தமிழ்நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் சட்டத் திருத்த மசோதா, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன்படி, ‘இனி தொழிலாளர்கள் வாரத்துக்கு 48 மணி நேர வேலையை தினமும் 12 மணி நேரம் என்ற அடிப்படையில் நான்கு நாள்கள் செய்ய வேண்டும். மீதமுள்ள மூன்று நாள்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்’ என்று தமிழ்நாடு அரசு கூறுகிறது.

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு கொண்டுவந்திருக்கும் இந்தச் சட்டத் திருத்த மசோதாவை தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளே கடுமையாக எதிர்க்கின்றன. மற்ற எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இதைக் கடுமையாக எதிர்க்கின்றன. இந்த மசோதாவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தி.மு.க அரசை வலியுறுத்தியிருக்கின்றனர்.
இந்த நிலையில், இந்த மசோதா குறித்து முக்கியத் தொழிற்சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு இன்று (ஏப்ரல் 24) மாலை 3 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது. ஆனாலும், தொழிற்சாலை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்சங்கங்கள் மே 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றன.
இந்த மசோதாவுக்கு எதிராகப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதைச் சட்டரீதியாக எதிர்க்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்றால் என்னவாகும் என்ற கேள்வியை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ச.சிவக்குமாரிடம் முன்வைத்தோம்.
“நம் நாட்டில், 8 மணி நேர வேலை என்கிற சட்டம் நடைமுறையில் இருந்தாலும், அதைவிடக் கூடுதலான நேரம் வேலை செய்கிற நிலைமையும் இங்கு இருக்கிறது. அதற்கான, கூடுதல் ஊதியத்தை நிர்வாகம் வழங்கிவிடும். அதை, ‘மிகை நேர வேலைக்கு மிகை ஊதியம்’ என்கிற அந்த நடைமுறை பல இடங்களில் இருந்துவருகிறது. இப்போது, 12 மணி நேர வேலை என்பதைச் சட்டரீதியாக தமிழ்நாடு அரசு கொண்டுவருகிறது. இதனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அடிமை முறை மீண்டும் வந்துவிடும்.
இன்றைய காலகட்டத்தில், பல மேற்குலக நாடுகளில் 8 மணி நேர வேலையை 7 மணி நேரமாகக் குறைத்திருக்கிறார்கள். இன்னும் வேலை நேரத்தைக் குறைப்பது பற்றி பல நாடுகளில் ஆலோசனைகள் நடைபெறுகின்றன. அதற்கு மாறாக, இந்தியாவில் வேலை நேரத்தை அதிகரிக்கும் முயற்சிகள் நடப்பது மிகவும் கவலைக்குரியது. மேற்குலக நாடுகளில் வேலை நேரத்தைக் குறைக்கும்போது, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வேலை நேரத்தை அதிகரித்து, உழைப்புச் சுரண்டலை அதிகரிப்பதற்கான முயற்சிகள் நடப்பதன் பின்னணியில் பன்னாட்டு நிறுவனங்களும் சுயநல அரசியல்வாதிகளும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
நம் நாட்டில் தொழில் தொடங்க வருகிற பன்னாட்டு நிறுவனங்கள், நம் நாட்டு அரசிடம் பல நிபந்தனைகளை விதிக்கின்றன. அப்படியான நிபந்தனைகளை ஏற்றுத்தான், அந்த நிறுவனங்களுக்கு சில சௌகரியங்களைச் செய்துகொண்டு தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கிறது. தன்னுடைய குடிமக்களின் நலன்களை முன்னிறுத்தி உரிய சௌகரியங்களைச் செய்துகொடுப்பதற்கு பதிலாக, பன்னாட்டு நிறுவனங்களின் நிபந்தனையை ஏற்று, தன்னுடைய மக்களைக் கசக்கிப்பிழிய அனுமதிப்பது மிகவும் தவறு.

விருப்பம் இருப்பவர்கள் மட்டுமே 12 மணி நேரம் வேலை செய்யலாம் என்றும், இது அனைத்துத் துறைகளுக்கும் கிடையாது என்றும் அரசு கூறுகிறது. எல்லோரையும் நிர்பந்தம் செய்யவில்லை என்றும் அரசு சொல்கிறது. இது, கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், 12 மணி நேரம் வேலை செய்ய யாரெல்லாம் தயாராக இருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டும்தான் வேலை என்ற நிலைமை எதிர்காலத்தில் வந்துவிடும். மேலும், எல்லா இடங்களிலும் அப்படிப்பட்ட நிலைமை வந்துவிடும் என்ற ஆபத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று எச்சரிக்கிறார் வழக்கறிஞர் ச.சிவக்குமார்.
மேலும் அவர், “மத்திய பா.ஜ.க அரசு, ஆலைகள் சட்டத்தில் ஏராளமான திருத்தங்களைக் கொண்டுவருகிறது. மொத்தம் 44 தொழிலாளர் சட்டங்கள் இருந்த நிலையில், அவற்றில் பல திருத்தங்கள் செய்து நான்கு சட்டங்களுக்குள் சுருக்குகிறார்கள். அதில், ஏற்கெனவே போராடிப்பெற்ற பல உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அதை, தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். ஆனால், இன்றைக்கு அவருடையே அரசே அத்தகைய காரியத்தைச் செய்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து, குடிமக்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டுவருவது, நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோது இருந்த நிலைமைக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்... இறையாண்மைமிக்க நாடாக இருக்கும்போது, பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளின் நலனுக்கு துணைபோகிறீர்கள்... இந்தியக் குடிமக்களின் நலன்களைத்தானே அரசு பிரதிபலிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களைப் பிரதிபலித்தால், அது காலனிய அரசாகத்தான் பார்க்கப்படும்” என்கிறார்.
இந்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்றால், மசோதா நிற்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர் சிவக்குமார், “இந்தியாவில் 1950-கள் முதல் 1975-ம் ஆண்டுவரை ஜனநாயகபூர்வமாகவும், தொழிலாளர் நலன்கள் அடிப்படையிலும் நீதிமன்றத் தீர்ப்புகள் வந்தன. 1975 முதல் 1991 வரை அவசரநிலை போன்ற நெருக்கடியிலிருந்து மீண்டுவந்த சூழலில், வேறு மாதிரியான தீர்ப்புகள் தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகளில் வழங்கப்பட்டன. 1991-க்குப் பிறகு, உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் அமலுக்கு வந்த பிறகு, தொழிலாளர்கள் தொடர்பான பெரும்பாலான வழக்குகளில் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்புகள் வந்திருக்கின்றன.

இத்தகைய சூழலில், 12 மணி நேர வேலைக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்றால், எப்படிப்பட்ட தீர்ப்பு வரும் என்று சொல்ல முடியாது. வியக்கத்தக்க கேள்விகளை நீதிமன்றம் எழுப்பும். ‘இந்தக் காலத்தில் வேலை கிடைக்கிறதே பெரிய விஷயம்... எத்தனை பேர் வேலை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்... உனக்கு வேலை கிடைக்கிறபோது, வேலை செய்ய என்ன சோம்பேறித்தனம்... பிற மாநிலத் தொழிலாளர்கள் இங்கு வந்து 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யவில்லையா...’ என்கிற ரீதியிலான கேள்விகளை நீதிமன்றம் எழுப்புவதற்கு வாய்ப்பிருக்கிறது” என்று கூறும் வழக்கறிஞர் ச.சிவக்குமார், “இந்தப் பிரச்னைக்கு மக்கள் போராட்டம்தான் தீர்வாக இருக்கும்” என்கிறார்.
இதற்கிடையே, இந்தச் சட்டத்தை விரைவில் வாபஸ் வாங்கும் முடிவில் அரசு இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது!