Published:Updated:

`முருகன் என்ட்ரி... ராசா எக்ஸிட்?’ - கோவை, நீலகிரி தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக ஸ்கெட்ச்?!

பாஜக | அண்ணாமலை - நட்டா

திமுக-வைக் குடும்பக் கட்சி என்று சொல்லும் விமர்சனம் பழையது என்றாகிவிட்டாலும், ‘முதல் குடும்பத்துக்கான கட்சி...’ என்று பாஜக தேசிய தலைவர் ஆரம்பித்து வைத்திருக்கும் சரவெடிக்கான ரியாக்‌ஷன் தமிழக அரசியல் களத்தில் எப்படி இருக்கும் என்பது வரும் நாள்களில் தெரியும்.

`முருகன் என்ட்ரி... ராசா எக்ஸிட்?’ - கோவை, நீலகிரி தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக ஸ்கெட்ச்?!

திமுக-வைக் குடும்பக் கட்சி என்று சொல்லும் விமர்சனம் பழையது என்றாகிவிட்டாலும், ‘முதல் குடும்பத்துக்கான கட்சி...’ என்று பாஜக தேசிய தலைவர் ஆரம்பித்து வைத்திருக்கும் சரவெடிக்கான ரியாக்‌ஷன் தமிழக அரசியல் களத்தில் எப்படி இருக்கும் என்பது வரும் நாள்களில் தெரியும்.

Published:Updated:
பாஜக | அண்ணாமலை - நட்டா

பா.ஜ.க சார்பில் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கோவை, நீலகிரி தொகுதிகளுக்கான பிரசார பொதுக்கூட்டம் கோவை காரமடைப் பகுதியில் நேற்று (27.12.2022) நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர்களான சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்னன் உள்ளிட்ட நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வுகளுக்கு முன்னதாக, கோவையில் பா.ஜ.க சார்பில் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களுடன் ஜே.பி.நட்டா கலந்துரையாடினார்.

`முருகன் என்ட்ரி... ராசா எக்ஸிட்?’ - கோவை, நீலகிரி தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக ஸ்கெட்ச்?!

அதன் பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "நீலகிரி, கோவையிலிருந்து பாஜக நாடாளுமன்றத்துக்குச் செல்வது புதிதல்ல. இந்தியாவில் பெரு நகரங்கள் அனைத்தும் வளர்கின்றன. ஆனால் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் வளரவில்லை. கோவை, நீலகிரிக்கு பாஜக வாரிக்கொடுக்கிறது. ஆனால், அவை எதுவும் மக்களுக்குக் கிடைப்பதில்லை. நீலகிரியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் 2ஜி வழக்கில் குற்றவாளியாக இருந்தவர். டான்டீ நிறுவனத்தை பாஜக தலையிட்டுத்தான் காப்பாற்றியது. மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் மக்களுக்கு முழுமையாகக் கிடைப்பது இல்லை. 2024-ல் அதைச் சரிசெய்ய வேண்டும்.

ஜே.பி.நட்டா அகில இந்திய அளவிலான நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை இந்த மண்ணிலிருந்து தொடங்கியிருக்கிறார். திமுக ஆட்சியில் கொங்குப் பகுதி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசி வழங்குவதில்கூட கொங்கு மண்டலத்துக்கு பாரபட்சம் காட்டியது திமுக. கொங்குப் பகுதியில் பாஜக அதிக கவனம் செலுத்துகிறது. திமுக ஆட்சி பட்டத்து இளவரசருக்கான ஆட்சி. பொங்கல் தொகுப்பில் வெறும் அரிசியும் சர்க்கரையும் கொடுக்கிறார்கள். கரும்பு, வெல்லம் கொடுக்கவில்லை. இதை நம்பி கரும்பு விளைவித்த விவசாயிகள் தவிக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற திமுக தற்போது ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்குகிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

`நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமது’ என்பது திமுக-வின் கனவு. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக 400 எம்.பி-க்களுடன் பாஜக ஆட்சி அமைக்கும். இரண்டு முறை தமிழகம் தவறு செய்துவிட்டது. இந்த முறை தமிழ்நாட்டிலிருந்து 25 எம்.பி-க்கள் பாஜக-வுக்கு வருவார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் பயணத்தை ஜே.பி.நட்டா இங்கு தொடங்கியிருக்கிறார். நீலகிரி, கோவை என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக வெல்ல வேண்டும்” என்று பேசினார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதன் அடிப்படையில் காசி தமிழ்ச் சங்கமத்தை பிரதமர் மோடி ஒரு மாத காலம் நடத்திக் காட்டினார். பிரதமர் ஐ.நா சபையில் கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்...’ என்பதைக் கூறி தமிழுக்குப் பெருமை சேர்த்தார். தமிழுக்குப் பெருமை சேர்க்க பாஜக தொடர்ந்து வேலை செய்துவருகிறது” என்றார்.

எல்.முருகன்
எல்.முருகன்

அதையடுத்து உரையாற்றத் தொடங்கிய ஜே.பி.நட்டா, “கொரோனா வைரஸ், உக்ரைன் போருக்குப் பிறகு சீனா உள்ளிட்ட உலக நாடுகள் பொருளாதாரத்தைச் சீர்படுத்தத் திணறிக்கொண்டிருக்கின்றன. மோடி தலைமையின் கீழ் நம் பொருளாதாரம் முன்னேற்றமடைந்துவருகிறது. உலக அளவில் பல்வேறு துறைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. நாட்டில் உள்ள அனைவரும் உணவு உட்கொண்டுதான் உறங்க வேண்டும் என்பதற்காக மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். இது நரேந்திர மோடியின் அரசு.

இதில் பழங்குடிப் பெண் ஜனாதிபதி ஆகியிருக்கிறார். பட்டியலினத்தைச் சேர்ந்த பலர் மத்திய அமைச்சராகியிருக்கின்றனர். இப்படிப் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், இளைஞர்களின் வளர்ச்சிக்காகச் செயல்படும் அரசு இது. தமிழகத்தை ஆளும் தி.மு.க என்பது ஒரு மாநிலக் கட்சி அல்ல. அது ஒரு குடும்பத்துக்கு மட்டுமான கட்சி. மாநிலத்துக்கான நலன்களைப் பற்றிக் கவலைப்படுவதைவிட குடும்பத்துக்கான நலன்களைப் பற்ற அந்தக் கட்சி அதிகம் கவலைப்படும். குடும்பக் கட்சி என்பதிலும் அது முதல் குடும்பத்துக்கான கட்சி மட்டுமே. ஸ்டாலினுடைய சகோதரர்களுக்கோ, சகோதரிகளுக்கோ அங்கே இடமில்லை. ஒரே ஒரு குடும்பத்துக்கான கட்சியாக மட்டுமே திமுக செயல்படுகிறது” என்று பேசி, தமிழக அரசியலில் புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.

அதாவது, “நட்டா பேசியதன் பின்னணியில் அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் ஸ்டாலின் குடும்பத்தின் மீது வருத்தத்திலும் கோபத்திலும் இருப்பதை உணர்ந்துதான் ஜே.பி.நட்டா கோபாலபுரம் குடும்பத்துக்குள்ளையே கல் வீசியிருக்கிறார்” என்கிறார்கள் தமிழக அரசியலை உற்றுநோக்குபவர்கள்.

மேலும், ``அண்ணாமலை, `தமிழகத்தில் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாவார்’ என்று தொடர்ந்து சொல்லிவருகிறார். அங்கே உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதையும், இங்கே உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதையும் அண்ணாமலை ஒப்பிட்டுவருகிறார். இந்தப் பின்னணியில் கலைஞரின் குடும்ப வாரிசுகளான அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரைத் தாண்டி ஸ்டாலின், அவரின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகிய அவரின் முதல் குடும்பம் மட்டுமே செல்வாக்கோடு இருப்பதை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் நட்டா. திமுக-வைக் குடும்பக் கட்சி என்று சொல்லும் விமர்சனம் பழையது என்றாகிவிட்டாலும், ‘முதல் குடும்பத்துக்கான கட்சி...’ என்று பாஜக தேசியத் தலைவர் ஆரம்பித்து வைத்திருக்கும் சரவெடிக்கான ரியாக்‌ஷன் தமிழக அரசியல் களத்தில் எப்படி இருக்கும் என்பது வரும் நாள்களில் தெரியும்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

எம்.பி ராசா
எம்.பி ராசா

இது ஒரு புறம் இருந்தாலும், ஜே.பி.நட்டா வருகை-பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் மேடையான கோவை குறித்து பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். ``தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் வளர்ச்சி மற்றும் கிளை, பூத் என கீழ் மட்ட அளவில் இப்போதுதான் கத்துக்குட்டியாக இருக்கிறோம். எனவே தி.மு.க., அ.தி.மு.க ஆறு மாதங்களில் தங்களது தேர்தல் வேலைகளை ஆரம்பித்தாலும் அவர்களுக்கான அறுவடை இருக்கும். ஆனால், எங்கள் நிலை அப்படி இல்லை. எனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கான காலம் ஒரு வருடத்துக்கு மேல் இருந்தாலும், இப்போதே வேலைகளை ஆரம்பிக்கவேண்டிய சூழல் எங்களுக்கு இருக்கிறது. எனவே, ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்பதுபோல் ஆகிவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் ஆரம்பிக்கும் வேலை வெற்றி பெறும் தொகுதிகளிலிருந்து ஆரம்பிக்கலாம் என்பதற்காக எங்கள் கட்சி இப்போது வலுவாக இருக்கக்கூடிய நீலகிரி, கோவை பகுதிகளிலிருந்து பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

அண்ணாமலை அமெரிக்காவிலிருந்து வந்தபோதே கோவையில் பா.ஜ.க-வுக்கான ஐடி-விங் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டது. அதிமுக-வுடன் கூட்டணிக்குப் போனாலும், போகவில்லை என்றாலும் இந்த இரு தொகுதிகளில் பா.ஜ.க நிற்பது உறுதி. கடந்த காலங்களிலும் இதுதான் நடந்திருக்கிறது. இப்போதைக்கு நீலகிரியில் எல்.முருகன் நிற்பது உறுதியாகியிருக்கிறது. கோவையைப் பொறுத்தவரை அண்ணாமலையா அல்லது வானதி சீனிவாசன் ஆதரவாளரா என்பது மட்டும் போய்க்கொண்டிருக்கிறது” என்கிறார்கள்.

`முருகன் என்ட்ரி... ராசா எக்ஸிட்?’ - கோவை, நீலகிரி தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக ஸ்கெட்ச்?!

இதற்கிடையே, ``நீலகிரி தொகுதியிலிருந்து சிதம்பரம் தொகுதிக்கு மாறுகிறார் ஆ.ராசா” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இது குறித்து மேலும் கூறும்போது, “இப்போது சிதம்பரம் தொகுதியிலிருக்கும் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவனை திருவள்ளூருக்கு மாறிக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறதாம்” என்கிறார்கள் விவரம் அறிந்த உடன்பிறப்புகள்.