Published:Updated:

`ரஜினி அரசியல்... டார்கெட் மு.க.ஸ்டாலின்!’ - எடப்பாடி கையிலெடுத்த 5 அஸ்திரங்கள்! #TNElection2021

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி ( எம். விஜயகுமார் )

ரஜினி அரசியல் அறிவிப்பை முதல்வர் எளிதாகக் கடந்துபோகிறார் என்பது மட்டுமல்லாமல், உண்மையான அரசியல் போர் அ.தி.மு.க - தி.மு.க-வுக்கிடையேதான் என்பதையும் வெளிப்படுத்துகிறார்.

ரஜினியின் அரசியல் நுழைவு, எந்தவகையிலும் தங்கள் வாக்குவங்கிக்கு தடங்கலை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் எடப்பாடி - மு.க.ஸ்டாலின் இருவருமே தெளிவாக இருக்கிறார்கள். அந்தவகையில் ரஜினி அரசியல் பிரவேசம் ஏற்படுத்தும் அதிர்வுகளை முறியடிக்க, மு.க.ஸ்டாலின் போட்ட ஐந்து முக்கிய வியூகங்களைக் கடந்த கட்டுரையில் பார்த்தோம். இன்று(19-12-2020) தனது பிரசாரத்தை எடப்பாடியில் தொடங்கிய முதல்வர் பழனிசாமி, தன்னுடைய வியூகங்களை எப்படித் திட்டமிட்டிருக்கிறார் என்பதை அவரோடு நெருக்கமாகப் பயணிக்கும் சீனியர் ரத்தத்தின் ரத்தங்கள் விவரித்தார்கள்.

`மைக்ரோ லெவல் பிளான்; ஆபரேஷன் சேலம்!'- எடுபடுமா தி.மு.க-வின் 5 அஸ்திரங்கள்? #TNElection2021

முகம்காட்டும் பரப்புரை:

``பல்வேறு முட்டல், மோதலுக்குப் பிறகுதான் அ.தி.மு.க-வின் `முதல்வர் வேட்பாளர்' என்ற இடத்தைப் பிடித்தார் எடப்பாடியார். எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு, பவர்ஃபுல் முதல்வராக இருப்பதையெல்லாம் கடந்து, இந்த கொரோனா காலத்திலும் மக்களிடம் தீவிரமாக முகம்காட்டினார். எல்லா இடங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். `மக்களிடம் செல். மக்களைக் கழகமாக்கு' என்றார் அறிஞர் அண்ணா. அதேபாணியில், தொண்டர்களைத் தன் பக்கம் அணியமாக்கினார். அது, பல தர்மயுத்தங்களையும் மீறி அவருக்கு 'முதல்வர் வேட்பாளர்' என்கிற வாய்ப்பை வழங்கியது. இதோ ரஜினி என்கிற புதிய யுத்தம் வருவதால், இதை முறியடிக்கவும் முதலில் அவர் கையில் எடுத்திருப்பது `முகம்காட்டும் பரப்புரை.’ தேர்தலுக்குள் தமிழ்நாட்டின் அத்தனை ஊர்களிலும் பயணித்திருக்க வேண்டும். `மக்கள் எளிதில் சந்திக்கும் முதல்வர்’ என்கிற பெயரை வலுப்படுத்த வேண்டும். இந்த இமேஜ் மக்களிடம் வாக்குகளாக மாறும் எனக் கருதுகிறோம். இனி விவசாயி பழனிசாமியாக பல இடங்களுக்கு முதல்வர் செல்வதும், வழியில் இறங்கி சாலையோரம் நிற்கும் மக்களைச் சந்தித்துப் பேசுவதும்... என இப்படியான காட்சிகளை நீங்கள் அதிகமாகவே பார்ப்பீர்கள்.

அதிரடியான திட்டங்கள் :

நிவர் புயல் நேரத்தில் உடனடியாக செம்பரம்பாக்கம் ஏரியைப் பார்வையிட்டது, செம்பரம்பாக்கம் ஏரி நீர்வழித்தடங்களின் கரையோரம் இருக்கும் மக்களை முதல்வர் சந்தித்தது... புயலுக்கு அடுத்த நாளே, கடலூருக்குப் பயணித்து, அங்கே பார்வையிட்டது என இப்படியான இயற்கைப் பேரிடர் நேரங்களிலும் சூறாவளியாகச் சுற்றி மக்களைச் சந்திப்பது... இதன் மூலம் பேரிடர் காலங்களிலும் மக்களுக்காகக் களத்துக்கு வருகிறார் முதல்வர் என்கிற இமேஜ் உயரும். இதே தன்மையில்தான் மு.க.ஸ்டாலினும் தனது கொளத்தூர் உள்ளிட்ட அருகிலுள்ள தொகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். முதல்வர் மக்களைச் சந்தித்த பிறகுதான், பல தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தங்கள் தொகுதிக்குச் சென்றார்கள் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இத்தோடு நிற்காமல், மீண்டும் கடலூருக்கு இரண்டாம் முறையாகவும் முதல்வர் பயணித்தார். மேலும் ரூ.19,955 கோடியில் புதிய தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் கையெழுத்திட்டிருக்கிறார். இதனால் 26,509 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு என்று தெரிவித்திருக்கிறார். இது போன்ற புதிய திட்டங்கள் குறித்த தீவிர பரப்புரைகள் இனி வருங்காலங்களில் இருக்கும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அடுத்து, எளிய மக்களுக்கான `அம்மா மினி கிளினிக்’ திட்டத்தை முதல்வர் திறந்துவைத்திருக்கிறார் அல்லவா... இது போன்ற பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் இனிவரும் காலங்களில் அதிகரிக்கும். இதன் தொடர்ச்சியாக, வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள சுமார் 35 லட்சம் பெண்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மாதம் ரூ 1,000/- ஊக்கத்தொகை வழங்கவும் திட்டமிட்டிருக்கிறது தலைமை. இப்படியாக எளிய மனிதர்களுக்குப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதன் மூலம் ஏழை, எளிய கிராமப்புற மக்களின் நம்பிக்கையைக் கூடுதலாகப் பெற முடியும். இதன் மூலம் ஏழை, எளிய மக்களின் ரசிகர்களைப் பெற்றிருக்கும் ரஜினி-க்கான ஆதரவையும் முறியடிக்க முடியும் என நம்புகிறார்.

சமுதாய பிரதிநிதித்துவம்:

கடந்த சில நாள்களுக்கு முன்னர் கூட்டணியிலுள்ள பா.ம.க., முதல்வருக்கு ஒரு நெருக்கடியைக் கொடுத்தது. அதாவது, வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் போராட்டத்தை முன்னெடுத்தார். இதையொட்டி, கூட்டணியிலுள்ள கட்சிக்குச் செவிசாய்த்தால், மற்ற சமூகத்தினரும் இதேபோலப் போராட்டங்களை முன்னெடுக்க வாய்ப்புண்டு. அதேநேரத்தில், கணிசமான வாக்குவங்கி உள்ள பா.ம.க-வை நேரடியாகப் புறக்கணித்துவிட முடியாது. அதனால்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து இந்த இடியாப்பச் சிக்கலிலிருந்து லாகவமாக நழுவினார் முதல்வர்.

எடப்பாடி பழனிசாமி- ராமதாஸ்
எடப்பாடி பழனிசாமி- ராமதாஸ்

இதன் மூலம் அனைத்து சாதி, சமுதாய மக்களிடமும் ஸ்கோர் செய்தார் முதல்வர். இனி, அனைவரின் வாக்குகளையும், தன்வயப்படுத்த முடியும். இதோடு நிற்காமல் ஏழு உட்பிரிவுகளை இணைத்து `தேவேந்திர குல வேளாளர்' எனப் பொதுப் பெயரிட்டு அழைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என அறிவித்தார். மறுபுறம் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி-க்கு முழு உருவப்படம் சட்டமன்றத்தில் வைக்கப்படும். தொடர்ந்து ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், மோகன் குமாரமங்கலத்தின் குழு உருவப்படம் வைக்கப்படும் என்றும் அறிவித்தார். ஏற்கெனவே ராமசாமி படையாட்சி-க்கு சட்டமன்றத்தில் உருவப்படம் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பெரும்பான்மைச் சமூகங்களிலுள்ள தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவது, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போன்ற காரணங்களின் மூலம் தம்மை அனைவருக்குமான ஒரு தலைவராக, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு பொது முதல்வராக முன்னிறுத்துகிறார். இதன் மூலம் தன்னுடைய சொந்தச் சமூகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் முதல்வர் என்கிற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

பதிலுக்கு பதில் போராட்டம்:

ரஜினி
ரஜினி

சமீபத்தில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாகச் சொன்ன அதேநாளில், சேலத்தில் தி.மு.க-வின் ஊழலுக்கு எதிராக முழங்கினார் எங்கள் எடப்பாடியார். அதன் பிறகு பதிலுக்கு ஆ.ராசா பேசினார். இதற்கடுத்து அது ஆ.ராசா- ராஜேந்திர பாலாஜி-க்கு இடையிலான போராட்டமாகி, பிறகு ராஜேந்திர பாலாஜி Vs தி.மு.க போராட்டமாக மாறி நீண்டதல்லவா... இதன் மூலம் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்க்கட்சியின் போராட்டங்களுக்கு எதிரான பதிலுக்கு பதிலான போராட்டங்களை முன்னெடுப்பது; அறிக்கையில் தொடங்கி மேடைப் பேச்சு வரை என எல்லா வகையிலும் இறங்கி அடிப்பது... இப்படியான செயல்களின் மூலமாக ரஜினி அரசியல் அறிவிப்பை முதல்வர் எளிதாகக் கடந்துபோகிறார் என்பது மட்டுமல்லாமல், உண்மையான அரசியல் போர் அ.தி.மு.க-தி.மு.க-வுக்கிடையேதான் என்பதையும் வெளிப்படுத்துகிறார்.

டார்கெட் மு.க.ஸ்டாலின் :

அமைச்சர்கள் தொட்டு மா.செ-க்கள், எம்.எல்.ஏ-க்கள் வரை அனைவருமே பேட்டி, விமர்சனம், அறிக்கை என அனைத்தின் மூலமாகவும் தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு எதிரான அரசியலை முன்னெடுக்க வேண்டும். போகப் போக இரண்டாம்கட்ட தலைவர்கள், நாளுக்கொரு அரசியல் தாக்குதல் மூலம் மு.க.ஸ்டாலினுக்குக் குடைச்சல் தர வேண்டும். இதன் காரணமாக இதற்கு பதிலடி கொடுக்கவே தி.மு.க-வின் ஒட்டுமொத்த தலைவர்களும் நேரத்தைச் செலவழிப்பார்கள். இதனால் பிரதானமான எதிர்க்கட்சியைச் சீண்டி கோபமேற்றும் அதேநேரம் தேர்தல் களத்தில் போட்டியென்றால், அது எடப்பாடி-மு.க.ஸ்டாலினுக்கு இடையேதான் என்பதை நிறுவவும் முடியும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதன் மூலம் ரஜினி உள்ளிட்ட மூன்றாவது தலைமையின் மீது மக்களின் கவனம் திரும்பாது. திரும்பினாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. அதனால்தான் ரஜினி-க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதோடு கடந்துபோனார் முதல்வர். மற்றபடி ரஜினியின் அசைவுகளை அமைச்சர் ஜெயக்குமாரைவைத்தே டீல் செய்கிறார் முதல்வர்’’ என்கிறார்கள் மூத்த ர.ர-க்கள் மூச்சு விடாமல்.

``ரஜினி, அஜித்திடம் உண்மை இருக்கிறது!’’ - சர்டிஃபிகேட் கொடுக்கிறார் ராஜேந்திர பாலாஜி!

``இந்த ஒரு விஷயத்தில் மு.க.ஸ்டாலினும், இ.பி.எஸ் பாணியையே பின்பற்றுகிறார். அதாவது, ரஜினியைச் சீண்டாமல் அவரைக் கடந்து போகிறார். அதேநேரம் நாளுக்குநாள் எடப்பாடியைக் கடுமையாக விமர்சித்துப் பேசி, `2021’ தேர்தல் களத்தில் , தமக்கும் எடப்பாடிக்குமிடையில் மட்டுமே போட்டி இருப்பது போலவும் பார்த்துக்கொள்கிறார்'' என்கிறார்கள் அரசியல் களத்தை உற்று நோக்கும் அரசியலாளர்கள். மற்றபடி பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது, மகளிரணி, இளைஞர்கள் பங்களிப்புகொண்ட அனைத்து அணிகளிலும் கூடுதல் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சேர்ப்பு நிகழ்த்த வேண்டும். அதைக்கொண்டு கூடுதல் களப்பணி நிகழ்த்த வேண்டும் என்றும் `அ .தி.மு.க-தி.மு.க' ஆகிய இரு கட்சியின் தலைமையும் உத்தரவிட்டுள்ளன.

ரஜினி, எடப்பாடி பழனிசாமி
ரஜினி, எடப்பாடி பழனிசாமி
`ஆகமொத்தத்தில் மக்களை நோக்கி ரஜினி நகர்வதற்குள், அவரின் அரசியல் அறிவிப்பு, பிரதானமான இரண்டு திராவிடக் கட்சிகளையும் மக்களை நோக்கி நகர்த்தியிருக்கிறது. இந்தக் குளிர்காலத்திலேயே , தேர்தல் போர்க்களத்தின் அனல் வீசத் தொடங்கிவிட்டது’ என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
அடுத்த கட்டுரைக்கு