Published:Updated:

திமுக அரசு: பிரச்னைகளுக்குத் தொடர்ந்து அமைக்கப்படும் ஆய்வுக் குழுக்கள்... இதுவரை தீர்வு கிடைத்ததா?!

முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சி நடந்துவரும் இந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுக்களால் கிடைத்த தீர்வுகள்தான் என்ன?!

திமுக அரசு: பிரச்னைகளுக்குத் தொடர்ந்து அமைக்கப்படும் ஆய்வுக் குழுக்கள்... இதுவரை தீர்வு கிடைத்ததா?!

திமுக ஆட்சி நடந்துவரும் இந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுக்களால் கிடைத்த தீர்வுகள்தான் என்ன?!

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அமைக்கப்பட்ட முதல் குழு, மாநில வளர்ச்சிக்கான கொள்கைக் குழுதான். முதலமைச்சர் தலைமையின்கீழ் செயல்படும் இந்தக் குழுவின் துணைத் தலைவராகப் பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டார். இந்தியாவில் முதன்முதலாக ஒரு திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் திட்டக்குழுவில் இடம்பெற்றார். இதில் தொடங்கி பல விசயங்களுக்கு ஆய்வுக் குழுக்களைத் திமுக அரசு அமைத்தது.

`பொதுவாக எல்லா ஆட்சிகளிலும் ஆய்வுக் குழு அமைப்பது இயல்பு. எனினும், திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் ஆய்வுக் குழு என்று சொல்லும் அளவுக்கு அத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 34-க்கும் அதிகமான குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்
பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்
vikatan

இதுவரை தொடங்கப்பட்ட குழுக்கள்...

தமிழகத்தில் பொருளாதார திட்டக்குழு, சாதி தீண்டாமை ஒழிப்புக் குழு, இடைநிலை ஆசிரியர்கள் ஆய்வுக்குழு, மாநில கல்விக் கொள்கைக் குழு, ஆயுள் சிறைக் கைதிகள் முன்விடுதலை ஆய்வுக் குழு, தேசிய கல்விக் கொள்கை ஆராய குழு, கொரோனா கண்காணிப்புக் குழு, நீட் தேர்வு ஆய்வுக் குழு, சூதாட்டம் தடை ஆய்வுக் குழு, நகைக்கடன் தள்ளுபடி குழு, மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு ஆய்வுக்குழு, இஸ்லாமிய சிறைவாசிகள் விடுவிக்க குழு, சமூகநீதி கண்காணிப்புக் குழு எனப் பல குழுக்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு எழுதவந்த மாணவ, மாணவிகள்.
புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு எழுதவந்த மாணவ, மாணவிகள்.
KURUZ THANAM A

இடைநிலை ஆசிரியர்கள் ஆய்வுக் குழு!

கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஓர் ஊதியமும், அடுத்த மாதம் முதல் நியமிக்கப்பட்டவர்களுக்கு வேறு ஊதியமும் வழங்கப்படுகிறது. இதனால் 20,000-க்கும் அதிகமான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதைக் கண்டித்து ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவந்தனர். இதையடுத்து, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 1-ம் தேதி, போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வுசெய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

இதை விமர்சித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”தமிழ்நாட்டில் தற்போது நடப்பது குழுக்களின் ஆட்சி என்றும் மக்களே விமர்சிக்கும் அளவுக்குப் பல குழுக்களைத் தமிழக அரசு உருவாக்கியிருக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்று 20 மாதங்களில் 40-க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்துள்ளது. ஆனால், அந்தக் குழுவால் நடந்த நன்மை என்ன? கிடைத்த தீர்வுகள் என்ன?

சீமான்
சீமான்

தமிழ்நாட்டையே உலுக்கிய மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் உண்மையைக் கண்டறிய குழு அமைக்கப்பட்டது. அதில் கிடைத்த நீதி என்ன?. இப்படி எல்லாத்துக்கும் குழு அமைக்கும் திமுக அரசு கொடநாடு கொலை, கொள்ளை நிகழ்வை ஆய்வுசெய்ய எந்தக் குழுவும் அமைக்காதது ஏன்? உண்மையில் புழு கூட நான்கடி நகரும்! திமுக அரசமைத்த இந்தக் குழுக்களில் எவ்வித நகர்வும் இல்லை. இந்தக் குழுக்களால் அரசின் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணாகிறதே தவிர ஆக்கபூர்வமான செயல்பாடுகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை” என்று விமர்சித்தார்.

கோவை சத்யன்
கோவை சத்யன்

இது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் பேசியதாவது, ``திமுக அரசு சார்பாக அமைக்கும் குழு அனைத்தும் அவர்களின் இயலாமையை மறைப்பதற்கே அன்றி வேறில்லை. அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு தரமானதா? என்பதை உறுதிசெய்ய குழு அமைக்கப்பட்டது. பரிசுத் தொகுப்புகள் வரும் ஜனவரி 9-ம் தேதி வழங்கப்படும் நிலையில், அதற்கான ஆய்வுக் குழுவை 2-ம் தேதிதான் அமைக்கிறார்கள். காலம் கடந்து இந்த ஆய்வுக்குழு அமைக்க காரணம் என்ன?

பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பு

அதிமுக அரசு அதிக கடன் வாங்கியதாகக் கூறுகிறார்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசால் 4 லட்சம் 70 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டது. ஆனால், இந்த 2 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி கடனை திமுக அரசு வாங்கியிருக்கிறது. எந்த அரசுக்கு நிர்வாகத் திறன் இருக்கிறது என்பது இதில் தெளிவாகத் தெரியும்.

இப்படிச் சில லட்சங்கள் புரளும் குழுக்கள் மேல் திசை திருப்பி, பல கோடிகளைத் 'திட்டங்கள் செயல்படுத்துகிறோம்' என்னும் பெயரில் சுருட்டி வருகிறார்கள். சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கெல்லாம் குழுக்கள் அமைப்பது அவசியமற்றது. குழுக்கள் அமைக்கப்படுவதே தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்துவதற்குத்தான். ஆனால், தொலைநோக்கு என்றால் என்னவென்றே தெரியாத முதல்வர் எப்படி குழுக்களை அமைத்து செயல்படுத்த முடியும். ஏற்கெனவே நீட் விலக்குப் பெற அமைத்த குழுவால் எந்தப் பலனும் எட்டப்படவில்லை. இன்னும் போனால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திட்டக் குழுவை திமுக அமைத்தாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்னுமில்லை" என்றார்.

சிவ ஜெயராஜ்
சிவ ஜெயராஜ்

இது குறித்து நம்மிடம் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் சிவ செல்வராஜ், ``ஜனநாயகத்தை மதிக்கின்ற எந்த அரசாக இருந்தாலும் ஒரு பிரச்னையில் தீர்வுகாண மக்கள், அதிகாரிகள், அமைப்புகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும். அதைக் குழுக்களின் பரிந்துரை வாயிலாகப் பெற்று செயல்படுத்துகிறோம். நீட் தேர்வு ஆய்வுக் குழு ஏ.கே ராஜன் தலைமையில் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளை வைத்து சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டிருக்கிறது. ஆன்லைன் ரம்மிக்கு நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

நீதியரசர் சந்துரு
நீதியரசர் சந்துரு

எதேச்சதிகாரத்துக்கு எதிராக இருப்பவர்கள்தான் குழுக்களை எதிர்க்கிறார்கள். இன்னும் சட்டமன்ற உறுப்பினராகக் கூட ஆகாமல், அரசு நிர்வாகம் என்றால் என்னவே தெரியாத சீமான் விமர்சிப்பது அரசின் மீது வன்மத்தைக் கக்கும் செயல்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் பல குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை நிறைவேற்றப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட குழுக்கள் பரிந்துரைத்தவற்றை நாம் பின்பற்றி இருக்கிறோம்.

பலர் தமிழகம் அதிக கடன் வாங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்தியாவில் முதன்முதலாக முன்னாள் ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் பொருளாதாரத் திட்டக்குழு அமைக்கப்பட்டதால் தமிழகத்தின் கடன் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பணவீக்கம் குறைக்கப்பட்டு தனிநபர் வருமானம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை விரைவாக நிறைவேற்றியதால் நடந்தவை. இருப்பினும் அமைக்கப்பட்ட சில குழுக்கள் இன்னும் பரிந்துரை வழங்காமலும், அதை அரசு நிறைவேற்றாமலும் இருப்பது விரல்விட்டு எண்ணக்கூடியவை. அது விரைவில் சரிசெய்யப்படும்.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

அதேபோல், 'முதலமைச்சர் டேஷ்போர்டு' திட்டத்தால் நேரடியான அனைத்துத் துறைகளும் திட்டங்களும் கண்காணிக்க முடியும். அதில் இந்தக் குழுக்களின் பரிந்துரைகளும் ஆராயப்படும். ஆனால், விமர்சனம் முன்வைக்கும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு இது பற்றித் தெரிய வாய்ப்பில்லை" என்றார்.

மாநிலத்தின் பிரச்னையைச் சரியாக ஆராய குழு அமைப்பது ஆரோக்கிமானது. ஆனால், அமைக்கப்பட்டிருக்கும் குழுக்கள் மீது மற்ற கட்சிகளின் விமர்சனமும் தொடங்கியிருக்கிறது. அதனால் குழு அமைக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகள், நன்மைகள் என்ன என்பதைக் கூறவேண்டிய நிலையில் திமுக அரசு இருக்கிறது.