Published:Updated:

சைலன்ட் தினகரன்... முக்கிய நிர்வாகிகள் விலகல்! - காலியாகிறதா அ.ம.மு.க கூடாரம்?

அ.ம.மு.க
அ.ம.மு.க

தொடர்ந்து தினகரனிடமிருந்தும் எந்தவித சிக்னலும் இல்லாமல் இருக்கவே, ஒவ்வொருவராகக் கட்சியிலிருந்து விலகிவருகிறார்கள். இன்னும் பலர் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் கடந்த சனிக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன்,டேவிட் செல்வன் உட்பட 20 பேர் கடந்த வாரம் அ.ம.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த நிலையில், டி.டி.வி.தினகரனின் வலதுகரமாகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்த பழனியப்பனும் அந்தக் கட்சியிலிருந்து விலகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

தி.மு.க-வில் இணைந்த பழனியப்பன்
தி.மு.க-வில் இணைந்த பழனியப்பன்

தி.மு.க-வில் மட்டுமல்லாமல் அ.தி.மு.க-விலும் இணைந்துவருகின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பொன்ராஜா, மத்திய சென்னை மத்திய மாவட்டச் செயலர் சந்தான கிருஷ்ணன், வடசென்னை மத்திய மாவட்டச் செயலர் லட்சுமி நாராயணன் ஆகியோர் சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக-வில் தங்களை இணைத்துக்கொண்டனர். மேல்மட்ட நிர்வாகிகள் மட்டுமல்லாமல், மாவட்ட அளவிலும் பல நிர்வாகிகள் அதிமுக மற்றும் திமுக-வில் இணைந்துவருகின்றனர். இந்தநிலையில், அமமுக என்ற வீடு காலியாகிவிட்டதாகவும், அங்கிருந்து வருபவர்களை அதிமுக-வினர் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை திருமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். ஐந்து முதல் பத்து எம்.எல்.ஏ-க்களையாவது பெற்றுவிடுவோம் என நம்பிக்கையோடு இருந்த அ.ம.மு.க நிர்வாகிகளுக்கு டி.டி.வி.தினகரனே கோவில்பட்டியில் தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. தொடர்ந்து தினகரனிடமிருந்தும் எந்தவித சிக்னலும் இல்லாமல் இருக்கவே, ஒவ்வொருவராகக் கட்சியிலிருந்து விலகிவருகிறார்கள். இன்னும் பல நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.

அதிமுக-வில் இணைந்த அமமுக நிர்வாகிகள்
அதிமுக-வில் இணைந்த அமமுக நிர்வாகிகள்

இது குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``தற்போது நிர்வாகிகள் விலகிவருவதற்குத் தேர்தல் முடிவுகளை மட்டும் காரணம் சொல்ல முடியாது. எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் செயல்பாடுகளும் முக்கியமான காரணம். தேர்தலுக்கு முன்பாகவே ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் அமைதியாகத்தான் இருந்தார். மற்ற கட்சிகளிலெல்லாம் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். ஆனால், எங்கள் கட்சி, தேர்தலில் போட்டியிடுகிறதா இல்லையா என்பதே எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் கட்சியை அ.தி.மு.க கூட்டணியில் இணைக்க பா.ஜ.க முயன்றது. எங்கள் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் அது நடந்திருக்க வாய்ப்பில்லை. அந்த காலகட்டத்தில் எங்கள் கட்சியின் பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. யாரை எதிர்த்து அரசியலுக்கு வந்தோமோ, அவர்களுடனேயே இணைந்து தேர்தலைச் சந்திப்பதை நிர்வாகிகள் யாரும் விரும்பவில்லை. சின்னம்மாவிடமிருந்தும் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியும் சாதுர்யமாக எங்களை இணைத்துக்கொள்வதைத் தவிர்த்துவிட்டார்.

கட்சியைக் கலைக்கும் முடிவை எடுத்தாரா தினகரன்?  அ.ம.மு.க-வின் எதிர்காலம் இனி என்னவாகும்?

தொடர்ந்து, தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமையவும் உற்சாகமாகத்தான் தேர்தல் வேலை செய்துவந்தோம். ஆனால்,. கடைசிவரை தேர்தல் செலவுக்குக் கட்சித் தலைமையிடமிருந்து பணம் வரவேயில்லை. கடைசி இரண்டு நாள்களில் மிகவும் நம்பி ஏமாந்துபோனோம். அதனால்தான், தேர்தல் முடிவுகளும் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. காரணம், எங்கள் நிர்வாகிகள் பலரே, அ.தி.மு.க-வைத் தோற்கடித்தால் போதும் என எங்கள் வேட்பாளர்களைவிட்டுவிட்டு, தி.மு.க-வுக்கு வாக்கு கேட்டார்கள். எங்கள் தலைவரும், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, காரைக்குடி போன்ற தொகுதிகளைவிட்டுவிட்டு, தேவையில்லாமல் கோவில்பட்டியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

சரி, போனது போகட்டும், தேர்தல் முடிந்த பிறகு, மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்துக் கூட்டமாவது போட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படி எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பிலேயே இல்லை. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் சரி, கட்சி நிர்வாகிகளுக்கும் சரி அது மிகப்பெரிய மனச்சோர்வைக் கொடுத்தது. தொலைக்காட்சி விவாதங்களில்கூட எங்கள் கட்சி சார்பில் யாரும் கலந்துகொள்ள தலைமை அனுமதிப்பதில்லை. அதனால்தான், கையிலிருந்த பணத்தையெல்லாம் இரண்டு தேர்தல்களில் செலவழித்து பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகிவருகிறார்கள்.

தற்போது ஆட்சியிலிருக்கும் தி.மு.க அரசாங்கம், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள்மீது எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்தும் சின்னம்மாவின் அடுத்தடுத்த நடவடிக்கைளைப் பொறுத்தும்தான் எதையும் சொல்ல முடியும். அவர்கள் குடும்பப் பிரச்னையையின் காரணமாகவே எங்கள் பொதுச்செயலாளர் அமைதியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவை எல்லாவற்றையும் வேகமாகச் சரிசெய்து எங்கள் பொதுச்செயலாளர் களத்தில் இறங்கினால்தான் எங்கள் கட்சியை மீட்க முடியும்'' என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு