Published:Updated:

புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்பு முதல் ரங்கசாமி பதவியேற்பு வரை! - பா.ஜ.க-வின் ரோல் என்ன?

பிரதமர் மோடியுடன் ரங்கசாமி

முதல்வர் பதவி பறிக்கப்பட்டதற்காக காங்கிரஸிலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய ரங்கசாமியையும், அதே முதல்வர் பதவிக்காகக் கட்சி மாறிய நமச்சிவாயத்தையும் ஒரே அணியில் நிறுத்தி தனது ஆட்டத்தைத் தொடங்கியது பா.ஜ.க.

புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்பு முதல் ரங்கசாமி பதவியேற்பு வரை! - பா.ஜ.க-வின் ரோல் என்ன?

முதல்வர் பதவி பறிக்கப்பட்டதற்காக காங்கிரஸிலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய ரங்கசாமியையும், அதே முதல்வர் பதவிக்காகக் கட்சி மாறிய நமச்சிவாயத்தையும் ஒரே அணியில் நிறுத்தி தனது ஆட்டத்தைத் தொடங்கியது பா.ஜ.க.

Published:Updated:
பிரதமர் மோடியுடன் ரங்கசாமி

காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2006-ல் இரண்டாவது முறை முதல்வர் பதவியில் அமர்ந்த ரங்கசாமி, அரசுப் பணிகள் நியமனம், ஒப்பந்தப் பணிகள் என எந்த விவகாரத்திலும் அமைச்சர்களைக் கலந்து ஆலோசிக்காமல் ஒன்மேன் ஆர்மியாக வலம்வரத் தொடங்கினார். குறிப்பாக, அரசுப் பணிகள் அனைத்தையும் தனது சொந்தத் தொகுதிகளான தட்டாஞ்சாவடி, இந்திரா நகர், கதிர்காமம் தொகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு டோக்கன் முறையில் வாரி இறைத்தார். அதனால் ரங்கசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய அமைச்சர்கள் முதல்வரை மாற்றும்படி கட்சித் தலைமையிடம் புகாரளித்தனர். இந்த விவகாரத்தில் முக்கியமானவர்கள் இரண்டு பேர். ஒருவர், முதல்வர் ரங்கசாமியின் அண்ணன் மருமகனும், தற்போது பா.ஜ.க-வில் ஐக்கியமாகியிருப்பவருமான நமச்சிவாயம்.

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

மற்றொருவர் தற்போது ரங்கசாமியிடம் சரணடைந்திருக்கும் மல்லாடி கிருஷ்ணாராவ். அப்போது ரங்கசாமியை அழைத்த சோனியா, அமைச்சர்களைச் சமாதானப்படுத்தும்படி கூறியனுப்பினார். அதற்குச் சரியென்று தலையசைத்துவிட்டு ரங்கசாமி புதுச்சேரிக்குத் திரும்பியபோது, சொல்லி வைத்ததுபோல் அனைத்து அமைச்சர்களும் மாநிலத்துக்கு எதிராக இன்பச் சுற்றுலாவுக்குச் சென்றுவிட்டனர். வேறு வழியின்றி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி, அமைதியாக இருந்து 2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல்வர் பதவி பறிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி 2011-ல் ஆட்சியைப் பிடித்தார். அப்போது முதல் என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்துவருகிறது பா.ஜ.க. புதுச்சேரியில் அடித்தளமும், வாக்குவங்கியும் இல்லாத பா.ஜ.க., 2016 தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட்டைப் பறிகொடுத்தது. இந்நிலையில் 2021 தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் போட்டியிடுவதுடன், கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவுக்கு தலா ஆறு இடங்களை ஒதுக்கலாம் என்பதுதான் முதலில் ரங்கசாமி போட்டு வைத்திருந்த கணக்கு.

ரங்கசாமி
ரங்கசாமி

ஆனால் புதுச்சேரியில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று முனைப்புடன் இருந்த பா.ஜ.க., தொகுதிப் பங்கீட்டில் அப்போது ஆர்வம் காட்டவில்லை. மாறாக, தனித்து நின்றாலும் வெற்றிபெறும் அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்ற தனிநபர்கள் தங்களின் கட்சியில் இருக்க வேண்டும் என்று நினைத்தது பா.ஜ.க தலைமை. உடனே களத்தில் இறங்கிய அக்கட்சி அமலாக்கத்துறை ஆயுதத்தால் காங்கிரஸ் கட்சியில் இருந்த அமைச்சர்களையும், எம்.எல்.ஏ-க்களையும் அடுத்தடுத்த விக்கெட்டில் வீழ்த்தி தன் பக்கம் இழுத்தது. மாநிலத்தின் நலனைவிட தங்கள் சொத்துகளைக் காப்பாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்று நினைத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும், காங்கிரஸ் துண்டை பரண்மீது பத்திரப்படுத்திவிட்டு, பா.ஜ.க துண்டை தோளில் அணிந்தார்கள்.

காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை, ’நீங்கள்தான் முதல்வர்’ என்ற தூண்டிலை வீசி அவரைத் தங்கள் பக்கம் இழுத்தது பா.ஜ.க. முதல்வர் பதவிக்காகத் தனிக்கட்சி தொடங்கிய ரங்கசாமியையும், அதே முதல்வர் பதவிக்காகக் கட்சி மாறிய நமச்சிவாயத்தையும் ஒரே அணியில் நிறுத்தியது பா.ஜ.க. நமது தலைமையில்தான் ஆட்சி, நம்மை மீறி எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையில் இருந்த ரங்கசாமி, தேர்தல் பிரசார கூட்டத்துக்காக புதுச்சேரிக்கு வந்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ’புதுச்சேரியில் பா.ஜ.க 23 தொகுதிகளில் வெற்றிபெறும்” என்று பேசியதால் குழப்பமடைந்தார்.

புதுச்சேரி அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஐந்தில் ஒரு பகுதி சுயேச்சை வேட்பாளர்கள் தேசியக் கட்சிகளை வீழ்த்தி வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள்.

அதையடுத்து காரைக்கால் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “புதுச்சேரியில் பா.ஜ.க தலைமையில் ஆட்சி அமையும்” என்று பேசியதில் ரங்கசாமி உஷ்ணமானாலும் வழக்கம்போல அமைதியாகவே இருந்தார். ”ஆனானப்பட்ட ஜெயலலிதாவுக்கே செக் வைத்தவர் ரங்கசாமி. கண்டிப்பாக அவர் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க மாட்டார். தவிர இவ்வளவு ரிஸ்க் எடுத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து, ஆட்சியைப் பிடித்து ரங்கசாமியை ஏன் முதல்வராக்க வேண்டும் ? நம் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயத்தை முதல்வராக்கலாம்” என்று திட்டமிட்ட பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரத்தையும் தங்கள் பக்கம் இழுத்தது.

அதன்பிறகு சாவகாசமாக 15 தொகுதிகள் வேண்டும் என்று ரங்கசாமியின் முன்பு பேச்சுவார்த்தைக்கு அமர்ந்தது பா.ஜ.க. அதற்கு முதலில் மறுத்த ரங்கசாமி, ஒருகட்டத்தில் 16 தொகுதிகளுக்கு இறங்கி வந்ததுடன், மீதமுள்ள 14 தொகுதிகளை அ.தி.மு.க-வும் நீங்களும் பிரித்துக்கொள்ளுங்கள் என்று நழுவினார். ’உங்களுக்கு நான்கு தொகுதிகள்’ என்று கூறிய பா.ஜ.க-வால் டென்ஷனான அ.தி.மு.க நிர்வாகிகள், ”சிறுபான்மையினர் கணிசமாக இருக்கும் புதுச்சேரியில் உங்களுடன் கூட்டணியில் இருப்பது எங்களுக்குப் பின்னடைவுதான். கடந்த தேர்தலில் ஏழு இடங்களில் தனித்துப் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றிபெற்றோம். ஆனால் அதேபோல தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை. எங்கள் வாக்கு வங்கி 16.8%. ஆனால் வெறும் 2.4% வாக்குவங்கியை வைத்திருக்கும் பா.ஜ.க-வுக்கு 10 தொகுதிகள் என்பது எப்படிச் சரியாகும்?” என்று துடித்துப் போனார்கள். அதன் பின்னர் போராடி ஐந்து தொகுதிகளைப் பெற்று அமைதியானார்கள்.

என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி உடன்பாடு
என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி உடன்பாடு

தேர்தல் பிரசாரத்தின்போது கூடுமானவரை என்.ஆர்.காங்கிரஸும், அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வின் அடையாளங்களைத் தவிர்த்தனர். அதேபோல முதல்வர் வேட்பாளர் யார் என்பதையும் கடைசிவரை சொல்லாமல் மௌனம் காத்த பா.ஜ.க., தேர்தலுக்குப் பிறகு அதிக இடங்களில் வெற்றிபெற்றால் தங்கள் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயத்தை முதல்வராக்கிவிடலாம் என்று கணக்கு போட்டது. ஆனால் 16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் பத்து இடங்களையும், ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்ட பி.ஜே.பி ஆறு இடங்களையும் கைப்பற்றிய நிலையில், போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது அ.தி.மு.க. 40 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபைக்குள் நுழையும் வாய்ப்பைப் பறிகொடுத்தது அக்கட்சி.

அதேபோல புதுச்சேரியில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ், இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியாத அளவுக்குத் தூக்கி வீசப்பட்டது. அதேபோல புதுச்சேரி அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஐந்தில் ஒரு பகுதி சுயேச்சை வேட்பாளர்கள் தேசியக் கட்சிகளை வீழ்த்தி வெற்றிவாகை சூடியிருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளியானதும், ஆட்சியைப் பிடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தது பா.ஜ.க மேலிடம். ``நாம இப்படி எதாவது செய்வோம்னு தெரிஞ்சுதான் அவங்க கட்சிக்காரங்களையே சுயேச்சையா நிக்கவெச்சு ஜெயிக்கவெச்சிருக்காரு. ஒருவேளை நாம் அப்படி மூவ் பண்ணா, காங்கிரஸும் தி.மு.க-வும் அவரை சப்போர்ட் பண்ணிடுவாங்க.

அப்புறம் ஜென்மத்துக்கும் நாம இங்க காலூன்ற முடியாது” என்று புதுச்சேரி பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சொல்ல “கொடுப்பதை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றதுடன் அமைதியானது மேலிடம். அதன் பிறகு ரங்கசாமியைச் சந்தித்த நிர்மல்குமார், ”நமச்சிவாயத்துக்கு முக்கியமான பதவியைக் கொடுக்க வேண்டும். உங்கள் மருமகன்தானே அவர்... துணை முதல்வர் பதவியை அவருக்குத் தரலாமே?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு, “அப்படி ஒரு பதவியே இல்லையே ஜி” என்று நகர்ந்துவிட்டார் ரங்கசாமி. இந்தச் சூழலில்தான் இன்று மதியம் 1:30 மணிக்கு, நான்காவது முறையாகப் பதவியேற்கிறார் ரங்கசாமி!