Published:Updated:

நட்பின் கரம் நம்பிக்கை தருமா?

ஜின்பிங், மோடி
பிரீமியம் ஸ்டோரி
ஜின்பிங், மோடி

“செப்டம்பர் மாதம் இறுதியில் அமெரிக்காவின் ஹீஸ்டன் நகரில் `ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் மோடி.

நட்பின் கரம் நம்பிக்கை தருமா?

“செப்டம்பர் மாதம் இறுதியில் அமெரிக்காவின் ஹீஸ்டன் நகரில் `ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் மோடி.

Published:Updated:
ஜின்பிங், மோடி
பிரீமியம் ஸ்டோரி
ஜின்பிங், மோடி

ங்கே “மீண்டும் டிரம்ப் அதிபராக இந்தியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று முழங்கினார். ஒருமாதம்கூட முடியவில்லை, இப்போது சீன அதிபர் ஜின்பிங்குடன் இளநீர் பருகியபடி கடற்கரையோரம் காத்தாட அமர்ந்திருக்கிறார்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சில நாள்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சீனாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் சீன அதிபர் ஜின்பிங். அதை முடித்த கையோடு மோடியைச் சந்திக்க சென்னையில் காலடி எடுத்துவைத்தார்.

ஆசியாவின் ஆதிக்கசக்தியாகத் தன்னைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்திவரும் சீனா, இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் தொடர்ந்து பாகிஸ்தானுக்கே ஆதரவுக்கரம் நீட்டிவந்தது. குறிப்பாக காஷ்மீரில் 370 சட்டபிரிவு நீக்கம் செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்வினையாற்றியபோது அதற்கு நேரடியாக ஆதரவு கொடுத்தது சீனா. இப்படி இருவரும் மற்றவருக்கு ஆகாத இன்னொருவரைச் சந்திப்பதும், அவருக்காக ஆதரவுக்குரல் கொடுப்பதுமாக இருக்க... எதற்காக இப்போது இந்த மாமல்லபுரம் கைக்குலுக்கல் என்கிற கேள்வி உலகத்திற்கே சர்ப்ரைஸாக இருந்தது?

நட்பின் கரம் நம்பிக்கை தருமா?

சீனாவின் சியான் நகரிலிருந்து ‘பெல்ட் அண்ட் ரோடு’ என்ற பெயரில் தரைவழித்திட்டத்தை சீனா முன்னெடுத்து வருகிறது. இந்தத் திட்டம் முழுமையடைந்தால் உலகிலேயே மிகப்பெரிய வியாபார கேந்திரமாக ஆசியா மாறிவிடும் என்பது சீனா போடும் கணக்கு. அப்படி ஒரு மெகா சந்தை உருவானால் அந்தச் சந்தையைத் தன்வசம் வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் ஆசியாவின் மற்ற நாடுகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்பதும், அமெரிக்கா செய்துகொண்டிருக்கிற நாட்டமை வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதும் சீனா போடும் மாஸ்டர் பிளான். இதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் என்பது சீனாவிற்கு நன்றாகவே தெரியும். அதற்காகவே ஜின்பிங் இந்தச் சந்திப்பிற்கு சம்மதித்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

மோடியின் கணக்கோ வேறு மாதிரி. தான் பிரதமராக இருக்கும் காலத்திலேயே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராகக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது அவருடைய கனவு. இன்றைய சூழலில் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது சீனா. அதேபோல் அருணாசலப் பிரதேச எல்லை விவகாரத்திலும் தொடர்ந்து குடைச்சல் இருந்துகொண்டே வருகிறது. அதற்கும் ஒரு தீர்வு காணவே மோடி விரும்புகிறார்.

நட்பின் கரம் நம்பிக்கை தருமா?

இந்தச் சந்திப்பின் மூலம் இருநாடுகள் இடையே வர்த்தக உறவில் இணக்கம் ஏற்படலாம். ஆனால், எல்லைப் பிரச்னையிலும், டோக்லாம் விவகாரத்திலும் எந்தத் தீர்வையும் எட்ட வாய்ப்பில்லை. குறிப்பாக சீனா அதைப்பற்றிப் பேசவும் விரும்பாது. திபெத் விவகாரத்திலும் இந்தியாவின் தலையீடு இனியும் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. இந்த விவகாரங்களை எல்லாம் அதிகாரபூர்வப் பேச்சுவார்த்தைகள் மூலம் சரிக்கட்ட முடியாது என்பது மோடிக்கு நன்றாகத் தெரியும். அதற்காகவே அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தை என்கிற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார். அதனால்தான், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் வூ ஹான் நகரில் நடைபெற்ற இரு தலைவர்களின் சந்திப்பும் இதேபோல் அதிகாரபூர்வமற்ற சந்திப்பாக நடந்தது.

எப்படி இருந்தது சந்திப்பு?

சீனாவுடனான நெருக்கம் இந்தச் சந்திப்பின் நோக்கமாக இருந்தாலும், காரில் இருந்து வேட்டி சட்டையில் மோடி இறங்கிய கணம் முதலே தமிழர்களையும் கருத்தில்கொண்டே களமிறங்கியிருக்கிறார் மோடி என்பது எல்லோருக்குமே புரிந்தது.

11-ம் தேதி மாலை ஆரம்பித்த இரு தலைவர்களின் சந்திப்பு 12-ம் தேதி மதியம் 1 மணிக்கு, கோவளத்திலிருந்து ஜின்பிங் புறப்பட்டதோடு நிறைவடைந்தது. ஒவ்வொரு இடத்தையும் ஜின்பிங்கிற்கு மோடியே பர்சனலாக விளக்கி சுற்றிக் காட்டினார். இறுதியில் வாசல்வரை வந்து அவரே வழியனுப்பியும் வைத்தார்.

பார்த்துப் பார்த்துப் பண்ணின இந்த மோடியின் விருந்தோம்பலில் ஜின்பிங் செம ஹேப்பியாகிவிட்டார் என்பது இரண்டாம் நாளில் தெரிந்தது. முதல்நாள் இறுக்கமான முகத்தோடு இருந்த ஜின்பிங், இரண்டாவது நாள் சிரித்த முகத்துடன் இலகுவான உடல்மொழியுடன் காணப்பட்டார்.

12-ம் தேதி காலை தான் தங்கியிருந்த ஹோட்டலின் பின்புறம் உள்ள கடற்கரையில் வாக்கிங் சென்றார் மோடி. அங்கிருந்த குப்பைகளை அள்ளி ஹோட்டல் ஊழியரிடம் கொடுத்து அதைத் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். சமூக வலைதளங்களில் இதுகுறித்து விவாதங்கள் கிளம்பின. அதன்பிறகு ஜின்பிங் கோவளம் வந்தார். அங்கே மோடி தங்கியிருந்த ஹோட்டலில் ஒரு கண்ணாடி அறைக்குள் அமர்ந்து சில நிமிடங்கள் இருவரும் தனிமையில் உரையாடினர். அவர்களோடு மொழி பெயர்ப்பாளர்கள் மட்டும் உடனிருந்தனர்.

நட்பின் கரம் நம்பிக்கை தருமா?

பின் அதிகாரிகளுடன் இரு தலைவர்களும் கலந்துகொண்ட ஒரு கூட்டமும் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மோடி ‘மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன்’ என்று தமிழில் பேசி ‘உலகின் தொன்மையான தமிழ்மொழியில் உங்களை வரவேற்கிறேன்’ என்று ஜின்பிங்குக்குத் தமிழைப் பற்றியும் எடுத்துரைத்தார். பின், ஜின்பிங் உருவம் நெய்யப்பட்ட பட்டுத்துணி ஒன்றை மோடி சீன அதிபருக்குப் பரிசளித்தார். சீனத் தொழில்களுக்கு இந்தியாவில் முதலீட்டு வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையைச் சீனா முன்வைத்துள்ளதாகவும், சீன வங்கிகள் இந்தியாவின் தொழில் அதிபர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியத் தரப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் சாதக பாதகங்கள் இனி பாகிஸ்தானுக்கு நெருக்கடியாக அமையும் என்கிறார்கள். நெருக்கடி சின்னத்தம்பி பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, பெரியண்ணன் அமெரிக்காவுக்கும்தான். அவரும் இதைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். ட்ரம்ப்பின் எதிர்வினை எப்படி இருக்கப்போகிறது என்பதைக் கணிக்கவே முடியாது.

இவ்வளவையும் தாண்டி மிகச்சிறப்பாக நடந்து முடிந்திருக்கிற இந்தச் சந்திப்பு இந்தியா-சீனாவின் எதிர்கால வர்த்தக வளர்ச்சிக்கும் பிராந்திய உறவுகளை வலுப்படுத்துவதற்கும் எல்லைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் உதவ வேண்டும். அதுவே இந்தச் சந்திப்பை அர்த்தமுள்ளதாக்கும்.