Election bannerElection banner
Published:Updated:

18 எம்.எல்.ஏ-க்கள் பதவியை ரத்துசெய்த சபாநாயகர், 11 பேருக்கு தயக்கம் காட்டுவது ஏன்?

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் ( 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் பற்றிய தீர்ப்பு )

சசிகலாவின் பதவி மோகம், ஓ.பி.எஸ்-ஸின் தர்மயுத்தம், எம்.எல்.ஏ-க்களுடன் பேரங்கள், யாரும் எதிர்பார்க்காத எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவி, அதைத் தக்கவைக்க எடப்பாடி செய்த வியூகங்கள் என ஒரு சுவாரஸ்யமான திரைப்படத்தின் எல்லா அம்சங்களும் அந்தச் சூழலில் தமிழக அரசியலில் இடம்பெற்றன.

ஜெயலலிதா மறைந்த துயரத்தின் வலியைவிட, அவரின் அரியணையைக் கைப்பற்றுவதற்காக அ.தி.மு.க-வில் நடந்த களேபரங்களும் அதிகார மோதல்களுமே அக்கட்சியின் தொண்டனுக்கு அதிகமான வலியைத் தந்தன. சசிகலாவின் ஒப்பனை, ஓ.பி.எஸ்ஸின் தர்ம யுத்தம், கூவத்தூர் கூத்துகள், சட்டென வந்த சிறைவாசம், எதிர்பாராமல் எடப்பாடி பழனிசாமிக்கு அடித்த அதிர்ஷ்டம் என சுவாரஸ்யமான ஒரு திரைப்படத்தின் எல்லா அம்சங்களும் அந்தச் சூழலில் தமிழக அரசியலில் அரங்கேறின.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்
11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்

அதற்குப் பின் தமிழக அரசியலில் நடந்ததெல்லாம் அ.தி.மு.க ஆட்சி–பார்ட் 3. இன்றைக்கு இனம்புரியாத புன்னகையைச் சுமந்துகொண்டே எடப்பாடியுடன் நிற்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தான், அப்போது எடப்பாடி அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்தார். ’கில்லி’ படத்து வில்லனைப்போல ‘தமிழ்நாடே என் பின்னாடி நிற்கும்’ என்று அவர் சொன்னதை நம்பி பி.ஜே.பி-யும் பின்னணியில் இருந்தது. அவரை நம்பி மொத்தமாய் வந்ததே பத்துப்பேர்தான். பத்தோடு பதினொன்றாக நின்றார் பன்னீர்.

அரசு தலைமைக் கொறடாவின் உத்தரவை மீறி, இவர்கள் அரசுக்கு எதிராக அன்று வாக்களித்தார்கள். ஆனாலும் பெரும்பான்மை காரணமாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தொடர்ந்தார். அரசுக்கு எதிராக வாக்களித்த இவர்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டுமென சபாநாயகரிடம் தி.மு.க சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கையை சபாநாயகர் பொருட்படுத்தாததால், தி.மு.க எம்.எல்.ஏ சக்கரபாணியும் அப்போது அ.ம.மு.க-வில் இருந்த தங்க தமிழ்ச்செல்வனும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.

பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் செயல்பட முடியாது எனக் கூறி, இந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதற்கடுத்து, இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு தி.மு.க-வும், அ.ம.மு.க-வும் கொண்டுபோக, அங்கேதான் ஆண்டுகள் கடந்து நிற்கிறது வழக்கு. வழக்கை விசாரித்த நீதிபதி சிக்ரி, கடந்த மார்ச் ஏழாம் தேதியன்று ஓய்வுபெற்றுவிட, அதற்குப் பின் நகரவேயில்லை. எப்படியாவது வழக்கை விரைவுபடுத்தி 11 பேருடைய பதவியையும் காலி செய்ய வேண்டுமென்று, தி.மு.கவும் தீவிர முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. தி.மு.க-வின் கோரிக்கையைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிசீலனைக்கு ஏற்றார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
விகடன்

பல நாள்களுக்குப் பின், தமிழக அரசியலில் பரபரப்பு கூடியது. அதன்படி இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.ஏ பாப்தே. பி.ஆர் காவாய் ஆகியோரின் கீழ் நேற்று (03–07–2019) விசாரணைக்கு வந்தது. விசாரணையின் அடுத்தகட்டம் என்னவாக இருக்குமோ என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தற்போது வழக்கை ஒத்திவைத்திருக்கிறார்கள் நீதிபதிகள்.

எப்படியோ, 11 எம்.எல்.ஏ-க்களின் பதவி தற்காலிகமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இதே சட்டசபையில், இதே கட்சியிலிருந்து அரசுக்கு எதிராக அதிருப்தியோடு வெளியேறி, முதல்வரை மாற்றுமாறு ஆளுநரிடம் மனு கொடுத்த 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர். அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. ஆனால், இந்த 11 பேர் பதவி தொடர்பான வழக்கு மட்டும் கானல் நீராக தள்ளிக்கொண்டேபோகிறது. விசாரணை முடிவடைந்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேருடைய பதவிகள் காப்பாற்றப்படுமா அல்லது காலியாகுமா என்பதுதான் தமிழக மக்களின் தலையாய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஒருவேளை இவர்களின் பதவி பறிக்கப்படும்பட்சத்தில், அ.தி.மு.க ஆட்சியின் பெரும்பான்மை குறைந்துவிடும் என்பதால், ஆட்சி கவிழ வாய்ப்பு உண்டு என்பதே இந்த எதிர்பார்ப்புக்கான முக்கியக் காரணம்.

அப்படியே பதவி பறிக்கப்பட்டாலும், குட்கா வழக்கில் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிப்பதற்கான அடுத்த ‘மூவ்’ ஆரம்பமாகுமென்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். அப்படியொரு நகர்வு நடந்தால், அதையும் தி.மு.க சட்டரீதியாக எதிர்கொண்டு போராடும். ஆக மொத்தத்தில், சட்டத்தின் கையில்தான் இருக்கிறது இந்த 11 மற்றும் அந்த 21 சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்காலம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு