த 13-ம் தேதி டெல்லி சென்றார். ஆளுநரின் டெல்லி பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மேலும், அவர் அரசு முறை பயணமாக இல்லாமல் சொந்தப் பயணமாகவே டெல்லி சென்றார் என்றும் கூறப்பட்டது. பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவி, 14-ம் தேதி இரவு சென்னை திரும்பினார். இந்தநிலையில், கடந்த 18-ம் தேதி ஆளுநர் மாளிகையிலிருந்து தமிழகம்-தமிழ்நாடு தொடர்பாக கவர்னர் பேசியது தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

ஆளுநர் விளக்கம்
ஆளுநர் விளக்கம்

அதில், "காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்க 'தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே, வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்குப் புறம்பானது. எனது பேச்சின் அடிப்படை புரியாமல் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்" என்று தெரிவிக்கப்பட்டது.

பிரியன்
பிரியன்

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியனிடம் பேசியபோது, ``ஆளுநர் அவருக்கு கொடுத்த வேலையைச் சரியாகச் செய்து வருகிறார். ஆனால், தமிழ்நாட்டை, தமிழகம் என்று பேசியதை மாநில பா.ஜ.க-வே விரும்பவில்லை. ஆளுநரின் இதுபோன்ற பேச்சுகள் தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று டெல்லிக்கு ரிப்போர்ட் சென்றிருக்கிறது. இதனாலேயே, கடந்த 13-ம் தேதி டெல்லி சென்ற ஆளுநரை பார்க்காமல் பா.ஜ.க மேலிடம் திருப்பி அனுப்பியிருக்கிறது. இந்த விவகாரத்தால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று நினைத்துத் தான் அவர், அரை குறையாக ஒரு விளக்க அறிக்கையைத் தயார் செய்து வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையானது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டக்கூடாது என்பது போலவே இருக்கிறது. தங்களது வளர்ச்சிக்குப் பாதிப்பு ஏற்படும் நிலை வந்தால் கண்டிப்பாக ஆளுநரை மாற்றக்கூட பாஜக தலைமை தயங்காது" என்றார்.