Election bannerElection banner
Published:Updated:

`அரசியல் மாற்றம் வேண்டுமா... எந்த மாதிரியான மாற்றங்கள் வேண்டும்?’ - இளைஞர்களின் பார்வை

இளைஞர்களின் பார்வை
இளைஞர்களின் பார்வை

கல்விக்கடன் ரத்து என்றால் இலவச கல்வியைக் கேட்கிறார்கள்! நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டிவிட எண்ணும் அரசியல்வாதிகளுக்கு நிலவில் கால் பதிக்க நினைக்கும் இளைஞர்களின் பதில்கள்...

அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், பொருளாதார மாற்றம் எனப் பல மாற்றங்களைத் தமிழக அரசியல் களம் கண்டாலும், புதுமை எதுவும் இல்லாமல் மக்களிடம் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதை கவனித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் தற்கால அரசியல்வாதிகளின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது! ஆறு மாதங்கள் எரிவாயு இலவசம் என்றால் 12 மாதங்களும் பாதி விலைக்குக் கேட்கிறார்கள்! கல்விக்கடன் ரத்து என்றால் இலவச கல்வியைக் கேட்கிறார்கள்! நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டிவிட எண்ணும் அரசியல்வாதிகளுக்கு நிலவில் கால் பதிக்க நினைக்கும் இளைஞர்களின் பதில்கள்...

ஜெயபிரகாஷ், யூடியூபர், தூத்துக்குடி

``அரசியல், கால தேவைக்கேற்ப தன்னை மாற்றத்துக்கு உட்படுத்திக்கொண்டேதான் நகர்கிறது. செயல் அளவிலான மாற்றம் தன்னிச்சையாக நடக்கும். அது ஆட்சியைப் பிடிக்க அல்லது தக்கவைப்பதற்காக ஒவ்வொரு கட்சியோட கள தேவையா அவங்க நினைக்கிறாங்க. ஆனால் அது அரசியல் களத்தில் மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டி எதிர்த்தரப்புகளிடையே வெறுப்பு அரசியலைத் திணிக்கிறது. மக்கள் தன்னுடைய வேட்பாளரைக் கொள்கை அளவுல சிந்திக்க விடாமல் தடுத்து, வேட்பாளரோட ஆவேசப் பேச்சுக்கு மயங்கியே முடிவெடுக்கிறாங்க. மதம், இனம் சார்ந்த வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிற வேட்பாளரைப் பற்றிய பின்னணிக் கொள்கைரீதியான புரிதல் இல்லாத தேர்வு நடக்கிறது. ஓட்டுக்குப் பணம் கொடுக்கிற அரசியலை உலகுக்கே அறிமுகப்படுத்தினது நாமதான் என்பது வரலாற்றுப் பிழையா இன்னும் பல வருசம் தமிழ்நாட்டை தொத்திக்கிட்டுதான் இருக்கும்.

வெற்றிநடை போடும் விளம்பரங்கள்... இளைஞர் வாக்குகளில் தாக்கம் ஏற்படுத்துமா?

இந்த மாதிரியான அரசியலைத் தவிர்த்து நாகரிகமான அரசியலை நிலைநிறுத்த மக்களை அரசியல்படுத்துவதைவிட வேறு வழி இல்லை. ஆனால் கொள்கை அளவிலான அரசியல் மாற்றமென்பது மக்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கிற மாதிரியானதாக இருக்கும். ஆனால், கொள்கை அளவுல 50 ஆண்டுக்கால திராவிட அரசியலுக்கு மாற்று வேண்டாம்கிறதுதான் என்னோட விருப்பம். மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் தெரியும். மதச்சார்பின்மை, கல்வி, சுகாதாரம், கலாசாரம், பொருளாதாரம் என தமிழ்நாடு தனக்குன்னு ஒரு தனிப் பாதையை கட்டமைச்சுதான் பயணிக்கிறது. மற்ற எல்லா மாநிலங்களுக்கும் முன்மாதிரியான திட்டங்களைத்தான் கடந்தகால அரசுகள் நமக்கு அறிமுகப்படுத்தின. அரசியல் மாற்றமென்பது அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமை மற்றும் அரசின் சேவைகளெல்லாம் பாகுபாடு இல்லாம அடித்தட்டு மக்கள் வரைக்கும் பரவலாக்கப்பட வேண்டும். அப்போதுதான் பொருளாதாரம் பரவலாக்கப்படும். அதை திராவிட அரசியல் சிறப்பாகச் செய்ததாகத்தான் நினைக்கிறேன். அரசியல் மாற்றம் ஒரு கொள்கையின் பெயரிலே இன்னொரு கொள்கையாக மாற்றப்படம் கள யதார்த்தத்தையும் புரிந்துகொள்ள முடியுது. பெரும்பான்மைச் சமூகத்தை ஒன்றிணைத்து ஒரு மாற்று அரசியலை முன்வைக்க முயற்சிகள் நடக்குது. அதை மக்கள் ஏற்றுக்கொள்வாங்களானு பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்..!”

சிவக்குமார், தனியார் நிறுவன பணியாளர்
சிவக்குமார்
சிவக்குமார்

``கண்டிப்பாக அரசியல் மாற்றம் தேவை, ஆனால் நான் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் இங்கு தற்போது இருக்கும் அரசியல்வாதிகளிடம் கிடைக்குமா என்றால் அது சந்தேகத்துக்கு உரியதே. உதாரணமாக, நம் நாடு பலதரப்பட்ட புவியியல் அமைப்பைக்கொண்டு, விவசாயத்தைச் சார்ந்த நாடாக உள்ளது. ஆனால், இங்கு வரும் அரசோ பொதுவாக விவசாயக்கடன் தள்ளுபடி, பயிர்க்கடன் தள்ளுபடி என்றுதான் இன்னமும் இருக்கிறார்கள், அதைத் தவிர்த்து பெரிதாக எந்த விவசாயத் திட்டத்தையோ, அதைச் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கோ எந்த அரசும் திட்டம் கொண்டு வர முயலக்கூட இல்லை. இதுபோல பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்த அரசு தற்போதைய சூழலில் இல்லை. அதுனாலயே அரசியல் மாற்றத்தை நான் எதிர்பார்க்கிறேன்.”

பரத் குமார், கல்லூரி மாணவர், திருச்செந்தூர்.

``அ.தி.மு.க ஆட்சி சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது‌. கல்வி, வேலைவாய்ப்பு, நீர் மேலாண்மை, கட்டமைப்பு வசதி எனத் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருந்துவருகிறது‌. எனவே, அ.தி.மு.க ஆட்சியே தொடர்ந்து வெற்றிபெற வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நிச்சயமாக நல்லது செய்ய மாட்டார்கள். கமல், சீமான் போன்றவர்கள் வாக்குகளைப் பிரிப்பார்களே தவிர, தேர்தலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார்கள். எனவே, அரசியல் மாற்றம் தேவையில்லை.”

விஸ்வநாதன்
விஸ்வநாதன்
விஸ்வநாதன், பட்டதாரி இளைஞர், திருநெல்வேலி

``50 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. ஏழை இன்னும் ஏழையாகிக்கொண்டே இருக்கிறான். பணக்காரன் இன்னும் பணக்காரனாகிக்கொண்டே இருக்கிறான். அதனால், இந்த முறை மாற்று அரசியலை முன்வைக்கக்கூடிய ஒருவருக்குத்தான் வாக்களிப்பேன். குறிப்பாக, நிறைய இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். தமிழகத்தின் கடன் சுமை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழகப் பிரச்னைகளைத் தீர்க்க, நல்ல செயல்திட்டங்களை வைத்திருக்கக்கூடிய மாற்று அரசியல் பேசுகின்ற கட்சிக்குத்தான் எனது வாக்கு.”

மனோஜ் குமார், பட்டதாரி இளைஞர், தூத்துக்குடி
மனோஜ் குமார்
மனோஜ் குமார்

``திராவிடக் கட்சிகள், தமிழகத்தில் இந்தி மொழியை வளர விடாமல் செய்துவிட்டன. குறிப்பாக, மத்திய அரசுப் பணிகளில் இந்தி மொழி தெரிந்தவர்கள்தான் அதிக அளவில் வேலை செய்கின்றனர். ரயில்வே போன்ற பணிகளில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் வேலை செய்கின்றனர். தமிழர்கள், பெரும்பாலும் மாநில அரசுப் பணிகளில்தான் வேலை செய்துவருகின்றனர். புதிய கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்தால்தான் அவர்களுடைய செயல்பாடுகள் தெரியவரும். வாய்ப்பு அளிக்காமல், அவர்களைக் குறை சொல்வது நல்லதல்ல. எனவே, இந்த முறை புதிய கட்சிகளுக்குத்தான் வாக்களிப்பேன். நிச்சயமாக, அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறேன்.”

நந்தினி, கல்லூரி மாணவி, சிதம்பரம்
நந்தினி
நந்தினி

``மாற்றத்தை நூறு சதவிகிதம் எதிர்பார்க்கிறேன். இலவசங்கள் வழங்கி வாக்கு கேட்பதில் நம்பிக்கை கிடையாது. இலவசங்களும் கவர்ச்சிகரமான திட்டங்களும் அறிவிக்கப்படுவது ஓட்டு வாங்க மட்டுமே. அது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் என்பதில் நம்பிக்கை இல்லை. இலவசங்களைத் தருவதற்கு பதிலாக அரசாங்கம் மக்களின் தேவையை அறிந்து நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் இருக்கும் பெரிய பிரச்னைகளை மறைப்பதற்காகக் கவர்ச்சிகரமான 1,000, 1,500 ரூபாய் எனத் திட்டங்கள் வகுக்கப்படுவதாகத்தான் உணர்கிறேன். மேலும், ஒரு தலைவரை நம்பி அவருக்குக் கீழ் நாட்டு மக்களும் அதிகாரிகளும் செயல்படும் அரசியலும் மோசமானதுதான். களத்தில் இருக்கும் கட்சிகள் நல்ல கொள்கை உடையவையாக இருக்க வேண்டும். தலைவர்கள் மறைந்தாலும் கொள்கைதான் காலத்துக்கும் பேசும். வலிமையான தலைமையைவிட வலிமையான கொள்கையே தேவை. இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே மாறி மாறி வாக்களிக்கும் நிலை மாறி புதிய கட்சிகள் வர வேண்டும். ஆனால், புதிய கட்சிகள் மத அரசியல் செய்யாமல் இருப்பது சுபம்!”

திவ்ய பாரதி, போட்டித் தேர்வு மாணவி, விருதுநகர்
திவ்ய பாரதி
திவ்ய பாரதி

``அரசியல் மாற்றம் எதிர்பாக்கறீங்களான்னு கேட்டா, நொடியில் ஆம் என பதில் வந்துவிடும். தமிழ்நாட்டில் 1960-லிருந்து இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. நான்கு வருஷம் எந்தத் திட்டமும் மக்களுக்கு செய்யறதில்லை. தேர்தல் நேரத்துல போட்டி போட்டு அறிக்கை கொடுக்கிறாங்க... அதுல பாதித் திட்டங்களை அவங்களே மறந்துடறாங்க. மீதியை நம்ம மக்கள் மறந்துடறாங்க! ரெண்டு டிரெடிஷனல் கட்சிகள் இருக்கு இங்கே. அவங்க திட்டங்கள்ல புதுமையே இல்லை. காலத்துக்கு ஏத்த மாதிரி கொள்ளையடிக்கிறாங்க. ஆனால் கட்சிக்குன்னு இருந்த கொள்கையும் கனவுகளும் செயல்படாமல் அப்படியே இருக்கு. ஒரு வலிமையான தலைவர், புதுமையான கொள்கை ரெண்டும் அவசியம். எதுவும் இல்லாமல் ரெண்டு கட்சிக்கு இடையில் மாட்டிக்கிட்டோமோன்னு தோணுது.”

ர.சிவக்குமார், கல்லூரி மாணவன், புதுக்கோட்டை
ர.சிவக்குமார்
ர.சிவக்குமார்

``அரசியலில் மாற்றம் கண்டிப்பாகத் தேவை. தற்போதுள்ள அரசியலில் ஒரு தலைவரின் கீழ் ஒரு மொத்தக் கட்சியும் கட்டமைக்கப்படுகிறது. ஒரே கட்சியில் ஒரு தொகுதியில் நன்றாகப் பணி செய்யும் ஆட்களும் இருப்பார்கள். வேலை செய்யாத ஆட்களும் இருப்பார்கள். இந்தக் களப்பணி வேறுபாடுகள் மக்களுக்குப் புரிய இது போன்ற ஸ்டிக்கர் முக பிம்பங்கள் உடைய வேண்டும். மக்களும் இந்த பிம்பங்களற்ற வாக்கு முறைக்குள் வரும்போது நல்ல வேட்பாளர்கள் எல்லா தொகுதிக்கும் கிடைப்பார்கள். இந்த நல்ல வேட்பாளர்கள் ஒரே கட்சியிலிருந்தால் கூடுதல் ப்ளஸ் அல்லது தோற்கும் கட்சிகள் அடுத்த தேர்தலுக்கு நல்ல வேட்பாளர்களை முன்னிறுத்த முயற்சிக்கும். அதுவே ஜனநாயகத்தின் சலுகையும் அடிப்படையும்கூட - ஒரு கட்சியின் ஒட்டுமொத்த வெற்றியைவிட ஒரு தொகுதியின் நலனே இங்கு அவசியம். ஏறத்தாழ 50 வருடங்களில் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் ஏழ்மையும், வேலைவாய்ப்பின்மையும் மட்டும் அப்போ இருந்து இப்போ வரைக்கும் தொடர்கிறது. அதனுடன் சேர்ந்து இந்த அரசியல் கட்சிகளும் அப்படியே தொடர்கின்றன. அதனால் அரசியல் மாற்றம் அவசியமான ஒன்று.”

இரா.விஷ்ணு, கல்லூரி மாணவர், திருச்சி.
இரா.விஷ்ணு
இரா.விஷ்ணு

``இலவசங்களை அள்ளிக் கொடுத்துவிட்டு அந்த இலவசத்தையே மீண்டும் எதிர்பார்க்கும் நிலைதான் இங்கு நிலவிவருகிறது. இலவசத்துக்கு பதிலா வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்கினால் அரசின் வருவாயும் உயரும், மக்களின் வாழ்வாதாரமும் உயரும். ஒவ்வொரு தடவையும் மீனை எங்களுக்குக் கொடுப்பதற்கு பதிலா, மீன்பிடிக்கக் கத்துக்கொடுத்தீங்கன்னா மீனை எதிர்பார்த்து அரசிடம் நம்பியிருக்கத் தேவை குறையும்.”

மோகனப்பிரியா.செ, கல்லூரி மாணவி, சிதம்பரம்.
மோகனப்பிரியா.செ
மோகனப்பிரியா.செ

``மாற்றம் அவசியமானது, அதற்காக மக்களை பாதிக்காமல், வளங்களைச் சுரண்டாத அரசு வேண்டும். கருத்துச் சுதந்திரம் கொடுக்கிற மாற்றம் கண்டிப்பாக வேண்டும். முக்கியமா நான் எதிர்பார்க்கும் மாற்றம் மதச்சார்பின்மைதான். ஏனெனில், அதுதான் நம் அடையாளம். ஒருத்தவங்க மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்றால், பெரிய பெரிய கட்சிகளில் சேர்ந்துதான் செய்ய வேண்டும் என்று இல்லை. சுயேச்சையாகக்கூட தேர்தலில் நிற்கலாம். அதற்கு தற்போது வரவேற்பும் கிடைத்துவருகிறது. முக்கியமாக விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் போன்ற மாற்றங்கள் வேண்டும். இது போன்ற மாற்றங்கள் வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்கான மாற்றம் ஆட்சியாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் கண்டிப்பாக வேண்டும்.”

Election: `ஓட்டுக்கு பணம் பெறுவது சரியா?’ - என்ன சொல்கிறார்கள் முதன்முறை வாக்காளர்கள்?

`காலத்திற்கேற்ற மாற்றம் நிலையானது’ என இளைஞர்கள் உணர்ந்துள்ளனர். கட்சியைச் சார்ந்த இளைஞர்களும் கட்சிக்கு நிலையான கொள்கை இருந்தாலும், அதற்குள்ளும் மாற்றம் தேவை என்பதில் உறுதியாக உள்ளனர். மாற்றம் எங்கு, எப்படி, எதில், எவ்வாறு நிகழ வேண்டும் என்பதைத் துல்லியமாக எதிர்பார்க்கும் இளைஞர்கள் அவர்கள் விரும்பும் மாற்றத்தை முன்வைக்கும் கட்சிக்குத் தயக்கமின்றி வாக்களிக்கத் தயாராக உள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு