Published:Updated:

முதல்வர் மம்தா போட்டியிடும் பவானிப்பூர் இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கிறது?

மேற்கு வங்க முதல்வர் மம்தா போட்டியிடும் பவானிப்பூர் இடைத்தேர்தல் களம் நிலவரம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சமீபத்தில் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்திருந்தது. தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 293 தொகுதிகளில், 213 தொகுதிகளைக் கைப்பற்றி மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இருந்தபோதிலும், முதல்வர் மம்தா போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியைவிட 1,956 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியைத் தழுவியிருந்தார். 2016-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வெறும் மூன்று இடங்களை மட்டும் கைப்பற்றியிருந்த நிலையில் இந்த முறை 77 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையிலும் முதல்வராக மம்தா பொறுப்பேற்றுக்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தால் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். இல்லையென்றால், முதல்வர் பதவியில் நீடிக்க முடியாத நிலை உருவாகும். இதனால், மம்தா போட்டியிடுவதற்கு ஏதுவாக, பவானிப்பூரில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும், அந்த மாநில வேளாண்துறை அமைச்சர் சோபன்தேப் சாட்டோபாத்யாய அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து பவானிப்பூர் உட்பட ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை வரும் அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும். பவானிப்பூர் தொகுதியைப் பொறுத்தவரை இரண்டு தேர்தல்களில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு மம்தா வெற்றியும் பெற்றார். இந்தத் தேர்தலில்தான் சுவேந்து அதிகாரியை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.

பிரியங்கா திப்ரேவால்
பிரியங்கா திப்ரேவால்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்தித்தது. ஆனால், இந்தத் தேர்தலில் மம்தாவுக்கு எதிராகத் தேர்தலைச் சந்திக்கவில்லை. காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மம்தாவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது. மேற்கு வங்க பிரதான எதிர்க்கட்சியான பாஜக சார்பில் பவானிப்பூர் தொகுதியில் பிரியங்கா திப்ரேவால்-ம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீஜிப் பானர்ஜியும் போட்டியிடுகின்றனர்.

மேற்கு வங்கத்தில் எடுபடாமல் போன பாஜகவின் வியூகம்..  அடித்து நொறுக்கிய மம்தா பானர்ஜி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் மட்டுமே அவர் முதல்வராகத் தொடர முடியும். எனவே, இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் மம்தா இருக்கிறார். பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால்-ஐ பொறுத்தவரை, கடந்த தேர்தலில் என்டல்லி தொகுதியில் போட்டியிட்ட இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுவர்ண கமலிடம் தோல்வியைத் தழுவினார். மேலும் தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கலவரங்கள் குறித்து பல்வேறு வழக்குகளைத் தொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் பவானிப்பூர் தொகுதி என்பது மம்தாவுக்குச் சொந்த தொகுதியைப் போன்றது. இங்கு அவரை எதிர்த்துக் களம் காணும் இருவருமே மிகக் கடுமையான வேட்பாளர்கள் இல்லை என்பதால் மம்தா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் வேலையில் இறங்கியிருக்கும் மம்தாவுக்கு இந்தத் தேர்தலில் வெற்றி என்பது மட்டும் போதாது, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்பது மிக முக்கியம். பாஜக-வுக்கு ஆதரவாக சுவேந்து அதிகாரி உட்பட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் தீவிர தேர்தல் பணியில் இறங்கியுள்ளனர். அதேநேரத்தில், `மம்தாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும், அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறவைப்பது மட்டுமே எங்களின் லட்சியம்’ என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 15 நாள்கள் மட்டுமே இருக்கும் சூழலில் பவானிப்பூர் தொகுதியில் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு