Published:Updated:

ராவத் வந்தார்... ராணுவப் புரட்சி வருமா?

பிரதமர் மோடி, பிபின் ராவத்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரதமர் மோடி, பிபின் ராவத்

‘‘தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலக அளவில் போர்க்கலையிலும், தகவல் பரிமாற்றத்தில் மிகப்பெரும் புரட்சி உருவாகியுள்ளது.

புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப் பட்டிருக்கிறார், ராணுவத்தளபதியாகவே ஓய்வு பெறவிருந்த பிபின் ராவத்.

இந்தியாவின் முப்படைகளுக்கும் தலைமைத்தளபதி நியமிக்கப்படுவார் என சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பாதுகாப்புத்துறை சீர்திருத்தத்துக்கான நீண்டநாள் கோரிக்கையை மத்தியஅரசு பரிசீலிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை இதன்மூலம் தேசத்துக்கு அறிவித்தார் மோடி. அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதும் பிபின் ராவத் நியமிக்கப் பட்டிருக்கிறார்.

பிபின் ராவத்
பிபின் ராவத்

உத்தரகாண்டைச் சேர்ந்த பிபின் ராவத்தின் குடும்பம், பல தலைமுறைகளாகத் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றுகிறது. 1978-ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்த பிபின் ராவத், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி 2016-ம் ஆண்டில் ராணுவத்தளபதி அளவிற்கு உயர்ந்தார். தற்போது இந்தியப் பாதுகாப்புப் படைகளின் உச்சபட்ச பதவியையும் அலங்கரிக்கவிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சுதந்திரத்துக்குப் பிறகு பாதுகாப்புத்துறையில் செய்யப்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம் இது. ‘இந்தியாவின் பாதுகாப்புக்கு இது மிகவும் அவசியமானது’ என பா.ஜ.க சொல்கிறது. ‘பிபின் ராவத்தின் பணி தெளிவாக வரையறுக்கப் படவில்லை’ என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ராணுவத்தளபதியாக பிபின் ராவத் இருந்தபோது அவர் தெரிவித்த சில அரசியல் கருத்துகள் மிகவும் சர்ச்சைக்குள்ளானவை. தற்போதுள்ள ஆளும் தரப்புக்கு நெருக்கமானவராக அவர் கருதப்படுகிறார்.

முப்படைகளுக்கும் தலைமைத்தளபதி என்பதை காங்கிரஸ் கட்சி தன்னுடைய நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலுமே குறிப்பிட்டிருந்தது. பிரதமரின் சுதந்திரதின அறிவிப்பை காங்கிரஸ் தலைவர்கள் பலருமே வரவேற்றிருக்கின்றனர்.

பிபின் ராவத் சமீபத்தில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பாகத் தெரிவித்த கருத்து கடும் கண்டத்திற்குள்ளானது. “போராடும் மாணவர்களைத் தவறாக வழிநடத்துபவர்களுக்குத் தலைமைப்பண்பே கிடையாது” என அவர் பேசியது எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பின்னர் ‘ராவத்தின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் கிடையாது’ என ராணுவத்தால் விளக்கம் அளிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாதுகாப்புப்படைகளின் பொறுப்புகளைப் பிரித்தளித்தது சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா செய்த முக்கியமான சீர்திருத்தங்களுள் ஒன்று என்கிறார் யேல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீவன் வில்கின்சன். சுதந்திரத்துக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் மேற்கொண்ட ராணுவச் சீர்திருத்தங்களை ஒப்பிட்டு ஆய்வுகளை மேற்கொண்டவர் ஸ்டீவன் வில்கின்சன். முப்படைகளுக்கும் தலைமைத்தளபதி என்கிற கோரிக்கையை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வந்ததாகவும், கார்கில் போருக்குப் பிறகே இதற்கான கோரிக்கை வலுத்ததாகவும் குறிப்பிடுகிறார் அவர்.

போருக்குப் பின்பு அமைக்கப்பட்ட பல அரசுக் குழுக்களும் முப்படை களுக்கும் தலைமைத்தளபதி உருவாக்கப் படும் என்று பரிந்துரைத்திருந்தன. அதனால் இந்தப் பதவி உருவாக்கப் பட்டதற்கு எந்த எதிர்ப்புமில்லை. ஆனால், பிபின் ராவத்தை இந்தப் பொறுப்பில் நியமித்தது அரசியலாகப் பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக நம்மிடம் விரிவாகப் பேசினார், முன்னாள் ராணுவ அதிகாரியும் பாதுகாப்பு நிபுணருமான ஹரிஹரன்...

ராவத் வந்தார்... ராணுவப் புரட்சி வருமா?
ராவத் வந்தார்... ராணுவப் புரட்சி வருமா?

‘‘தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலக அளவில் போர்க்கலையிலும், தகவல் பரிமாற்றத்தில் மிகப்பெரும் புரட்சி உருவாகியுள்ளது. இத்தகைய சூழலில் எதிரிகளை எதிர்கொள்ள முப்படைகளும் ஒருங்கிணைந்து வேலை செய்வதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான ஒருங்கிணைப்பாளராக முப்படைகளின் தலைமைத்தளபதி, அதாவது CDS ( Chief of Defence Staff ) செயல்படுவார். அவரை முப்படைத்தளபதிகளுக்கும் தலைமை என்று கூறுவது தவறு.

பாகிஸ்தான் மற்றும் சீனா என்கிற இரண்டு அணு ஆயுத அரசுகள் இணைந்து செயல்படுவதற்காகப் போடப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களால் இந்திய எல்லையில் பெருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியப்பெருங்கடலில் சீனக் கடற்படையினரின் பிரவேசம் அதிகமாகிவருகிறது. இது இந்தியாவுக்கு மட்டுமன்றி உலக வல்லரசான அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால், இதுவரை தனியாகச் செயல்பட்ட இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் முன்னெப்போதும் இல்லாத நெருக்கமான பாதுகாப்பு உறவு, கடந்த பத்தாண்டுகளில் உருவாகியுள்ளது. இந்திய முப்படைகள் பல நாடுகளுடன் ஒருங்கிணைந்து பயிற்சி செய்து வருகின்றன. இத்தகைய திட்டமிட்ட செயலாக்கங்களை உருவாக்குவதில் பாதுகாப்பு அமைச்சருக்கும் பிரதமருக்கும் ஆலோசகராக CDS செயல்படுவார்.

இந்தப் பதவி எந்த விதத்திலும் ஜனாதிபதியின் அந்தஸ்தைக் குறைக்காது. ஜனாதிபதிக்குப் போர்நிலையைப் பற்றிய விளக்கம் கூறும் கடமை CDS-க்கு இருக்கும். பிபின் ராவத் ராணுவத்தில் 38 ஆண்டுகள் பல்வேறு கடினமான பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். எனவே அவருடைய தனிப்பட்ட கருத்துகளை நான் விமர்சிக்க விரும்பவில்லை.

ராணுவ ஆட்சி வந்துவிடும் என்கிற கருத்து, இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக கடந்த 70 ஆண்டுகளில் ராணுவப்படைகள் செய்த மகத்தான தியாகங்களை மறந்து அரசியல் ஒன்றே பிழைப்பு என்று செயல்படுவோர்களின் பிதற்றல் என்றே கூறுவேன். இந்திய ராணுவம் இன்றும் தனது முழுத்திறனுடன் செயல்படவிடாமல் இருப்பதற்கு இத்தகைய மனநிலையில் பதவியில் இருப்பவர்களே காரணம்.’’

பிபின் ராவத்தின் தகுதியைப் பற்றி யாருக்கும் எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால் அவருடைய பேச்சுகள், தாய்நாட்டின் மக்களுக்கே சற்று அச்சமூட்டுகின்றன.

‘‘எதிரிகள் நம்மைக் கண்டு பயப்படுவதுபோல, மக்களும் நம்மைக் கண்டு அஞ்ச வேண்டும். நமது ராணுவம் அமைதியானது; எனினும் சட்டம் ஒழுங்கு விவகாரங்களைக் காக்க நாங்கள் அழைக்கப்பட்டோம். மக்கள் நிச்சயம் எங்களைக் கண்டு அஞ்ச வேண்டும்” என்று பேசியிருக்கும் பிபின் ராவத், இப்போது இந்திய ராணுவத்தின் உச்சபட்ச பதவியைப் பெற்றிருக்கிறார்.

பிபின் ராவத் செல்லும் பாதை சீர்திருத்தமா, சர்வாதிகாரமா என்பதற்கான விடை காலத்தின் கையில்தான் இருக்கிறது.