பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த பலரும், மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும்போது `துக்டே துக்டே கேங்க்’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவது வழக்கம். சமூக செயற்பாட்டாளர் சாகேத் கோக்லே, இந்தச் சொல்லாடல் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தார். அதற்கு மத்திய அரசும் தற்போது விளக்கமளித்துள்ளது.

டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான பல போராட்டங்கள் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றது. இந்தப் போராட்டங்களை விமர்சிக்கும் விதமாக பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் `துக்டே துக்டே கேங்க்’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்தத் தொடங்கினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. துக்டே துக்டே கேங்க் தான் இந்தியாவை பிளவுபடுத்த முயற்சி செய்து வருகிறது என்றும் அவர்கள் கூறுவது வழக்கம்.
ஜே.என்.யு-வில் கடந்த சில நாள்களுக்கு முன்பு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ``நான் ஜே.என்.யு-வில் படிக்கும்போது `துக்டே துக்டே கேங்க்கள்’ இல்லை'' என்று பேசினார்.
டெல்லியில், கடந்த டிசம்பர் 26-ம் தேதி நடைபெற்ற பேரணி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நாடு தழுவிய போராட்டங்களுக்கு துக்டே துக்டே கேங்க்கள்தான் காரணம்” என காங்கிரஸை விமர்சிக்கும் விதமாகப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், சமூக ஆர்வலர் சாகேத் கோக்லே, அரசியல் பேச்சுகளில் அமித் ஷா ஏன் இந்தச் சொல்லாடலை பயன்படுத்துகிறார் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்போகிறேன் என்றார். மேலும், ``உள்துறை அமைச்சரும் பேரணிகளில் இந்தச் சொல்லாடலை ஏன் பயன்படுத்துகிறார் என்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். அல்லது மக்களை தவறாக வழிநடத்தியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றும் பேசியிருந்தார்.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் பதிலளிக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் பதிவு செய்திருந்தார். இதற்கு``உள்துறை அமைச்சகத்திடம் துக்டே துக்டே கேங்க் தொடர்பான எந்தத் தகவலும் இல்லை’ என்று பதிலளித்துள்ளனர். இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சாகேத், ``துக்டே துக்டே கேங்க் அதிகாரபூர்வமாக இல்லை. அமித் ஷாவினுடைய கற்பனையின் உருவமே இது” என்று பதிவிட்டுள்ளார்.