Published:Updated:

ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி - மக்கள் மனநிலையும், கருத்தும் என்ன?!

ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி

சாமானிய மக்களின் பார்வையில் ஸ்டாலினின் இந்த ஒருவருட ஆட்சி எப்படி இருந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்டோம்...

ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி - மக்கள் மனநிலையும், கருத்தும் என்ன?!

சாமானிய மக்களின் பார்வையில் ஸ்டாலினின் இந்த ஒருவருட ஆட்சி எப்படி இருந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்டோம்...

Published:Updated:
ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஒரு வருட தி.மு.க ஆட்சி குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் நோக்கர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சாமானிய மக்களின் பார்வையில் ஸ்டாலினின் இந்த ஒருவருட ஆட்சி எப்படி இருந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்டோம்.

அவர்கள் சொன்னது, சொன்னபடியே இதோ...

கோவை மக்களின் பார்வையில் தி.மு.க அரசின் செயல்பாடு எப்படி?

நித்யா - கடை உரிமையாளர், கோவை

``பெண்களுக்கு பல நல்ல திட்டங்களை இந்த ஆட்சி கொண்டுவந்திருக்கிறது. குறிப்பாக இலவச பேருந்து பயணம். எங்கு வேண்டுமானாலும் பேருந்தில் பயமின்றிப் போய் வர முடிகிறது. அரசின் பிற நலத்திட்டங்களும் பயனுள்ளதாக இருக்கின்றன. இந்த ஆட்சி மக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தோன்றுகிறது. இந்த ஒரு வருடம் செய்ததை விடவும், அடுத்த 4 ஆண்டுகள் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நினைக்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க இன்னும் கொஞ்சம் மெனக்கெடலாம். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குடிநீர் பிரச்னை மற்றும் சாலைகளை சீரமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். மற்றபடி வேறு குறைகள் இல்லை. நிறைவாகவே இருக்கிறது இந்த ஆட்சி."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அஷோகன் - காய்கறி வியாபாரி
அஷோகன் - காய்கறி வியாபாரி

அஷோகன் - காய்கறி வியாபாரி, கோவை

``விலைவாசி உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தினம் தினம் அதிகரித்து வருகிறது. இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறோம். மாநில அரசு விலை உயர்வுக்குக் காரணம் இல்லை என்றாலும், இதற்கு இந்த அரசு ஏதேனும் தீர்வு தரும் என எதிர்பார்க்கிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. அத்தியாவசியத் தேவையான நல்ல குடிநீர் முறையாகக் கிடைக்காததால் சிரமப்படுகிறோம். அதை சரிசெய்து தரவேண்டும். அரசு பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளது. அதைப்போலவே எங்களைப் போன்ற சிறு வியாபாரிகளுக்குப் பயனுள்ள திட்டங்களை வரும் காலங்களில் எதிர்பார்க்கிறோம்."

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யாழினி - கல்லூரி மாணவி, கோவை

``இந்த ஆட்சியின்`லிபரல்' செயல்பாடு எனக்குப் பிடித்திருக்கிறது. சமூக நீதி கொள்கை, பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திட்டங்கள், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்கவை. இன்றைய தேதிக்கு இவையெல்லாம் மிக முக்கியம். இலவசப் பேருந்து உள்ளிட்ட திட்டங்கள் பெண்களுக்கு சிறகு முளைத்தது போல... அவ்வளவு பயனுள்ளதாக உள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் `பவர் கட்' என்று முன்னமே பலர் சொல்லிக் கேட்டுள்ளேன். இப்போது எங்கள் பகுதியிலும் அவ்வப்போது மின் தடை ஏற்படுகிறது. அதை மட்டும் சரிசெய்ய வேண்டும். அது தவிர வேறு குறைகள் இல்லை."

யாழினி - கல்லூரி மாணவி
யாழினி - கல்லூரி மாணவி

செல்வி - மகளிர் சுய உதவிக்குழுத் தலைவி, கோவை

``மகளிர் குழுக்களில் உள்ளவர்களுக்கு இந்த ஆட்சி நிறைவான ஆட்சியாகவே தோன்றுகிறது. தேசிய வங்கிகளில் கணக்கு உள்ள குழுக்களுக்கு இப்போது மிக விரைவாக கடன் கிடைக்கிறது. முன்பு இவ்வளவு எளிதாகவோ, இவ்வளவு வேகமாகவோ கடன் பெறமுடியாது, இது எங்களுக்கு உதவியாக உள்ளது. பெண்களுக்கான ஆட்சியாகவே தி.மு.க ஆட்சியைப் பார்க்கிறோம்."

செல்வி - மகளிர் சுய உதவிக்குழுத் தலைவி
செல்வி - மகளிர் சுய உதவிக்குழுத் தலைவி

கார்த்தி - விவசாயி, கோவை

``தமிழக அரசு தனி வேளாண் பட்ஜெட்டை அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது, அதை வரவேற்கிறேன். பயிர் கடன் பெறாத விவசாயிகளுக்கு ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி நிறைய கடன் வாங்கி இருந்தாலும், ஒன்றை மட்டும் தள்ளுபடி செய்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். 90% மானியத்தில் சோலார் பேனல் மோட்டார் அரசு அமைத்து கொடுத்தால் எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு பயனளிக்கும். இவைதான் எனது கோரிக்கைகள். ஓராண்டு ஆட்சியில் செய்தது போல தொடர்ந்து அரசு நன்மை செய்ய வேண்டும்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சி - மதுரை

``தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செஞ்சிட்டு வர்ற நற்பணிகள் புத்துணர்ச்சி தர்றமாதிரி இருக்கு. இன்னும் நல்லா டெவலப் பண்ணி தமிழ்நாட்ட துபாய் அளவுக்கு முன்னேற்றிருவாறு" என்று பூரிப்படைகிறார்." வெங்கட்ராமன்.

``முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று மக்களுக்கு சிறப்பான முறையில நற்பணிகள் செஞ்சிக்கிட்டு வர்றார். தி.மு.க-வை அறிஞர் அண்ணா, காமராஜர், பெரியார், கருணாநிதி இவங்க வழியில் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்றார், மக்களோட பிரச்னைகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறாரு. மக்கள் ஒத்துழைச்சா இன்னும் 4 வருஷத்துல நம்ம நல்லாவே முன்னேற முடியும். அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் 18 வயது இளைஞரை போல் துடிப்புடன் செயல்படுகிறார்" எனப் புகழாரம் சூட்டினர் திருச்சியைச் சேர்ந்த விடுதலை செல்வம்.

பொதுமக்கள்
பொதுமக்கள்

``இதுக்கு முன்னாடி இருந்த ஆட்சிய விட தி.மு.க ஆட்சி சிறப்பா செயல்படுது. இந்த தி.மு.க ஆட்சி இப்போ இருக்குற மாதிரியே இருந்து மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் வராம சுமுகமாக இருக்கணும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் நிறைய நல்லது செஞ்சு மக்களையும், தமிழ்நாட்டையும் நல்ல வழியில கொண்டு போவார்ன்னு நம்புறோம்" என்றார் ராஜா.

``முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து நல்ல விஷயங்கள் நிறைய செய்றாரு. கொரோனா ஊராடங்குல மக்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டு இப்போதான் கொஞ்ச கொஞ்சமா பழைய நிலைமைக்கு திரும்புறாங்க. ஒரு சிலருக்கு வேலையே போயிருச்சு. ஒரு பொருளை இலவசமா தரங்க. ஆன வேற ஒரு பொருளோட விலைவாசியை கூட்டுறாங்க. இப்போ பெண்களுக்கு பஸ் இலவசமா விட்டு என்ன பண்றது? அத்தியாவசியப் பொருள்களோட விலைவாசி ஏறுறதுனால வியாபாரிகள் பெரியளவுல பாதிக்கப்படுறாங்க. இன்னொரு பக்கம் சமையல் காஸ் விலைய ஏத்துறாங்க. மக்கள் எங்கதான் போறது... அதனால அத்தியாவசியப் பொருள்களோட விலையை குறைக்கணும்" என்று கோரிக்கை வைத்தார் குணசுந்தரி.

செந்தில்குமார் - எலெக்ட்ரிக் கடை உரிமையாளர்

``இந்த ஒரு வருஷத்துல விலைவாசி பயங்கரமா கூடிருச்சு. அதுக்கு பெருசா எந்த நடவடிக்கையும் எடுக்கலை. மின்சாரம் அடிக்கடி கட் ஆகுது. மின்தடை பிரச்னை நிறைய இருக்கு. வீட்லயும் தூங்க முடியலை மின்சாரம் இல்லாததால கடையிலயும் ரொம்ப கஷ்டமா இருக்கு. பலசரக்குல தொடங்கி எல்லா பொருளும் விலையேறிருச்சு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரேட் இருக்கு. அதை கொஞ்சம் பரிசீலனை செஞ்சு விலைவாசியை குறைத்தால் நல்லா இருக்கும். ஏன்னா சம்பாதிக்குறதுல பெரும்பங்கு விலையேற்றத்தால செலவாகிடுது. மாச பட்ஜெட்ல ரொம்ப துண்டு விழுது. உழைக்கிறதுக்கும், செலவு பண்றதுக்கும் சரியா இருக்கு. எதையும் மிச்சம் பண்ண முடியலை.

பொதுமக்கள்
பொதுமக்கள்

ராஜசேகர்- துணிக்கடை உரிமையாளர்

``எல்லாம் நல்ல விதமாக பண்றாங்க. அடுத்தடுத்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்றாங்க. இதே தொடர்ந்தால் நல்லா இருக்கும்."

பிரிண்டிங் ப்ரெஸ் உரிமையாளர்

``நான் பிரிண்டிங் ப்ரெஸ் வெச்சிருக்கேன். 40 சதவிகிதத்துக்கு மேல் விலைவாசி ஏறிப்போச்சு. எதுவும் குறைஞ்ச மாதிரி இல்லை. பெட்ரோல் விலை ஏறிக்கிட்டே இருக்கு. அவர் ஆட்சிக்கு வந்தும் என்ன பிரயோஜனம். மக்களுக்கு எல்லாத்தையும் குறைச்சு தரணும். குறைக்கிறதுக்கு வாய்ப்பே இல்லையே. மோடிக்கிட்ட போய் பேசுறாரு, ஆனா, அங்க போயும் என்னதான் பண்றாருனு தெரியலை."

புகைப்படக் கலைஞர்

``முதலமைச்சரோட ஒரு வருட ஆட்சி நிறைவான ஆட்சியா இருக்கு. விலைவாசியை கொஞ்சம் கம்மி பண்ணினா நல்லா இருக்கும். நிதிப் பற்றாக்குறை'னு சொல்ற காலத்துல பெண்களுக்கு இலவச பயணம்'னு சொன்னதை இன்னும் கொஞ்சம் யோசித்து செய்திருக்கலாம். மற்றபடி 1100 தனிப்பிரிவு, கல்வி இயக்கங்கள் இது எல்லாமே நல்லா இருக்கு."

பொதுமக்கள்
பொதுமக்கள்

பூ வியாபாரி

``எதை சொல்லுவது, நீங்க இன்னைக்கு கேட்டுட்டு போய்ருவீங்க நான் நாளைக்கு கடை போட வேணாமா? இந்த ஒரு வருஷத்துல மட்டும் என்ன மாறுச்சு எங்க நிலைமை. அப்படியே தான் இருக்கு. எதுவும் மாறவில்லை. எப்பவும் மாற போறதும் இல்லை. அவர் ஆட்சிக்கு வந்தும் எந்த பலனும் எங்களுக்கு கிடைச்ச மாதிரி தெரியலை."

சோடா விற்பனை செய்யும் பெண்

``இதை பத்தி எல்லாம் நாங்க என்ன சொல்ல முடியும். யார் ஆட்சி வந்தாலும், தினமும் உழைச்சாதான் எங்கள மாதிரி ஆளுங்களுக்கு சாப்பாடு. விலைவாசி எல்லாம் கூடி போச்சு. வியாபாரமும் சரியா போறது இல்லை. விக்காதப்போ நாங்க எல்லாத்தையும் கொட்டிட்டுதான் போகணும். யார்‌ ஆட்சிக்கு வந்தாலும், எங்க நிலைமை இப்படியேதான் இருக்கப் போகுது. எங்களுக்கு எல்லாம் எதுவும் நல்லது நடக்குமானு தெரியலை."

சென்னை மக்கள்

எஸ்.கே.அன்வர் பாஷா

``அம்மா இருந்தவரைக்கும் எல்லாமே சரியா இருந்துது . இப்போ எதுவுமே சரி இல்ல. பெட்ரோல், காஸ் விலை எல்லாமே ஏறி போச்சு. இந்த ஆட்சில சாதாரண மக்கள் வாழ வழியே இல்லாம இருக்கு. மூணு வருஷம் அம்மா ஆண்ட வர மட்டும்தான் எல்லாம் நல்லா இருந்துது! இப்போ எல்லாமே ரௌடிங்க பந்தா, மது கடையும் ஒழிக்கல, எதுவும் செய்யல. பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல."

பிரவீன், மாணவர்.

``இந்த ஆட்சி நிறைவான ஆட்சின்னு தான் சொல்லணும். டிரைனேஜ் எல்லாம் நல்லா க்ளீன் பண்றாங்க, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் அறிவிச்சதெல்லாம் ரொம்ப நல்ல திட்டம். இந்த எக்ஸாம் மட்டும் ஆன்லைன் ஆகிட்டா ரொம்ப சந்தோசமா இருக்கும்."

பொதுமக்கள்
பொதுமக்கள்

ஜெய்சங்கர் - அக்கௌன்டன்ட்

``போன ஆட்சியை ஒப்பிட்டு பார்த்தால் இந்த ஆட்சி நல்லாவே இருக்கு. இப்போதைக்கு ஒரு வருடம் தான் முடிஞ்சிருக்கு. போக போக பார்த்தால்தான் தெரியும் எப்படி நிறைவடைகிறது என்று."

தேவிகா -ரயில்வே ஊழியர்

``ஆட்சிக்கு வந்த உடனே 4,000 ரூபாய் வழங்கியது மிகவும் உபயோகமாக இருந்தது. ஊரடங்கு முடிந்ததும் பல பிரச்னைகளை தீர்க்க அந்த 4,000 ரூபாய் உதவியா இருந்துது. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி. முதல்வரின் நற்பணிகள் தொடரணும்."

முருகன் - ஆட்டோ ஓட்டுநர்

``ஸ்டாலின்தான் இரண்டாவது எம்.ஜி.ஆர், யாராலயும் அசைக்க முடியாது. இனி வேற யாருமே முதல்வராக வாய்ப்பே இல்ல. ஒரு வருஷம் ரொம்ப சிறப்பாக ஆட்சி செஞ்சுருக்கு தி.மு.க."

சேகர் - ஆட்டோ ஓட்டுநர்

``எல்லாமே நல்லா செஞ்சிருக்காரு , ஆனா ஆட்டோ காரங்களுக்கு மீட்டர் விலை ஏத்தி குடுத்தா இன்னும் நல்லா இருக்கும். மத்தபடி நன்றாக செயல்படும் ஆட்சிதான் இது."

ஆட்டோ ஓட்டுநர்

```இவங்க ஆட்சியில் செயல்படுத்தியிருக்கும் திட்டங்கள் எல்லாம் நல்ல திட்டங்கள்தான். ஆனால், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அறிமுகப்படுத்திய பிறகு, எங்கள் வருமானம் கடுமையா பாதிச்சிருக்கு. பக்கத்துல இருக்கும் இடங்களுக்கு போக வர பெண்கள் 15-20 ரூபாய் கொடுத்து பயணிப்பாங்க. அந்த வருமானம் முற்றிலும் தடைபட்டிருக்கு. அது நல்ல திட்டம்தான், ஆனா எங்களுக்கும் பாதிக்காத மாதிரி ஏதாவது மாற்று ஆலோசனை வழங்கினா நல்லா இருக்கும்."

அம்மு - பழ கடை

``லாக்டௌன்ல அரிசி, பருப்பு எல்லாம் குடுத்து உதவிருக்காரு. அது தக்க நேரத்துல செஞ்ச ரொம்ப பெரிய உதவி. கண்டிப்பா இது ஒரு நல்லாட்சி தான்."

முரளி - டீ கடை

``இது சிறப்பான ஆட்சி. மக்கள் போற்றும் அளவு இருக்கு. இது ஏழைகளுக்கு பயன்படும் ஆட்சி. இது ஒரு வருட சாதனை எல்லாம் இல்ல, ஐந்து வருடம் செய்ய வேண்டியதை ஒரு வருடத்துல சாதிச்சிருக்காங்க."

பொதுமக்கள்
பொதுமக்கள்

பவானி

``பால் விலை குறைப்பு, இலவச பஸ் இப்படி சொன்ன எல்லாத்தையுமே செஞ்சாங்க. என்ன ஒன்னு, இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வுதான் எல்லாருடைய பேசுபொருளா இருக்கு. அத மட்டும் கம்மி பண்ணினா நல்ல இருக்கும்."

இலக்கியா-மாணவி

``குடும்பத் தலைவிகளுக்கு கொடுப்பதாகக் கூறிய மானியம் இன்னும் கொடுக்கவில்லை. மக்கள் தரப்பு எதிர்பார்ப்பு அதிகமாவே இருக்கு, அதனால இன்னும் மேம்படுத்தணும்."

ஹரிஹரன் - மாணவர்

``போன ஆட்சில எடப்பாடி அய்யா ஆல் பாஸ் ஆக்கிவிட்டாரு. இந்த ஆட்சிலயும் அது நடந்தா ரொம்ப நல்லா இருக்கும். ஒரு முழு செமஸ்டர் படிக்க வேண்டியத வெறும் மூணு மாசத்துக்குள்ள படிக்க ரொம்ப கடினமா இருக்கு. ஆன்லைன் எக்ஸாம் இல்லனா ஆல்பாஸ் ஆக்கினா நல்லா இருக்கும்."

தஞ்சை

நூர்ஜஹான்

``தஞ்சாவூர் கணபதி நகர்ல கடை வச்சு நடத்திட்டு இருக்கேன். ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னால நிறைய அறிவிப்புகள் சொல்லிருந்தாங்க. பெண்களுக்கு மாதாமாதம் ரேஷன் அட்டை மூலமா பணம் தருவதா சொல்லிருந்தாங்க. இதுவரைக்கும் அந்த பணம் எங்களுக்கு வந்து சேரல, வேலை வாய்ப்ப உறுதி செய்யுறதாவும் சொல்லிருந்தாங்க. என் இரண்டு மகன்களையும் நல்லா படிக்க வச்சேன். இரண்டு பேருமே பட்டப்படிப்பு முடிச்சிட்டாங்க. ஆனா, தகுதியான வேல இல்ல படிச்ச படிப்புக்கு வேல கிடைக்காம சேல்ஸ் மேனா வேல செய்யுறாங்க. விலை வாசி ஏற்றத்தால எங்களப் போல நிறைய எளியமக்கள் பாதிக்கப்டுறாங்க. இதையெல்லாம் விட முக்கியமா ஒன்னு சொல்லனும்... எப்ப எங்களுக்கு இலவசமா பேருந்துல பயணம் செய்யலாம்ன்னு அறிவிப்பு வந்திச்சோ, அதிலிருந்து எந்த பஸ் டிரைவரும், கண்டெக்டரும் எங்கள மதிக்கிறதே இல்லங்க. `காசு கொடுக்காம தான வர்றீங்க... லேட்டா வந்தா ஒன்னும் தப்பு இல்ல'ன்னு பஸ்ஸ நிறுத்தாம போறாங்க. கூட்டமா பெண்கள் நிக்குற இடத்துல பஸ்ஸே நிறுத்துறது இல்ல.

இதை கேக்கபோனா தகாத வார்த்தையில திட்டுறாங்க. பத்து ரூவா டிக்கெட்ட ஐஞ்சு ரூவா ஆக்கிருந்தாங்கன்னா கூட நாங்க மரியாதையோட பஸ்ல போயிருப்போம்ங்க. ரொம்ப வருத்தமா இருக்கு. இப்படிதான் எல்லா பஸ்லையும் செய்யுறாங்க."

கிரிதரன்
கிரிதரன்

கிரிதரன்

``முனிசிபல் காலனியில தையல்கடை வச்சிருக்கேன். நாங்க போனவருஷம் கூட்டுறவு வங்கியில நகைக்கடன் வாங்கிருந்தோம். அத முழுமையா தள்ளுபடி செய்யுறதா சொல்லிருந்தாங்க. ஆனா எங்க கடன் முழுசா தள்ளுபடி ஆகலை. பாதிதான்னு சொல்விட்டாங்க அதை செய்யுறதுக்கே ஆபீஸ்ல அவ்வளவு நாள் அலையவிட்டாங்க. சும்மா பெர்த் சர்டிபிகேட் வாங்குறதுக்காக கவர்மெண்ட் ஆபீஸ் போனாலே பயமா இருக்கு. எத்தன முறை இழுத்தடிக்குறாங்க. இன்னும் சில இடங்கள்ல ஐநூறு குடுங்க, ஆயிரம் குடுங்கன்னு கேட்குறாங்க. நாங்க சண்ட போட்டு தான் எங்களயே காப்பாத்திக்க வேண்டியிருக்கு."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism