Published:Updated:

`என்ன பண்ணிடுவாங்க... பார்த்துக்கலாம்' - உதயநிதியின் பேச்சுக்கு வேலுமணி தரப்பு ரியாக்‌ஷன் என்ன?

உதயநிதி - வேலுமணி
News
உதயநிதி - வேலுமணி

உதயநிதியின் இந்தப்பேச்சு, வேலுமணியின் ஆதரவாளர்களை கடும் கொந்தளிப்புக்கு ஆளாக்கியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், பல்வேறு தகவல்களை பகிர்ந்துக்கொண்டனர்...

கோவை மாவட்டத்தை மையப்படுத்தி தி.மு.க தலைமை அடுத்தடுத்து காய்களை நகர்த்திவருவது அ.தி.மு.கவினரிடையே மிகப்பெரிய கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், 'வேலுமணி விரைவில் சிறைக்குச் செல்வது உறுதி 'என தி.மு.க இளைஞரணித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி கோவையில் பேசியிருப்பது, அந்த மாவட்ட ரத்தத்தின் ரத்தங்களை கொதிப்படையச் செய்துள்ளது. ஆனால், 'எது வந்தாலும் பார்த்துக்கலாம்' என்கிற மோடில் வேலுமணி இருப்பதாக கொங்கு இலைக்கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகின்றன.

கோவை திமுக கூட்டத்தில் உதயநிதி
கோவை திமுக கூட்டத்தில் உதயநிதி

மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு தி.மு.க தலைமையிடமிருந்து கொடுக்கப்பட்ட முக்கியமான டாஸ்க் கோவை மாவட்டத்தில் தி.மு.க கொடியை பறக்க வைப்பதுதான். தேர்தலுக்கு முன்பாக தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் செயலாளரான கார்த்திகேய சிவசேனாபதியை, வேலுமணிக்கு ஃபைட் கொடுக்க நினைத்து களமிறக்கியது தி.மு.க. ஆனால், களத்தில் வேலுமணியைச் சமாளிக்க அவரால் முடியவில்லை. கோவை மாவட்டத்தில், ஒட்டுமொத்தமாக பத்துத் தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பை இழந்தது தி.மு.க. இந்தநிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு அந்தப்பொறுப்பு செந்தில் பாலாஜியின் வசம் ஒப்படைக்கப்பட்டது. முன்னாள் அதிமுக நிர்வாகிகளை கட்சிக்குள் இழுப்பது, பூத் அளவில் இறங்கி வேலை செய்வது உள்ளிட்ட அதிரடியான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன் முக்கிய அம்சமாக, கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்து மிகப்பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தினர், செந்தில் பாலாஜி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தற்போது, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை அழைத்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார். ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டமாக இது நடத்தப்பட்டது. மாநகர், நகர், பேரூர் என பூத்துக்கு பத்துப்பேர் வீதம் சுமார் 25,000 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தக்கூட்டத்தில் பேசிய உதயநிதி, `` சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நான் கோவை மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு வந்தபோது சென்ற இடமெல்லாம் எழுச்சியாக இருந்தது. தேர்தலில் தமிழகம் முழுவதும் மக்கள் தலைவருக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்தார்கள். ஆனால், கோவை மாவட்ட மக்கள் மட்டும் காலை வாரிவிட்டீர்கள். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமான ஒரு காரணமாக, ஆளும்கட்சியாக இருந்து அமைச்சர் வேலுமணி போன்றோர் அடித்து வைத்திருந்த பணத்தை மக்களிடம் கொடுத்து வாக்காக மாற்றினார்கள்.

உதயநிதி
உதயநிதி

தலைவர் பிரசாரத்துக்கு வரும்போது, அதிமுக ஆட்சியில் ஊழல்செய்த பேர்வழிகள் அத்தனை பேரும் திமுக ஆட்சியில் உள்ளே செல்வது உறுதி என்று சொன்னார்கள். அந்த வேலையும் தொடங்கிவிட்டது. வேலுமணி அவர்கள் விரைவில் உள்ளே செல்லப்போவது உறுதி'' என்றவர் தொடர்ந்து, ``சட்டமன்றத்தில் கோட்டைவிட்டோம். உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் நூறு சதவிகித வெற்றியைப் பெறும்வரை நாம் ஓயக்கூடாது'' என்று பேசி முடித்தார். உதயநிதியின் இந்தப்பேச்சு, வேலுமணியின் ஆதரவாளர்களை கடும் கொந்தளிப்புக்கு ஆளாக்கியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுகவினர்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``உள்ளாட்சித் தேர்தல் முகவர்கள் கூட்டத்துக்குத்தான் உதயநிதி வந்தாரு, ஆனா அப்போகூட எங்க அண்ணனைப் பத்தி பேசாம அவரால இருக்க முடியல. காரணம், களத்துல அவரைச் சமாளிக்க முடியல. அதுக்காக அவரை எப்படியாவது ஜெயிலுக்கு அனுப்பிடனும்னு நினைக்கிறாங்க. ரெய்டு வந்த அப்பவே அண்ணன் வேலுமணி தேர்தலுக்காகத்தான் நெருக்கடி கொடுக்கிறாங்கன்னு வெளிப்படையாவே பேட்டி கொடுத்திருந்தாரு. அது இப்போ மீண்டும் உண்மை ஆகியிருக்கு.

அவங்க கட்சிக் கட்டமைப்பை மேம்படுத்துறது விட்டுட்டு, தேர்தல் தோல்வியை ஜீரணிக்க முடியாம காழ்ப்புணர்ச்சியோட பேசுறாங்க. கோயம்புத்தூர் மக்கள்'ல பாதிப்பேர் திமுக கூட்டணிக்கும்தான் ஓட்டுப் போட்டிருக்காங்க. ஆனா, ஒட்டுமொத்தமா கோயம்புத்தூர் மக்கள் எல்லோரும் ஏமாத்திட்டதா உதயநிதி பேசுறாரு. அதுவும் காசு வாங்கிட்டு ஓட்டுப்போட்டதா சொல்றாடு. அதுமட்டுமில்ல, பேசும்போது, கோவை மாவட்ட நிர்வாகிகள் ஒருத்தர் பெயரைக்கூட அவர் உச்சரிக்கல. அப்புறம் எப்படி கீழ்நிலையில உள்ள நிர்வாகிகள், அங்குள்ள நிர்வாகிகளுக்கு மரியாதை கொடுப்பாங்க. அதுமட்டுமில்ல, நான் நிக்குறது கோயம்புத்தூரா இல்ல கரூரா எனக்கே டவுட்டா இருக்குன்னு செந்தில் பாலாஜியை பெருமைப் படுத்துறதா நினைச்சுப் பேசுறாரு. ஆனா, அது இங்க இருக்க நிர்வாகிகள் மனசைக் காயப்படுத்தும்'னு அவருக்குத் தெரியல. தேர்தல்'ல பயங்கரமா செலவழிச்சுத் தோற்றதால திமுக நிர்வாகிகளும் பயங்கர அப்செட்'லதான் இருக்காங்க. அதையெல்லாம் சரி பண்ணாம, பழியெல்லாம் தூக்கி எங்க அண்ணன் மேல போடுறாங்க.

வேலுமணி
வேலுமணி

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்'ல கண்டிப்பா எங்களுக்குக் கடுமையான நெருக்கடி இருக்கும். ஆனாலும், ஏற்கெனவே லோக்கல்'ல மக்கள் செல்வாக்கோட பலபேர் எங்க கட்சியில இருக்காங்க. அவங்க கண்டிப்பா ஜெயிக்கவும் செய்வாங்க. எங்க அண்ணனைக் கைது பண்ணி எங்களை முடக்கலாம்னு நினைப்பாங்க. நேத்து உதயநிதி பேசினதுக்கு அப்புறம் அண்ணன்கிட்ட சில நிர்வாகிகள் பேசும்போது, 'என்ன பண்ணிடுவாங்க, தூக்குலயா போட்டுடுவாங்க...எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்னு'தான் அண்ணன் பேசியிருக்காரு. அதனால, இதுக்கெல்லாம் நாங்க பயப்படப்போறதில்லை. எங்களுக்குக் கடுமையான நெருக்கடிகள் வர்ற தேர்தல்'ல இருக்கும். ஆனா, நாங்க எல்லாத்தையும் சமாளிப்போம்'' என்கிறார்கள்.

ஆகமொத்தம், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மற்ற மாவட்டங்களைவிட கோவையில் தேர்தல் களம் அனல் பறக்கும் என்பது தெளிவாகிறது.