Published:Updated:

அதிமுக விவகாரத்தில் பாஜக-வின் ரோல் என்ன?! - ஓர் அரசியல் பார்வை

எடப்பாடி - பன்னீர்

அ.தி.மு.க-வுக்குள் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நடக்கும் அதிகாரப் போட்டியில் பா.ஜ.க-வின் ரோல் என்ன?

அதிமுக விவகாரத்தில் பாஜக-வின் ரோல் என்ன?! - ஓர் அரசியல் பார்வை

அ.தி.மு.க-வுக்குள் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நடக்கும் அதிகாரப் போட்டியில் பா.ஜ.க-வின் ரோல் என்ன?

Published:Updated:
எடப்பாடி - பன்னீர்

அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடைபெற்றுவரும் அதிகாரப் போட்டி, அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது. அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று, அதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

சென்னையை அடுத்த வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி அணியினர் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க-வின் தலைமையகத்துக்குள் தன் ஆதரவாளர்களுடன் அதிரடியாக ஓ.பன்னீர்செல்வம் நுழைந்தார். இடைக்கால பொதுச்செயலாளராகப் பதவியேற்று, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டுக்கு எடப்பாடி பழனிசாமி திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், அ.தி.மு.க அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்துக்குச் சென்று ஆதரவாளர்களைச் சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்குத் தன் ஆதரவாளர்களுடன் சென்று வணங்கினார். `பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கிவிட்டார். ஆனால், தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்’ என்கிறது பன்னீர் தரப்பு. ‘வைத்திலிங்கமும் மனோஜ்பாண்டியனும் மட்டுமே பன்னீருடன் இருக்கிறார்கள். மற்றபடி, ஒட்டுமொத்த கட்சியும் எங்கள் பக்கம்தான் இருக்கிறது’ என்கிறது எடப்பாடி தரப்பு.

இரு தரப்புக்குமான மோதல் முற்றுப்பெறாமல் தொடர்கிறது. அடுத்த என்ன நடக்கும் என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் முன்வைத்தோம்.

எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் இன்று கூட்டப்பட்ட பொதுக்குழு, நியாயபூர்வமாகவோ, சட்டப்பூர்வமாகவோ நடத்தப்படவில்லை. பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான அனுமதியை நீதிமன்றம் அளித்திருந்தாலும், உட்கட்சி ஜனநாயகத்தில் தலையிட வேண்டாம் என்கிற பார்வையிலிருந்நது அந்த நிலைப்பாட்டை நீதிமன்றம் எடுத்திருக்கிறது. ஆனால், ‘பொதுக்குழு கூட்டப்பட்டவிதம் சரியில்லை... என்னை நீக்கியது சரியில்லை... பதவியை ரத்து செய்தது சரியில்லை’ என்று கூறி தேர்தல் ஆணையத்திடமோ, உரிமையியல் நீதிமன்றத்திடமோ நிவாரணம் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கடந்த நான்கரை ஆண்டுகளில் இன்றைக்குத்தான், ஓ.பி.எஸ் ஓர் அரசியல்வாதியைப்போல செயல்பட்டிருக்கிறார். இன்று கவனம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி மீது போய்விடும் என்பதை உணர்ந்து, தடாலடியாக தான் ஏதாவது செய்யாவிட்டால் காணாமல்போய்விடுவோம் என்று அ.தி.மு.க அலுவலகத்துக்கு பன்னீர் போய்விட்டார். அவர் நினைத்த மாதிரியே அலுவலகத்துக்கு பூட்டுப்போடப்பட்டுவிட்டது.

அடுத்து நீதிமன்றத்துக்குச் செல்லும்போது, பல கேள்விகள் எழுப்பப்படும். `ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கிறதா, இல்லையா... பொதுக்குழு சரியாகக் கூட்டப்பட்டதா... ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது சரியா, இல்லையா... என்று கேள்விகள் எழும். எனவே, ஒட்டுமொத்த பிரச்னையும் நீதிமன்றத்தின் பரிசீலனைக்குப் போகும். தேர்தல் ஆணையத்துக்கும் இந்த விவகாரத்தை பன்னீர் கொண்டுபோவார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குத் தேர்தல் எதுவும் இல்லாததால், இருவரும் தனித்தனியாகச் செயல்படுவார்கள்” என்றார் ப்ரியன்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் எனப் பெரும்பாலான அ.தி.மு.க தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருக்கிறார்கள். அவர்களை ‘விலை கொடுத்து எடப்பாடி வாங்கிவிட்டார்’ என்று பன்னீர் தரப்பு சொன்னாலும், எடப்பாடி பக்கம் அவர்கள் அனைவரும் நிற்பதற்கு சசிகலாவும் ஒரு முக்கியக் காரணம். இனிமேலும் சசிகலாவின் காலில் போய் விழுவதை அ.தி.மு.க நிர்வாகிகள் யாரும் விரும்பவில்லை. அதனால், எடப்பாடியைத் தலைவராக அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவருவதற்கு பன்னீர்செல்வம் ஆதரவாக இருக்கிறார் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.

இது குறித்து பேசிய ப்ரியன், “சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உட்பட தற்போது எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பவர்களின் அணுகுமுறை எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது. இடைக்கால பொதுச்செயலாளர் என்ற ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வந்திருக்கிறார். அவர், இனி பல பிரச்னைகளைச் சந்திக்கவேண்டியிருக்கும். நிர்வாகிகள் ஆதரிக்கிறார்கள் என்பதாலேயே செல்வாக்குமிக்க தலைவராக அவர் மாறிவிட முடியாது. தான் ஒரு செல்வாக்குமிக்க தலைவர் என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிக்கவேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது” என்கிறார் ப்ரியன்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ‘தர்மயுத்தம்’ தொடங்கினார் பன்னீர்செல்வம். முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். பின்னர், இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன. அந்த நகர்வுகளின் பின்னணியில் பா.ஜ.க செயல்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. தற்போது, மீண்டும் இருவரிடம் பிளவு ஏற்பட்டுள்ள சூழலில், பா.ஜ.க-வுக்கு இதில் பங்கு இருக்கிறதா என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுப்பப்படுகிறது.

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

இது குறித்து பேசிய ப்ரியன், “அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவாவதை பா.ஜ.க விரும்புகிறதா என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை. நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை, நமது அம்மா பத்திரிகையின் வெளியீட்டாளர் சந்திரசேகர் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. அப்போது, அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமையாக எடப்பாடி உருவாவதை பா.ஜ.க விரும்பவில்லை என்று பேசப்பட்டது. அந்த ரெய்டு பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லாத எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியபோது, அரசியல் பழிவாங்கல் என்று அதைக் கண்டித்தார். மத்திய அரசை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை, பா.ஜ.க-வுக்கு அவர் பயப்படுகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. அதேநேரத்தில், பா.ஜ.க-வுடன் அவர் தொடர்பில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

எனவே, கட்சி அலுவலகத்தை பூட்டிய விவகாரத்தில்கூட திமுக-தான் நம் கட்சி பிளவுக்குக் காரணமாக இருக்கிறது என்று பிரசாரம் செய்ய எடப்பாடிக்கு உதவியாக இருக்கும். ஆனாலும், அவர் சட்டப் போராட்டத்தை சந்தித்துதான் தீர வேண்டும். இன்று நடந்தது எல்லாவற்றையும் நான்கு ஆண்டுகளாக விட்டுக்கொடுத்த பன்னீர் இன்றுதான் அரசியல்வாதியாக எதிர்த்து நின்றிருக்கிறார். அரசியல்வாதியாக தன்னாலும் ஃபைட் பண்ண முடியும் என்று செயல்பாடுகளைக் காண்பித்திருக்கிறார். அதற்காகத் தொண்டர்கள் ரத்தம் சிந்தும்படி ஆகிவிட்டது என்பது வருந்தத்ததக்கது.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்
விகடன்

அ.தி.மு.க-வில் தற்போது நடக்கும் பிரச்னையால், தமிழ்நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. இது, பா.ஜ.க-வுக்கு சௌகரியமாக இருக்கிறது. அ.தி.மு.க விட்ட இடத்தைப் பிடிக்க பா.ஜ.க முயலும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதிலிருந்து, பா.ஜ.க-வின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ளலாம். இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு இப்படியே போட்டி அரசியலை இருவரும் நடத்திக்கொண்டிருப்பார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பா.ஜ.க புகுந்து இருவரையும் இணைத்துவைக்கலாம். அல்லது, ஒன்றைத் தலைமை நல்லது என்று நினைத்தால், அப்படியே விட்டுவைக்கலாம்” என்கிறார் ப்ரியன்.