Published:Updated:

அமித் ஷா தலைமையில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டம்: கவனிக்கவைத்த கோரிக்கைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அமித் ஷா - தென்னிந்திய கவுன்சில் கூட்டம்
அமித் ஷா - தென்னிந்திய கவுன்சில் கூட்டம் ( ட்விட்டர் )

தென் மாநில முதல்வர்களின் 29-வது கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் திருப்பதியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதும், மாநிலங்கள் சார்பில் விவாதிக்கப்பட்டவை குறித்தும் ஒரு பார்வை...

29-வது தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு ஆந்திரா மாநிலம், திருப்பதியில் ஞாயிற்றுக்கிழமை (14.11.2021) நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அந்தமான் நிக்கோபர் துணைநிலை ஆளுநர் டி.கே.ஜோஷி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, லட்சத்தீவுகள் நிர்வாகி பிரபுல் கோடா படேல், மத்திய உள்துறைச் செயலாளர் அஜய்குமார் பல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் பங்கேற்கவில்லை. முதல்வர் பங்கேற்காத மாநிலங்களின் பிரதிநிதிகளாக தெலங்கானா உள்துறை அமைச்சர் முகமது அலி, கேரள நிதி அமைச்சர் பாலகோபால், தமிழக அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.

அமித் ஷா - தென்னிந்திய கவுன்சில் கூட்டம்
அமித் ஷா - தென்னிந்திய கவுன்சில் கூட்டம்
ட்விட்டர்

அமித் ஷா தலைமையில் நடந்த தென் மாநில முதல்வர்கள் கவுன்சில் கூட்டத்தில் பேசப்பட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து ஒரு பார்வை...

அமித் ஷா-வின் திருப்பதி கவுன்சில் திட்டம்... கலந்துகொள்வாரா முதல்வர் ஸ்டாலின்?!

“போக்சோவுக்கு சிறப்பு விசாரணைப் பிரிவு வேண்டும்!”

“தென்னிந்தியாவின் கலாசாரம், பாரம்பர்யம், மொழிகள் ஆகியவை இந்தியாவின் பழைமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. தென்னிந்திய மாநிலங்களின் பங்களிப்பு இல்லாத இந்தியாவின் வளர்ச்சியைக் கற்பனைகூட செய்ய முடியாது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் தங்கள் தாய்மொழியோடு இந்திக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதன் வளர்ச்சிக்கு உதவும் விஷயங்களைச் செய்ய வேண்டும். இன்றைய தென்னிந்திய மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அவரவர் தாய்மொழியிலேயே பேசலாம். இங்கே பேசப்படும் விவரங்கள் அனைத்தும் அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்பேரில் 111 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போட்டுச் சாதித்துள்ளோம். இது கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்துக்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு. போதைப்பொருள் பயன்பாடுதான் இன்றைய இந்திய இளைஞர்களின் வாழ்க்கையையும் திறனையும் அழிக்கும் மோசமான ஆயுதமாக இருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் சட்டவிரோதமாக போதைப்பொருள்கள் விற்பனை நடப்பதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்சோ
போக்சோ

குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்களை விசாரிக்க நீதிமன்றங்களில் சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். போக்சோ குற்றங்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை 60 நாள்கள் என்பதிலிருந்து இன்னும் குறைத்து, விரைந்து நடவடிக்கை எடுப்பதை ஒவ்வொரு மாநிலமும் உறுதி செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``தடய அறிவியல் கல்லூரி தொடங்குக!”

“பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் தேசியத் தடய அறிவியல் பல்கலைக்கழகம், ராஷ்ட்ரிய ரக்‌ஷா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளன. தென்னிந்திய மாநிலங்கள் குறைந்தது ஒரு தடய அறிவியல் கல்லூரியைப் பிராந்திய மொழிகளில் ஏற்படுத்த வேண்டும். இதனால் தடய அறிவியல் பணி இடங்களுக்கு இருக்கும் ஆள் பற்றாக்குறை தவிர்க்கப்படுவதோடு, குற்றங்களைக் கண்டறிய முக்கியப் பங்காற்றும் தடய அறிவியல்துறை மேலும் வளர்ச்சியடைய உதவியாக இருக்கும். நவம்பர் 15-ம் தேதியை ஜன்ஜாதிய கௌரவ் திவஸாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், நமது சுதந்திரப் போராட்டம் மற்றும் தேசிய வளர்ச்சிக்குப் பழங்குடியினச் சமூகங்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு வாரம் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்படும்.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கும், அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கும் பழங்குடியினரின் பங்களிப்பை வெளிப்படுத்தவும் சிறப்பிக்கவும் தங்கள் மாநிலங்களில் ஒரு செயல் திட்டத்தை முதலமைச்சர்கள் உருவாக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார்.

``திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்!”

``தமிழகம் அதன் பழம்பெரும் கலாசாரத்துக்கும், வளமான பாரம்பர்யத்துக்கும் பெயர்பெற்றது. தமிழக மக்கள், தங்களின் மொழியைப் பெருமித அடையாளமாகக் கருதுகின்றனர். நமது பிரதமரும்கூடத் தனது உரைகளில் தமிழ் இலக்கியங்களிலிருந்து மேற்கோள்களைச் சுட்டிக்காட்ட மறப்பதில்லை. இந்தியாவில் முதன்முதலாகச் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றதும் தமிழ்மொழிதான். உலகின் பழைமையான மொழி, வளமான மொழி என்ற வகையில் தமிழ் மொழி ஏற்கெனவே இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மலேசியா, தென் ஆப்பிரிக்காவில் சிறுபான்மை மொழியாகவும் இருக்கிறது. இந்த நிலையில் செம்மொழியாம் தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மேலும், ஞானத்தின் ஊற்றான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். மேலும், மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னையிலும் மத்திய அரசு தலையிட்டு, சுமுகத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

``338.5 கோடி நிலுவைத் தொகையைத் தமிழ்நாடு தரவில்லை!”

“1970-ல் போடப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்படி, ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் தலா 5,000 மில்லியன் கனஅடி நீரைத் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். ஆனால், தற்போது மொத்தச் சுமையும் ஆந்திராவின் தலையில் விழுந்துள்ளது. சென்னையில் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆந்திரா தொடர்ந்து நீர் வழங்கிவருகிறது. ஆனால், ஆந்திர கங்கைத் திட்டத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான 338.5 கோடி ரூபாயைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு வழங்கவில்லை. இந்தத் தொகையைத் தமிழ்நாடு அரசு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாறு திட்டம் காலத்தின் தேவையாக உள்ள நிலையில், தமிழக அரசு அதை எதிர்த்துவருகிறது.

ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன்
ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன்

ஆந்திரப்பிரதேசம் பிரிக்கப்பட்டபோது, ஆந்திராவுக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்படும் என்று மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஏழு ஆண்டுகள் கழித்து தற்போதுவரை அது நிறைவேற்றப்படவில்லை. இதனால் நிதி இழப்பு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுடனான உறவும் பாதிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்ய மத்திய அரசு உதவ வேண்டும்” என ஆந்திரா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

``புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்!”

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் அதிக தொழிற்சாலைகளை வரவழைக்கவோ, சுற்றுலாவுக்கான உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவோ, வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ முடியவில்லை. மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என எங்களின் நீண்டநாள் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாகப் பரிசீலித்து, அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். புதுச்சேரிக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி உதவி போதுமானதாக இல்லை. எனவே, ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டவும், பெட்ரோலியப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி-யைக் குறைக்கவும் அடுத்த நிதியாண்டுக்குக் கூடுதலாக 1,500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யத் தமிழகத்தில் 216 ஏக்கர் நிலமும், புதுச்சேரியில் 54 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட வேண்டும். இதற்குத் தேவைப்படும் சுமார் 225 கோடி ரூபாயையும் மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் தற்போதிருக்கும் சட்டப்பேரவைக் கட்டடம் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் போதுமானதாக இல்லாததோடு, பழைமையான கட்டடமாகவும் இருக்கிறது. அதனால் தலைமைச் செயலகம் உள்ளிட்டவை அடங்கிய புதிய சட்டப்பேரவை வளாகம் கட்ட புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக சுமார் 300 கோடி ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்க வேண்டும். கொரோனா தொடர்பான செலவினங்களுக்காகவும், மருத்துவமனைகளில் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்தவும் 500 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும்” எனவும் புதுச்சேரி அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு