Published:Updated:

தேர்தல் களத்தில் பரபரக்கும் பாஜக... அடித்தளம் அமைக்குமா அண்ணாமலை வியூகம்?!

அண்ணாமலை ( Facebook/annamalai )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனிநபரின் பலம் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்றாலும் ஒவ்வொரு கட்சியும் வியூகங்களோடுதான் இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றன. அப்படி பா.ஜ.க-வின் தேர்தல் வியூகம் என்ன என்பது குறித்து ஓர் அலசல்...

தேர்தல் களத்தில் பரபரக்கும் பாஜக... அடித்தளம் அமைக்குமா அண்ணாமலை வியூகம்?!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனிநபரின் பலம் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்றாலும் ஒவ்வொரு கட்சியும் வியூகங்களோடுதான் இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றன. அப்படி பா.ஜ.க-வின் தேர்தல் வியூகம் என்ன என்பது குறித்து ஓர் அலசல்...

Published:Updated:
அண்ணாமலை ( Facebook/annamalai )

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் காணொலி மூலமும் நேரடியாகவும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை இரு முனைப் போட்டியாக இருந்த தேர்தல் களம் தற்போது எட்டு முனைப் போட்டியாக மாறியிருக்கிறது. அந்தளவுக்குத் தமிழ்நாடு அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதில் மிக முக்கியமான மாற்றம் பா.ஜ.க தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசு பொருளாகியிருப்பது.

அதிமுக கூட்டணியில் இருந்த பா.ஜ.க இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்த முடிவு அ.தி.மு.க உடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததாலேயே பா.ஜ.க எடுத்திருக்கிறது. ஆனால், இதில் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்குப் பெரிய அளவில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் நடந்த ஒன்பது மாநில ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. சில இடங்களில் மிகக் குறைவான வாக்குகள் வாங்கியதாகச் சர்ச்சைகளும் எழுந்தன. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிடுவது என்பது பா.ஜ.க-வைப் பொறுத்தவரை மிகப்பெரிய முடிவாகப் பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை - பழனிசாமி
அண்ணாமலை - பழனிசாமி

மேலும், அண்ணாமலை கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றதும் தனித்துச் சந்திக்கும் முதல் தேர்தல். ஆனால், எல்லாவற்றையும் மீறி தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது கமலாலய வட்டாரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் ஒவ்வொரு வகையில் மிகவும் முக்கியத்துவமானது. ஆனால், பா.ஜ.க-வைப் பொறுத்தவரை அண்ணாமலையை இந்தத் தேர்தல் வெற்றிதான் தலைவராக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும். வெற்றிக்காக ஒவ்வொரு கட்சியும் குறிப்பிட்ட வியூகத்தோடே இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. அந்தவகையில் பா.ஜ.க-வின் தேர்தல் வியூகம் இந்தத் தேர்தலில் என்ன, அதற்கு எப்படி மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பது குறித்து ஓர் அலசல் கட்டுரை...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கிய அ.தி.மு.க உடனான கூட்டணி சட்டப்பேரவை தேர்தல் அடுத்து நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரை தொடர்ந்தது. இதில் சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு இடங்களில் வெற்றி பெற்றதைத் தவிர மற்ற தேர்தல்களில் சொல்லிக் கொள்ளுமளவு பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தாங்கள் கேட்ட இடத்தை அ.தி.மு.க ஒதுக்கவில்லை என அண்ணாமலை நினைக்கிறார். சட்டப்பேரவையில் பெற்ற வெற்றி கூட அ.தி.மு.க தயவில் பெற்றதாகத்தான் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கிறார்கள். எனவே, அந்தப் பேச்சைத் தவிர்க்க தமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாகவே அண்ணாமலை நினைக்கிறார். அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் மற்றெல்லா தேர்தலையும் விட இதில் கூடுதலாக உழைப்பைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இந்தத் தேர்தலில் பெறும் வெற்றி மற்றும் வாக்கு விகிதத்தின் அடிப்படையில்தான் அடுத்தடுத்த தேர்தல்களின் கூட்டணியின் போது தாம் நினைத்த சதவிகிதத்தில் இடங்களைக் கேட்டுப் பெற முடியும் என்பதால் அதற்கேற்பத் தேர்தல் வியூகங்களை வகுத்திருக்கிறார்” என்றவர்கள்... ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வியூகத்தோடுதான் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம்” என்கிறார்கள்.

பாஜக வேட்பாளர்களுடன் அண்ணாமலை
பாஜக வேட்பாளர்களுடன் அண்ணாமலை
பேஸ்புக்

``சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுக்கும் 6-க்கும் மேற்பட்டவர்கள் சீட் கேட்டு விண்ணப்பித்தார்கள். இதில் 100-க்கும் மேற்பட்ட வார்டுகளில் மிகவும் பலம் வாய்ந்த வேட்பாளர்களையே சென்னை பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் உடன் இணைந்து தேர்வு செய்திருக்கிறார். இவர்களில் 10 பேர் வெற்றி பெற்றாலே போதும் என்பதுதான் அண்ணாமலையின் தேர்தல் கணக்கு” என்றனர் பா.ஜ.க-வினர்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``தேர்தலுக்காகப் பிரசாரம் செய்ய மிகக் குறுகிய நாள்கள் மட்டுமே இருக்கின்றன. எனவே, மிகக் குறுகிய காலத்தில் மக்களிடம் சென்று சேரும் வகையில் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிறார் அண்ணாமலை. எனவே, தேர்தலில் வெற்றி பெற அனைவரும் மிகக் கடினமாக உழைக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் மக்களைத் தினமும் 50 முதல் 100 பேரையாவது சென்று சந்திக்க வேண்டும், தேவை ஏற்பட்டால் வேட்பாளர்கள் காலில் கூட விழத் தயங்கக் கூடாது. தற்போது சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனும் அளவுக்கு தற்போதைய நிலை இருக்கிறது. அனைவரிடமும் ஸ்மார்ட் போனும் இருக்கிறது. எனவே, தங்களது பிரசாரத்தை ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் மூலமாகச் செய்யவும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அதனால் மக்கள் அடைந்திருக்கும் பயன்கள் குறித்து எடுத்துச் சொல்வதுதான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அண்ணாமலை கையில் எடுத்திருக்கும் மிக முக்கியமான வியூகம். இதனால் வாக்கு சேகரிக்கச் செல்லும் போது தங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் என நினைக்கிறார்” என்றனர் பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் சிலர்...

தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை
தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை
பேஸ்புக்

“மேலும், தி.மு.க சட்டப்பேரவையில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, மக்களிடம் அதை எடுத்துச் சொல்வதோடு மத்திய அரசுடன் தி.மு.க அரசு எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மத்திய அரசுத் திட்டங்களின் பலன்கள் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் தேர்தல் பிரசாரத்தில் பேசச் சொல்லிக் கூறியிருக்கிறார்.” என்றனர். தேர்தல் முடிவுகள்தான் அண்ணாமலையின் தேர்தல் வியூகத்துக்குக் எந்தளவு பலன் கிடைத்தது என்பது தெரியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism