Published:Updated:

ரஜினி சொன்னது என்ன... 1971 சேலம் ஊர்வலத்தில் நடந்தது என்ன..? துக்ளக் செய்தி... முழு விவரம்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

சேலத்தில் நடந்த திராவிடர் கழக ஊர்வலம் பற்றிக் கிண்டல், நையாண்டியோடு துக்ளக்கில் அன்றைக்கு செய்திகள் வெளியிடப்பட்டன.

''1971-ம் ஆண்டு சேலத்தில் ராமரையும் சீதையையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதைத் துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார் சோ. இதனால், அப்போதைய தி.மு.க அரசுக்குப் பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால், அந்தப் பத்திரிகை யாருக்கும் கிடைக்கக் கூடாது என அதன் பிரதிகளைக் கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டனர். 'பிளாக்'கில் விற்றது. 10 ரூபாய் விற்ற பத்திரிகை 50 ரூபாய் 60 ரூபாய்னு போச்சு. இப்படித்தான் கலைஞர் சோவையும் துக்ளக்கையும் மிகப் பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே நம்முடைய 'பப்ளிசிட்டி மேனேஜர்' என சோ அட்டையிலேயே வெளியிட்டார்'' - துக்ளக் விழாவில் ரஜினி பேசிய இந்தப் பேச்சுக்கு எதிரிவினை கிளம்பியது.

ரஜினி காட்டிய அவுட் லுக் பத்திரிகை செய்தி
ரஜினி காட்டிய அவுட் லுக் பத்திரிகை செய்தி

ரஜினிக்கு எதிராகப் போராட்ட அறிவிப்பு வெளியான நிலையில் அந்தப் பேச்சுக்கு ''மன்னிப்பு கேட்க முடியாது'' எனச் சொல்லியிருக்கிறார் ரஜினி. 1971-ம் ஆண்டு சேலத்தில் நடந்த சர்ச்சைக்குரிய திராவிடர் கழக ஊர்வலத்தைப் பற்றி அப்போது துக்ளக்கில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டாமல் 2017-ம் ஆண்டு வெளியான அவுட்லுக் கட்டுரையை உதாரணம் காட்டியிருக்கிறார் ரஜினி.

அந்த ஊர்வலத்தில் நடந்தது என்ன? ரஜினி சொன்ன அந்தச் சம்பவம் பற்றி துக்ளக்கில் என்ன எழுதியிருந்தார்கள்? அதன் விரிவான ஃப்ளாஷ்பேக் இது!

1971 ஜனவரி 23, 24 தேதிகளில் சேலத்தில் 'மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை' நடத்தியது திராவிடர் கழகம். தொழிலதிபர் ஜி.டி.நாயுடு மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மூடநம்பிக்கை ஒழிப்பை வலியுறுத்தி 24-ம் தேதி ராஜேந்திரா சத்திரத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், மாநாடு நடைபெற்ற போஸ் மைதானத்தில் நிறைவடைந்தது. மூடநம்பிக்கைகளை விளக்கும் காட்சிகளைக் கொண்ட படங்கள் ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்டன. அவற்றில் இந்துக் கடவுள்களின் படங்களும் இடம் பெற்றிருந்தன.

துக்ளக் பொன் விழாவில்...
துக்ளக் பொன் விழாவில்...

இந்த ஊர்வலம் பற்றித்தான் துக்ளக் இதழ் அன்றைக்குப் பதிவு செய்திருந்தது. ஊர்வலத்தில் வந்த படங்களை வெளியிட்டதற்காக துக்ளக் தடை செய்யப்பட்டது. அந்த விஷயத்தைத்தான் ரஜினி துக்ளக் விழாவில் பேசினார். அன்றைக்கு துக்ளக் இதழில் வந்த செய்திகள் என்ன என்பதைப் பார்ப்போம். ஊர்வலம் தொடர்பான செய்திகள் வெளியான பத்திரிகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அடுத்த இதழில் அதாவது, 1.3.1971 தேதியிட்ட துக்ளக் இதழில், 'கடமை... கண்ணியம்... கட்டுப்பாடு!' என்ற தலைப்பில் 'சேலம் ஊர்வலப் படங்கள்' எனச் சொல்லி 7 கட்டங்களை மட்டும் போட்டிருந்தார்கள். அந்தக் கட்டங்களில் படங்கள் எதுவும் இல்லை.

அந்தக் கட்டுரையில், 'அந்தப் படங்கள் மக்கள் கண்ணில் இருந்து மறைக்காவிட்டால் தேர்தலில் தங்களுக்கு விபரீதம் ஏற்பட்டுவிடும் என்று தி.மு.க-வினர் உணர்ந்தது பாராட்டுக்குரியது. அதற்காக அவர்கள் எடுத்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்துக்காகப் போராடிய அண்ணாதுரையின் நினைவுக்கு தி.மு.க-வினர் செலுத்திய அருமையான அஞ்சலி. நேர்மையான ஆட்சிக்குப் பாராட்டைத் தெரிவிக்க இந்த வெற்றிடங்களைத் தமிழக முதல்வருக்கு (கருணாநிதி) காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறோம்.

துக்ளக் விழாவில் ரஜினிகாந்த்
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த்
படம்: சு.குமரேசன்

ஈ.வே.ரா அவர்களிடம் கூறி, இந்த இடங்களை முதல்வர் நிரப்பிக் கொள்ளலாம். ஏனென்றால், அந்தப் படங்களைப் பிரகடனப்படுத்தும் உரிமை ஈ.வே.ரா-வுக்கு உண்டு. அதை அனுமதிக்கும் உரிமை கருணாநிதிக்கு உண்டு. ஆனால், ஓட்டுப் போடும் உரிமை மக்களுக்கு உண்டு! அதை யாரும் மறக்க வேண்டாம்' என எழுதியிருந்தது துக்ளக்.

அதே இதழில், `எச்சரிக்கை சமர்ப்பணம்' என்ற தலைப்பில் பெட்டிச் செய்தி ஒன்று வெளியானது. 'பிப்ரவரி 13-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மட்டும் பிரபலமாகியிருந்த எங்கள் 'துக்ளக்’ பத்திரிகையை, பிப்ரவரி 14-ம் தேதி பறிமுதல் செய்து, `அகில இந்தியப் புகழ் துக்ளக்’காக மாற்றிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான கலைஞர் மு.கருணாநிதிக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்விதழைக் காணிக்கையாகக் கலைஞருக்குச் சமர்ப்பிக்கின்றோம்' என எச்சரிக்கை பகுதியில் குறிப்பிட்டிருந்தார்கள்.

சோ
சோ
`ஸ்கெட்ச் முரசொலிக்கா... இல்லை உதயநிதிக்கா?' - துக்ளக் விழாவில் ரஜினி பேசியதன் பின்னணி என்ன?

அதே இதழில் 'வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்' என்ற தலைப்பில் அறிவிப்பு ஒன்றும் வெளியாகியிருந்தது.

''அன்புமிக்க வாசகர்களுக்கு, வணக்கம்.

`துக்ளக்’ பறிமுதலைக் கண்டித்து, அதற்குரிய சட்டபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக எங்களுக்கு பல வாசக நண்பர்கள் பணம் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அவற்றை நாங்கள் திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறோம். துக்ளக்கின்பால் அவர்கள் காட்டும் அன்புக்கு நன்றி. பிரபல வழக்கறிஞர்களே எங்களுக்கு இலவசமாக வாதாட முன் வந்திருப்பதால், வாசக நண்பர்கள் பணம் அனுப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,வாசகர்களின் அன்புப் பிடியில் சிக்கித் தவிக்கும்

சோ

ஆசிரியர், துக்ளக்'

'அனுமதி வேண்டும் தமிழக முதல்வரே!' என்ற தலைப்பில் இன்னொரு செய்தியையும் வெளியிட்டிருந்தது துக்ளக்.

'மார்ச் மாத துக்ளக்கில் சேலம் ஊர்வலத்தின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அவை ஆபாசமானவை, மக்களின் மத உணர்ச்சியைப் புண்படுத்துபவை, தரக் குறைவானவை என்று தனது மேலான அபிப்பிராயத்தை நம் தமிழக முதல்வர் சொல்லியிருக்கிறார். அதற்காகத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

முதல்வரை ஒன்று கேட்கிறோம். ஐயா, முரசொலி 1956-ம் ஆண்டு வெளியிட்ட பொங்கல் மலரில் 81 முதல் 84-ம் பக்கங்கள் வரை 'தெய்வ லீலை' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பல படங்களுடன் வெளியாகியிருக்கிறது.

முரசொலி
முரசொலி
பெரியார், செருப்பு மாலை, ரஜினி கருத்து... 1971 சேலம் ஊர்வலத்தில் என்ன நடந்தது?

அந்தப் படங்கள் சேலம் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட படங்களைவிட மிகமிக ஆபாசமானவை. தரக்குறைவானவை. அருவருப்பை ஏற்படுத்தக்கூடியவை. மத உணர்ச்சியை நிச்சயம் புண்படுத்தக் கூடியவை. அந்த முரசொலி மலரில் 'ஆசிரியர்: மு.கருணாநிதி' என்று குறிப்பிட்டிருக்கிறது. அந்தப் படங்கள் தாங்கள் வெளியிட்டதுதான் என்று நினைக்கிறோம். அதற்காக உங்கள் பத்திரிகையில் வந்த அப்படங்களை நாங்கள் எடுத்து வெளியிட அனுமதி வேண்டுகிறோம்' என அதில் குறிப்பிட்டிருந்தார்கள். இவையெல்லாமே அன்றைக்கு துக்ளக்கில் வந்த செய்திகள்.

அடுத்த கட்டுரைக்கு