Published:Updated:

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? - தகவல் அறியும் உரிமைச் சட்டம் சொல்வதென்ன?

ஆறுமுகசாமி
ஆறுமுகசாமி

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்துக்காக கடந்த மூன்றரை வருடங்களில் சுமார் 3 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பது ஆர்.டி.ஐ தகவல் மூலமாக வெளியாகியிருக்கிறது. பரபரப்பைக் கிளப்பியிருக்கும் அந்த ஆர்.டி.ஐ தகவலில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் 2016, டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சைபெற்ற அவர், சிகிச்சை பலனின்றி மறைந்தது சர்ச்சையானது. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக போர்க்கொடி தூக்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிப்ரவரி 2017-ல் அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து தனி அணி அமைத்ததெல்லாம் அந்தக் காலக்கட்டத்தில் அரசியல் சூறாவளியைக் கிளப்பியது. சசிகலா சிறை சென்ற பிறகு, தங்கள் மனமாச்சரியங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆகஸ்ட் 2017-ல் ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையிலான அணிகள் ஒன்றிணைந்தன. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அவர் மரணம் தொடர்பான சர்ச்சைகளை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைப்பது என இரு தலைவர்களும் முடிவெடுத்தனர். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து, செப்டம்பர் 25-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதுவரை 150-க்கும் மேற்பட்டோரை விசாரித்திருக்கும் ஆறுமுகசாமி ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கால் ஏப்ரல் 26, 2019-ல் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, செயல்படாத நிலையில் முடங்கிக்கிடக்கிறது.

ஆறுமுகசாமி
ஆறுமுகசாமி

இந்தச் சூழலில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு, எத்தனை பணியாளர்கள் உள்ளனர், இதுவரை எத்தனை முறை ஆணையத்துக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது, எத்தனை பேரை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி ஆணையம் சம்மன் அனுப்பியிருக்கிறது, ஆணையத்தின் முன்பு முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகியிருக்கிறாரா என்பது உள்ளிட்ட கேள்விகளை சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக ஆணையத்திடம் கேட்டிருக்கிறார். அதற்கு ஆணையம் அளித்திருக்கும் பதில்தான் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. ஆணையத்திடம் காசிமாயன் எழுப்பியிருந்த கேள்விகளையும், அதற்கு ஆணையம் அளித்திருக்கும் பதிலும் என்ன... விரிவாகப் பார்ப்போம்.

Vikatan

ஆணையத்தில் எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள்?

ஆணையத்துக்கு எனச் செயலாளர் ஒருவரை அரசு வழங்கியிருக்கிறது. தலா ஒரு தனிப்பட்ட உதவியாளர், பொதுத்துறையிலிருந்து பிரிவு அதிகாரி, நீதிமன்ற அலுவலர், உதவியாளர், டைப்பிஸ்ட், ஓட்டுநர் ஆகியோர் பணியாற்ற அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், அலுவலக உதவியாளர் மற்றும் தனிப்பட்ட கிளர்க் பொறுப்புகளுக்கு அரசுத் தரப்பிலிருந்து இருவரும், ஒப்பந்த அடிப்படையில் ஆணையமே நியமித்த இருவரும் இருக்கிறார்கள். இதுபோக, தலா ஒரு பியூன், துப்புரவுப் பணியாளர் தினக்கூலி அடிப்படையில் ஆணையத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணியாளர்களில், தற்போது செயலாளர், தனிப்பட்ட உதவியாளர், ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். மற்றவர்களெல்லாம் ஓய்வுபெற்றும், உச்ச நீதிமன்ற தடையால் அவரவர் அரசுப் பணிக்கும் சென்றுவிட்டனர். ஆணையத்தின் அலுவலகம் இயங்குவதற்கு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரும் கலச மஹால் ஒதுக்கப்பட்டுள்ளது. அலுவலகத்துக்காக நான்கு கணினிகளும், பிரின்ட்டர்களும் பொதுத்துறையிலிருந்து வழங்கப்பட்டுள்ளன. ஆணையத்துக்குத் தேவைப்படும் பேனா, பென்சில், ரப்பர், பேப்பர் உள்ளிட்ட எழுது பொருள்கள் அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையிலிருந்து வழங்கப்பட்டுள்ளன.

ஆணையத்துக்கு எத்தனை முறை நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது?

அரசாணைப்படி, அமைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் தன் அறிக்கையை ஆணையம் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், கடந்த மூன்றரை ஆண்டுகளில் பத்து முறை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இடைக்கால அறிக்கையாகக்கூட தன் விசாரணை அறிக்கையை ஆணையம் சமர்ப்பிக்கவில்லை. உச்ச நீதிமன்ற இடைக்காலத் தடையிருப்பதால், தற்போது விசாரணையும் நடைபெறுவதில்லை.

உயிர்பெறும் ஆறுமுகசாமி ஆணையம்; சிக்கலில் ஓ.பி.எஸ் - சசிகலா !| The Imperfect Show 02/07/2021

ஆணையத்துக்குச் செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?

அரசாணைப்படி 2017, செப்டம்பர் 25-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் செயல்பாட்டுக்குவந்தது. செப்டம்பர் 30-ம் தேதி முதல் மார்ச் 31, 2018 வரையிலான காலகட்டத்தில், ஆணையத்தின் அலுவலர்கள் பணிக்காக, சம்பளம் என்கிற வகையில் 23,33,649 ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. அலுவல் பணிக்காக டெலிபோன் கட்டணம், தபால் செலவு, இதரச் செலவுகள் என்கிற வகையில் 60,977 ரூபாய் செலவாகியிருக்கிறது. அடுத்த ஆண்டில் இந்தச் செலவுகள் இரட்டிப்பாகியிருக்கின்றன. ஏப்ரல் 1, 2018 முதல் மார்ச் 31, 2019 வரையிலான காலகட்டத்தில் சம்பளமாக 56,18,680 ரூபாயும், அலுவல் பணிக்காக 12,08,494 ரூபாயும் செலவாகியிருக்கிறது.

அப்போலோ மருத்துவமனை தொடுத்திருந்த வழக்கால், ஏப்ரல் 26, 2019-ல் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தபோதும், ஆணையத்தின் செலவுக் கணக்கு குறையவில்லை. ஏப்ரல் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரை சம்பளமாக 78,60,179 ரூபாயும், அலுவல் பணிக்காக 18,39,557 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. ஆணையம் செயல்படாத ஏப்ரல் 1, 2020 முதல் மார்ச் 31, 2021 காலகட்டத்திலும் பணியாளர்களின் சம்பளமாக 67,11,503 ரூபாயும், அலுவல் பணிக்காக 35,25,032 ரூபாயும் செலவாகியிருக்கிறது. ஆக, கடந்த மூன்றரை ஆண்டுகளில் சம்பளம் என்கிற வகையில் 2,25,24,011 ரூபாயும், அலுவல் பணிக்காக 66,34,060 ரூபாயும் என மொத்தம் 2.91 கோடி ரூபாய் ஆணையத்துக்குச் செலவிடப்பட்டிருப்பதாக ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

Vikatan

ஆணையத்துக்காகச் செலவழிக்கப்பட்ட இந்தத் தொகையில்தான் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆணையத்தின் வாகன ஓட்டுநராக அரசின் சார்பில் டிசம்பர் 20, 2017-ல் நியமிக்கப்பட்டவர், ஜனவரி 31, 2019-ம் தேதி ஓய்வு பெற்றுவிட்டார். அடுத்த சில மாதங்களிலேயே விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடையும் விதித்துவிட்டது. ஆணையத்துக்கு வாகன ஓட்டுநரே இல்லாத 2020-21 காலகட்டத்திலும், ஆயில் மற்றும் எண்ணெய் மாற்றிய செலவாக 82,700 ரூபாய் கணக்கு காட்டியிருக்கிறது ஆணையம். எந்த இன்ஜினுக்கு ஆயில் மாற்றப்பட்டது என்பதுதான் தெரியவில்லை. அதேபோல, அரசு வழக்கறிஞருக்கு வழங்கப்பட்ட செலவாக 30.21 லட்சம் ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. செயல்படாத தருணத்தில் எதற்காக இவ்வளவு தொகை வழங்கப்பட்டது, இதனால் ஆணையத்துக்கு என்ன பயன் என்பது குறித்தும் தெரியவில்லை.

காசிமாயன்
காசிமாயன்

ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் எழுப்பியிருக்கும் காசிமாயனிடம் பேசினோம். ``உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை இருக்கும்போது, ஆணையத்துக்கு ஏன் இவ்வளவு செலவானது என்பதுதான் அடிப்படைக் கேள்வி. மக்கள் வரிப்பணத்தில் ஏறத்தாழ 2.91 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதனால் மக்களுக்கு என்ன பயன் என்பதும் புரியவில்லை. என்னுடைய கேள்வியில், துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் எத்தனை முறை ஆணையத்தின் முன்பு ஆஜராகியிருக்கிறார், இதுவரை எத்தனை பேருக்கு ஆணையத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்கிற கேள்வியை எழுப்பியிருந்தேன். ஆனால், ‘இதற்கு பதிலளிக்கும்பட்சத்தில் அது விசாரணையை பாதிக்கும்’ என்று ஆணையத்திலிருந்து பதில் வந்திருக்கிறது. ஆணையம் செயல்படாத காலகட்டத்திலும், அரசு வழக்கறிஞருக்கு பல லட்சம் ரூபாயைக் கட்டணமாகச் செலுத்தியுள்ளனர். யாருக்கு இவ்வளவு பெரும் தொகை சென்றது, அதனால் அரசுக்கு என்ன நன்மை கிடைத்தது என்பது பற்றியெல்லாம் விசாரிக்க வேண்டும்” என்றார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகளை விசாரிக்கத்தான் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இப்போது அந்த ஆணையமே சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இதை விசாரிக்க மற்றொரு ஆணையத்தை அமைத்து மக்களின் வரிப்பணத்தை கரியாக்காமல் இருந்தால் சரி!

அடுத்த கட்டுரைக்கு