Published:Updated:

ஒருபக்கம் மேக்கேதாட்டு.. மறுபக்கம் தென்பெண்ணை! - அடங்காத கர்நாடகா; தடுக்குமா தமிழக அரசு?

மேக்கேதாட்டு
மேக்கேதாட்டு

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு முயற்சி, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய அணை என தமிழகத்தின் அனைத்து நீர் ஆதாரங்களையும் தடுக்கும் நடவடிக்கையை கர்நாடக அரசு எடுத்துவருகிறது. இதற்கு எதிராக, தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?

கர்நாடக மாநிலம், கனகபுறா மாவட்டத்திலுள்ள மேக்கேதாட்டு பகுதியில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. கர்நாடக அரசின் அணைகட்டும் முயற்சிக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு ``மேக்கேதாட்டு அணை தமிழ்நாடு விவசாயிகளைக் கண்டிப்பாக பாதிக்கும். பெங்களூருவின் சிறிதளவு குடிநீர்த் தேவைக்காக, தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்க்கையை அழிப்பது நியாயம் இல்லை. மேக்கேதாட்டு அணையைக் கட்டக் கூடாது'' என பதிலளித்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கர்நாடகாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதேபோல கர்நாடக அரசியல் தலைவர்களும் கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் திரளத் தொடங்கியுள்ளனர்.

ஸ்டாலின் - எடியூரப்பா
ஸ்டாலின் - எடியூரப்பா

மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களுக்குப் பாசன ஆதாரமாக விளங்கும் மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணையைக் கட்டியிருப்பதும் தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஒருபக்கம் மேக்கேதாட்டு, மறுபக்கம் தென்பெண்ணை என தமிழகத்தின் அனைத்து நீர் ஆதாரத்தையும் தடுக்கும் நடவடிக்கையை கர்நாடக அரசு எடுத்துவருகிறது. இதற்கு எதிராகத் தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?

மார்க்கண்டேய நதி அணை விவகாரம்: `மத்திய அரசுதான் காரணம்!’ - மோதிக்கொள்ளும் பா.ம.க., பா.ஜ.க!

கர்நாடகா உடனான நதி நீர்ப்பங்கீட்டுப் பிரச்னையில் தமிழக அரசின் நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் எனத் தமிழக பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் கேட்டோம். ``உரிமையாக, சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு மக்களுக்குக் கிடைக்க வேண்டியது எதுவாக இருந்தாலும் அது கிடைத்தே ஆக வேண்டும். அதற்கு எப்போதும் தமிழக பா.ஜ.க உறுதுணையாக இருக்கும். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தமிழ்மணி மேக்கேதாட்டு தண்ணீரை தமிழ்நாடு கோருவதற்கு எந்தச் சட்ட உரிமையும் இல்லை எனக் கூறியிருக்கிறார். வேறு மாநிலத்துடன் மோதுவது, பிற மாநில பா.ஜ.க-வினர் சொல்லும் கருத்துக்கு இங்கிருக்கும் பா.ஜ.க பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் பேசுவது பிரச்னையின் தீவிரத்தை திசைதிருப்பும் முயற்சி. நமக்குத் தண்ணீர் வேண்டும். அது கிடைக்கவில்லையென்றால் நிச்சயம் போராட வேண்டும். உரிமை கோர வேண்டும். கர்நாடகாவுடான நீர்ப் பங்கீடு அணையில் நமக்கேயானது என்று இருக்குமேயானால் அதைக் கேட்டுப் பெற்றே ஆக வேண்டும். அப்படிக் கேட்டுப் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஆய்வுக்குழுவை அமைக்க வேண்டும். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு மேலோட்டமாக இதைப் பற்றிப் பேசுவது முழுக்க முழுக்க அரசியலாக மட்டுமே இருக்கும். இப்படியெல்லாம் சொல்வதைக் கேட்காமல் கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்குக் கிடைப்பதை பா.ஜ.க தடுக்கிறது. தமிழ் விரோதி பா.ஜ.க என்றெல்லாம் அரசியல் செய்தால் அதற்கு நாங்கள் ஆட்கள் இல்லை. மேக்கேதாட்டுவில் நமக்கு எந்த அளவுக்கு நீர்ப் பகிர்மானம் இருக்கிறது என்பதை இதுவரை தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு அரசுகளும் உறுதிசெய்யத் தவறிவிட்டன

எஸ்.ஆர்.சேகர்
எஸ்.ஆர்.சேகர்

நீட் தேர்வு தடை, பெட்ரோல், டீசல் மானியம், சிலிண்டர் மானியம் எனத் தேர்தல் அறிக்கையில் நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டார்கள். ஆனால், அவற்றில் எதையும் இவர்களால் தற்போது நிறைவேற்ற முடியவில்லை. தங்களது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் அதை திசைதிருப்பி மக்களைக் குழப்பத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு மேக்கேதாட்டு, தென்பெண்ணை அணைப் பிரச்னை உதவி செய்துகொண்டிருக்கிறது. திடீரென மேக்கேதாட்டு பிரச்னையைப் பேசுகிறது. தி.மு.க பேசுகிறது என்பதற்காகவே இந்தப் பிரச்னையைச் சந்தேகத்துக்கு உள்ளாக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், தி.மு.க உண்மையைச் சொன்னதே கிடையாது. முதலில் நமக்கு மேக்கேதாட்டுவில் இருக்கும் உரிமை குறித்துத் தெளிவடைந்த பின்னர்தான் போராட்டங்கள், வழக்குகள் என அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.

தென்பெண்ணை ஆற்றில் 162 அடி உயர அணை, அத்துமீறிய கர்நாடகா; அதிர்ச்சியில் தமிழகம்!

தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்குக் காங்கிரஸின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு இருக்கும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம். ``கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகியவற்றுக்கு அடுத்து 'பிலிகுண்டுலு' என்ற இடம்தான் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா அளிக்கும் நீரின் அளவை அளவிடும் இடம். இவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில். 9,000 கோடி ரூபாய் செலவில் 70 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கக்கூடிய அளவில் மேகதாது அணை கட்டப்படுமானால், தமிழ்நாட்டுக்கு வரும் நீரின் அளவு குறைவதோடு, வளர்ச்சியும் வெகுவாக பாதிக்கப்படும். காவிரிப் படுகை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதனால்தான் அதைத் தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது. பேச்சுவார்த்தையின் மூலம் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதால்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்து போராடிவருகிறோம். வழக்கைத் தீவிரமாக நடத்துவதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருக்கிறது. வழக்கு நிலுவையில் இருக்கும்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அணை கட்டுவதற்கு நிச்சயமாக அனுமதி அளிக்கக் கூடாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நமக்குத் தர வேண்டிய நீரைத் தந்துதான் ஆக வேண்டும். அதற்கு எதிராக எந்த நடவடிக்கையை எடுத்தாலும் அது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தமிழக அரசு நிச்சயம் தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கோபண்ணா
கோபண்ணா

கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவிட்டார். ஆனால், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பிரதமரைச் சந்தித்துவிட்டு, காவிரி நீர்ப்பிரச்னையில் தமிழக அரசுதான் தவறு இழைத்துள்ளது என்பதுபோலப் பேசியிருக்கிறார். தமிழக பா.ஜ.க தலைவர் கர்நாடகாவுக்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவும் பேசுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது” எனப் பிற மாநிலத்தைச் சேர்ந்த தன் கட்சியின் தலைவர் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் எனவும் உத்தரவாதம் அளித்தார்.

தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியிடம் கேட்டோம். ``மேக்கேதாட்டு பிரச்னையை முதலில் எழுப்பியது கர்நாடகம்தான். எனவே, நாங்கள் பிரச்னையை திசைதிருப்ப தற்போது மேக்கேதாட்டு அணை விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளோம் என்று சொல்வது அர்த்தமற்ற வாதம். ஒரு நதியில் அணைகட்ட வேண்டுமென்றால் அந்த நதியால் பலனடையும் அனைத்து மாநிலங்களும் கலந்து ஆலோசித்த பிறகுதான் அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடக அரசு அணைகட்ட போகிறோம் என்று சொன்னதுமே தமிழ்நாடு அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமரைச் சந்தித்தபோது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். இவற்றையும் மீறி கர்நாடக மாநில முதல்வர் அணை கட்டுவது தொடர்பாகக் கடிதம் எழுதியபோது ‘இது இரு மாநில உறவைப் பாதிக்கும் முடிவு’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.

Vikatan
கலாநிதி வீராசாமி தி.மு.க எம்பி
கலாநிதி வீராசாமி தி.மு.க எம்பி

காவிரி நதிநீர் மேலாண்மையை ஜல் ஜீவன் சக்தி என்ற அமைச்சகத்தில் இணைத்தற்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் நிர்வாகத்தின் கீழ்தான் இருக்க வேண்டும். ஒன்றிய அரசின் கீழ் சென்றால் அது சுதந்திரமாகச் செயல்பட முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறோம். எல்லா வழிகளிலும் கர்நாடக அரசின் செயலுக்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவித்துத்தான் வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் மூலம்தான் உறுதியான, வலுவான முடிவு எட்டப்படும் என்பதால், தொடர்ந்து அங்கே முறையிடுகிறோம். முடிவு எட்டும்வரை தொடர்ந்து சட்டரீதியிலான போராட்டத்தை முன்னெடுப்போம்” எனத் தமிழ்நாடு அரசு செய்யவிருப்பதை தீர்க்கமாக விளக்கிக் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு