Published:Updated:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்... பலே திட்டங்களுடன் தமிழக எம்.பிக்கள்!

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க் கட்சி எம்.பி-க்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இரு அவைகளிலும் அனல் பறக்கும், புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் திங்கள்கிழமை (செப்.14) தொடங்கவிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று அபாயச் சூழல் நிலவுவதால், அவை நடவடிக்கைகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் இருக்கிறது. கேள்வி நேரத்தை ரத்துசெய்வது என்றும் முடிவுசெய்யப்பட்டது. அதற்கு எதிர்க் கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்பதற்கான உரிமை நசுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து, மத்திய அரசு தன் முடிவிவிலிருந்து சற்று பின்வாங்கியது. `எம்.பி-க்கள் எழுத்து மூலமாகக் கேள்விகள் கேட்கலாம்’ என்றும், `கேள்வி நேரத்தை அரை மணி நேரம் மட்டும் வைத்துக்கொள்ளலாம்’ என்றும் அரசுத் தரப்பில் தற்போது கூறப்பட்டிருக்கிறது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

நாடாளுமன்றக் கூட்டம், கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் தீவிரமடைந்த சூழலில், திட்டமிடப்பட்டதற்கு 12 நாள்களுக்கு முன்னதாகவே கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது. அதன் பிறகு, இப்போதுதான் நாடாளுமன்றம் கூடவிருக்கிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில், பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் சில விஷயங்கள் ஏற்படுத்தியுள்ளன. பிஎம் கேர்ஸ் நிதி, இ.ஐ.ஏ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை - 2020, தேசியக் கல்விக் கொள்கை உட்பட மத்தியிலுள்ள மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மேற்கொண்டிருக்கும் பல நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை எதிர்க் கட்சிகள் முன்வைத்தன. இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கவிருக்கிறது.

`இந்தக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்த மாதிரியான உத்திகளைக் கையாளுவது என்பது குறித்து இந்த வாரத்தில் கூடி எதிர்க் கட்சித் தலைவர்கள் முடிவுசெய்வார்கள்’ என்று செய்திகள் வெளிவந்துள்ளன. சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் செப்டம்பர் 8-ம் தேதி(இன்று) நடைபெறவிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைத்து பல்வேறு விவகாரங்களில் அரசுக்கு எதிராகப் பிரச்னையை காங்கிரஸ் எழுப்பும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

``இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிச்சயமாக அனல் பறக்கும், புயல் வீசும்’’ என்று ஆவேசத்துடன் பேசத் தொடங்கினார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயக்குமார்.

``எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு எடுத்துக்கொண்டிருக்கும் பிரச்னையை நாடாளுமன்றத்தில் தீவிரமாக எழுப்பப்போகிறேன். பா.ஜ.க உட்பட எல்லாக் கட்சிகளின் எம்.பி-க்களும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து பா.ஜ.க எம்.பி-க்கள் பலரைத் தொடர்புகொண்டு பேசினேன். எம்.பி-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு பறித்துக்கொண்டதற்கு எதிராக அவர்கள் கொந்தளிப்புடன் பேசினார்கள். அவர்களால் வெளிப்படையாக அதைச் சொல்ல முடியாது. ஆனால், நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை நான் எழுப்பும்போது நிச்சயமாக அவர்கள் ஆதரிப்பார்கள்.

மக்கள் பிரதிநிதிகளான எங்களிடம் கோரிக்கைகளுடன் மக்கள் வரும்போது, எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியைக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றுகிறோம். அந்த நிதி, நேரடியாக எங்களிடம் தரப்படாமல், மாவட்ட ஆட்சியரிடம்தான் தரப்படும். பணிகளைக் கண்டறிந்து சொல்வது எங்கள் வேலை. அப்படியிருக்கும்போது, கோரிக்கைகளுடன் எங்களிடம் வரும் மக்களுக்கு இனிமேல் நாங்கள் என்ன பதில் சொல்வது? தொகுதி மேம்பாட்டு நிதி இல்லையென்றால், எங்களால் எப்படி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்?

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வருக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். எம்.பி-க்களுக்கான தொகுதி நிதியை எடுத்து பி.எம் கேர்ஸில் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். அதற்கு கணக்கு கொடுக்கவும் மறுக்கிறார்கள். இந்த விவகாரத்தை அனல்பறக்கப் பேசுவேன்” என்றார் சூடாக.

தி.மு.க-வைச் சேர்ந்த தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் செந்தில்குமாரிடம் பேசினோம். ``வரக்கூடிய மழைக்காலக் கூட்டத்தொடர் எப்படியிருக்கும் என்பது தற்போது தெளிவில்லாமல் இருக்கிறது. கேள்வி நேரத்தை எடுக்கப்போவதாகச் சொன்னார்கள். அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியவுடன், அரை மணி நேரம் கொடுப்பதாக இப்போது சொல்லியிருக்கிறார்கள். சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமைகளிலெல்லாம்கூட விடுமுறையின்றி, இடைவிடாமல் கூட்டத்தொடர் நடக்கப்போகிறது.

செந்தில்குமார்
செந்தில்குமார்

பட்ஜெட் கூட்டத்தொடரின்போது விவாதம் இல்லாமலேயே பட்ஜெட்டை நிறைவேற்றினார்கள். அதைப்போல இப்போது என்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இ.ஐ.ஏ 2020 போன்றவற்றை எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றி விடுவார்களோ என்கிற சந்தேகம் இருக்கிறது. உறுப்பினர்கள் விவாதிக்க வாய்ப்பு கொடுத்தாலும், அதை எந்த அளவுக்குக் கொடுப்பார்கள் என்பதும் தெரியவில்லை. அமைச்சர்கள் பதில் சொல்லும்போது, அருகில் அதிகாரிகள் இருப்பார்கள். இப்போது அதிலும் பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருப்பதால், எந்த அளவுக்கு அமைச்சர்கள் பதில் சொல்வார்கள் என்பது கேள்வியாக இருக்கிறது. வழக்கமாக, தொகுதிப் பிரச்னைகள் குறித்து அமைச்சர்களை அவர்களின் அலுவலகங்களில் நேரடியாகச் சந்தித்து முறையிடுவோம். தற்போதைய சூழலில், அமைச்சர்களைச் சந்திக்க எம்.பி-க்களுக்கு அனுமதி கிடைக்குமா என்பதும் தெரியவில்லை.

காஸ் சிலிண்டர் மானியம் ரத்தா... விலைக் குறைப்பா..?! - உண்மை என்ன?

முதல் இரண்டு நாள்களாவது அவை நடவடிக்கைகளைப் பார்த்தால்தான், ஆட்சியாளர்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள், எந்த மாதிரியான அணுகுமுறையுடன் நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் கொண்டுபோகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை - 2020 என மத்திய பா.ஜ.க அரசின் பல நடவடிக்கைகள் தமிழகத்துக்கு எதிராக உள்ளன. அவற்றுக்கு எதிராக நிச்சயம் பிரச்னையைக் கிளப்புவோம்” என்றார்.

பழங்குடியினருடன் எம்.பி சுப்பராயன்
பழங்குடியினருடன் எம்.பி சுப்பராயன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சுப்பராயனிடம் பேசினோம். ``பிஎம் கேர்ஸ், ஜி.எஸ்.டி இழப்பீடு பாக்கியைத் தர மறுப்பது உட்பட மத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகள் மாநிலங்களுக்கு எதிரானதாகவும், கூட்டாட்சிக்கு எதிரானதாகவும் இருக்கின்றன. கூட்டாட்சி என்பது மத்திய பா.ஜ.க அரசால், திட்டமிட்டு தகர்க்கப்படுகிறது. ஜி.எஸ்.டி இழப்பீட்டை முழுமையாக மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், அந்தச் சட்டத்தையே மத்திய அரசு மீறுகிறது. அவர்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்களே மீறுகிறார்கள். இனி அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை எப்படி நம்புவது?

மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசே ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொடுக்கலாமே... ஆனால், மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டால், அந்தச் சுமையைத் தூக்கி மாநிலங்களின் தலைமீது வைப்பது என்ன நியாயம்? எனவே, அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பிரச்னையைக் கிளப்புவோம். குறிப்பாக, ஒரே ஓர் அ.தி.மு.க எம்.பி-யைத் தவிர மற்ற தமிழக எம்.பி-க்கள் அனைவரும் தி.மு.க-வின் தலைமையில் ஒன்று சேர்ந்து எங்களின் வலுவான குரலை நாடாளுமன்றத்தில் ஒலிப்போம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு