Published:Updated:

நீட் தேர்வு விவகாரம் - மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய யதார்த்தம் என்ன?

நீட் தேர்வு
நீட் தேர்வு

`நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம்’ என்று தேர்தல் வாக்குறுதியில் கூறிய தி.மு.க., தற்போது `அதற்கு மாணவர்கள் தயாராவதில் தவறில்லை’ எனக் கூறியிருக்கிறது. நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன... மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

`செப்டம்பர் 12-ம் தேதி, மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும்’ என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 13 முதல் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள தி.மு.க அரசின் மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதி நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற்றுத் தருவோம் என்பதுதான். அதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் தேர்வால் கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஆராய, குழு ஒன்றை அமைத்தது தி.மு.க அரசு. ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவும் தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்தநிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், ``நீட் தேர்விற்கு மாணவர்கள் தயாராவதில் தவறில்லை” எனக் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, தி.மு.க பொறுப்பேற்ற கல்வியாண்டுக்குத்தான் விலக்கு பெற முடியும் எனவும் தி.மு.க-வினர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு ரத்து, விலக்கு பெறுவது தொடர்பாக தி.மு.க அரசின் நிலைப்பாடு எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. பொய் வாக்குறுதிகள் மூலம் தி.மு.க ஆட்சியைப் பிடித்துவிட்டது எனக் குற்றம்சாட்டிவருகின்றனர். நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாது என்பது தெரிந்து தி.மு.க நாடகம் ஆடுகிறார்கள் எனவும் விமர்சித்துவருகிறார்கள். உண்மையில் நீட் தேர்வில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன... நீட் தேர்வு குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய கள யதார்த்தம் என்ன?

செப்டம்பர் 12-ல் நீட் தேர்வு: `மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்!’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவர் சங்கப் பொதுச்செயலாளர் ரவீந்திரன்

``மத்திய அரசை வலியுறுத்தி, அதன் ஒப்புதலுடன் நீட் தேர்விலிருந்து நமக்கான விலக்கைப் பெற, தமிழ்நாடு அரசு கடுமையாக முயல வேண்டும். ஆனால், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு தற்போதைக்குச் சாத்தியம் இல்லை என்பதுதான் உண்மை நிலவரம். ஒருவேளை நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றாலும்கூட நீட் பயிற்சி மையங்களைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்த வேண்டும். நீட் தேர்வுக்கு மட்டுமல்ல, ஜேஇஇ உட்பட அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் தமிழ்நாடு அரசு பயிற்சி அளிக்க வேண்டும். தங்கும் வசதியுடனான நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை தாலுகாவுக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும். பிற மாநில மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக தமிழ்நாடு மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும்.

டாக்டர் ரவீந்திரநாத்
டாக்டர் ரவீந்திரநாத்

தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்குத்தான் விலக்கு பெற முடியும். நீட் தேர்வு தேவையில்லை, அதற்குப் படிக்காதீர்கள் என மாணவர்களைத் தவறாக வழிகாட்டக் கூடாது. ஏனெனில், வெளிநாட்டில் சென்று மருத்துவம் படிக்கவும் நீட் தேர்வு கட்டாயம். நீட் விலக்கு கேட்கும் எந்த மாநிலமாக இருந்தாலும், நீட் தேர்விலிருந்து ஒன்றிய அரசு அந்த மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஏனெனில், அது மாநில உரிமைகளில் தலையிடுவதாக ஆகிவிடும்.

பிரச்னைகளை ஆராய்ந்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வது மட்டும்தான் நீட் தேர்வு பிரச்னையை ஆராய அமைக்கப்பட்ட ஆணையத்தின் பணி. அதன் பிறகு அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்பதா, வேண்டாமா என்பதை அரசுதான் முடிவு செய்யும். உண்மையில், பிரச்னை என்பது நீட் தேர்வு வேண்டுமா இல்லையா என்பது இல்லை. சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுதான். நுழைவுத்தேர்வு இருந்தாலும் இல்லையென்றாலும் பணம் இருக்கிறவர்கள் என்ன படிக்க நினைக்கிறார்களோ அதை எந்தத் தடையுமின்றிப் படிக்க முடியும் இல்லையா? அந்தச் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வைப் போக்காமல் ஒரு தேர்வின் மீது முழுக் குற்றத்தையும் ஏற்றிக் கூறுவது எந்த வகையிலும் சரியான வாதமாக இருக்காது. எல்லோருக்கும் சம வாய்ப்பை உருவாக்காமல் தேர்வுதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பதும் தவறு.

 ‘நீட்’ பயிற்சி
‘நீட்’ பயிற்சி

பயிற்சி நிறுவனங்கள், தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அரசு கையில் எடுத்துக்கொண்டாலே போதும்... எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும். நீட் ஒரு பிரச்னைதான் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், எல்லா பிரச்னைகளையும் நீட் தேர்வு மேல் எழுதுவதும் தவறானது. உண்மையான பிரச்னை எல்லோருக்கும் தெரியும். அதைச் சரிசெய்ய முயலலாம்” என நீட் தேர்வு குறித்தும், மாணவர்கள் எதிர்காலத்தில் செய்ய வேண்டியவை குறித்தும் விரிவாக விளக்கிக் கூறினார்.

நீட் தேர்வில் விலக்கு பெற மேற்கொள்ளும் தி.மு.க அரசின் முயற்சி சாத்தியமா என்பது குறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தமிழ் கா.அமுதரசனிடம் கேட்டோம்.

``சமூகநீதிக்கு எதிரான, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் நலனுக்கு எதிராகத் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு அவசியமில்லாதது என்பதுதான் தி.மு.க-வின் நிலைப்பாடு. அதனால்தான் தி.மு.க ஆட்சியிலில் இருந்தவரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் நுழைய முடியவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு நடக்காது எனத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். கொரோனா பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தமிழ்நாடு முதல்வர், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்தார். அந்த ஆணையம் அறிக்கையையும் தாக்கல் செய்திருக்கிறது.

தமிழ் கா.அமுதரசன் - திமுக
தமிழ் கா.அமுதரசன் - திமுக

நீட் தேர்வைக் கொண்டுவந்த பா.ஜ.க-தான் தற்போது ஒன்றிய அரசாகவும் இருப்பதால், நீட் தேர்வில் விலக்கு பெறுவது என்பது உடனடியாக நடக்கக் கூடியது அல்ல. சட்டப்போராட்டத்தில்தான் சாத்தியமாகும்.

நீட் தேர்வு விவகாரத்தில் 'ஸ்கோர்' செய்வாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?

1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசால் மருத்துவம், பொறியியல் படிப்புக்குக் கொண்டுவந்த நுழைவுத் தேர்வு என்ற அநீதியைத் தொடர் சட்டப்போராட்டத்தால் வென்றெடுத்தது தி.மு.க. அதன் பிறகு ஆட்சிக்குவந்த ஜெயலலிதா, தடைக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்று மீண்டும் நுழைவுத்தேர்வை நடத்திக்காட்டினார். அதன் பிறகு 2006-ம் ஆண்டில் பொறுப்பேற்ற கருணாநிதி தலைமையிலான அரசு, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரையின்பேரில் நுழைவுத் தேர்வுக்குத் தடை பெறப்பட்டது. கருணாநிதி வழியில், நீட் தேர்வுக்கான விலக்கைப் பெறத்தான் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஏ.கே.ராஜன் குழு
ஏ.கே.ராஜன் குழு

ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து குடியரசுத் தலைவர் மூலம் நீட் தேர்வுக்கு, தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற முயல்கிறோம். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு கட்டாயம் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தரும் என்பதில் எந்தச் சந்தேகமும் தேவையில்லை” என அடித்துக் கூறுகிறார்.

அடுத்த கட்டுரைக்கு