Published:Updated:

அழகிரியின் அடுத்த திட்டம்... என்ன சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்?

அழகிரியின் திட்டம் என்ன?
அழகிரியின் திட்டம் என்ன?

தன்னை தி.மு.க-விலிருந்தும் கட்சியினரிடமிருந்தும் விலக்கி ஸ்டாலின் சாதித்துவிட்டார். அதனால், இனி எதைப்பற்றியும் பேசாமல் இருக்க முடிவு செய்துவிட்டார் அண்ணன்.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க அடைந்த மிகப்பெரிய வெற்றி அ.தி.மு.க., பி.ஜே.பி-யினரை வாயடைக்க வைத்ததோ, இல்லையோ முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை அமைதியாக்கிவிட்டது. தனக்குப் பின்னால் ஒரு பெருங்கூட்டம் உள்ளது என்று ஒவ்வொருமுறையும் தி.மு.க தலைமையிடம் சண்டை இழுத்துக்கொண்டிருந்த அழகிரியை, ஒரேயடியாக ஓய்வில் இருக்கவைத்துவிட்டார் அக்கட்சியின் தலைவரும், சகோதரருமான மு.க.ஸ்டாலின்.

அழகிரி
அழகிரி

கடந்தகாலங்களில் மாதம் ஒருமுறை என்ற கணக்கில் தி.மு.க. தலைமை பற்றி ஏடாகூடமாக எதையாவது சொல்லி ஸ்டாலினை எரிச்சல் படுத்திக்கொண்டிருந்த அழகிரி, தேர்தல் முடிவுக்குப்பின் அப்படியே ஜென் நிலைக்குச் சென்றுவிட்டார்.

"என்னாச்சு அழகிரிக்கு, சத்தத்தையே காணோம்?" என்று அவருடைய ஆதரவாளர்களிடம் கேட்டால், "அதையேதான் நாங்களும் கேட்கிறோம். யாரிடமும் எதுவும் பேச மாட்டேங்கிறார். சென்னையிலுள்ள மகன் துரை வீடு, மதுரை வீடு என்று மாறிமாறி இருந்துவருகிறாரே தவிர, அரசியலில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி எந்த முடிவும் எடுக்க மறுக்கிறார். 'அண்ணே ஏதாவது முடிவெடுங்கள்' என்று நாங்கள் கேட்டால், 'அமைதியாக இருங்கள்...' என்று மட்டும் சொல்கிறார்.

அழகிரி
அழகிரி

அஞ்சு வருஷம் ஓடிப்போயிடுச்சு. நாங்கள் இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே இருக்குறதுன்னு தெரியலை. தென் மண்டல தி.மு.க தலைவராகவும் மத்தியில் கேபினட் அமைச்சராகவும் இருந்த எங்கள் அண்ணனை, ரஜினி கட்சியில் சேரப்போகிறார்; பி.ஜே.பி-யில் சேரப்போகிறார் என்று ஒரு வட்டச் செயலாளர் ரேஞ்சுக்குச் சிலர் தகவல்களைப் பரப்பிவிட்டு எங்களை ரொம்பவும் மனச்சோர்வு அடைய வைக்கிறார்கள்'' என்று தம்பிகள் ஃபீல் ஆகிப் பேசுகிறார்கள்.

மதுரையில் இருந்தால் அபூர்வமாக ஆதரவாளர்களின் திருமணம், காதணி விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை மட்டும் வேலைத் திட்டமாக வைத்திருக்கிறார். ஏற்கெனவே, தி.மு.க-வில் பொறுப்புக்கு வந்த நிர்வாகிகள், தேர்தலில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் பற்றி அதிருப்தி தெரிவித்துப் பேசியவர், சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டது பற்றி எந்த நேரடி கருத்தையும் கூறாதது அரசியல் பார்வையாளர்களையே விழிவிரிய வைத்துள்ளது.

ஸ்டாலின், மு.க.அழகிரி
ஸ்டாலின், மு.க.அழகிரி

தி.மு.க ஆட்சியில் இருந்தகாலத்தில், தென் மண்டலத்தில் மாவட்டச் செயலாளர்கள் எல்லோரும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தனர். அவர் கை காட்டுகிற ஆட்களுக்கே கட்சிப் பதவி, தேர்தலில் வாய்ப்பு கிடைக்குமென்ற நிலை இருந்தது. இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கு திருமங்கலம் ஃபார்முலாவை உருவாக்கி அனைவரையும் கிடுகிடுக்கவைத்தவர் அழகிரி. அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி அவருடன் வலம்வந்த விழுதுகளும் தங்களுடைய பராக்கிரமச் செயல்களால் மதுரை உட்பட தென் மாவட்டங்களில் தி.மு.க-வுக்கு எந்தளவுக்கு கெட்டபெயரை ஏற்படுத்த முடியுமோ அந்தளவுக்கு ஏற்படுத்தினார்கள்.

அழகிரியின் வலதுகரமான பொட்டு சுரேஷ், மற்றொரு விசுவாசியான அட்டாக் பாண்டி தரப்பால் வெட்டிக் கொல்லப்பட்டதும் வினைப்பயன் தொடங்கியது. அதிலிருந்து அழகிரியின் அதிகாரவட்டம் சுருங்கியது. முக்கிய நிர்வாகிகளான ஜெயராமன், எஸ்ஸார் கோபி, மிசா பாண்டியன், கோ.தளபதி, பி.மூர்த்தி, தங்கம் தென்னரசு, தமிழரசி ஆகியோர் ஸ்டாலின் அணிக்குத் தாவினார்கள். எஞ்சியிருந்த ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. மதுரை குலுங்க குலுங்கப் பிரமாண்டமாக நடந்துவந்த அழகிரியின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்கள் தெருக்களுக்குள் முடங்கின.

அழகிரி
அழகிரி

கடந்த 2014-ல் அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அதற்காக மறைந்த முன்னாள் முதல்வரும், அப்போதைய தி.மு.க. தலைவருமான கருணாநிதியிடம், கோபத்துடன் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்டார், அழகிரி. அதற்குப்பின் வெகுண்டு எழுந்து, தலைமையை எதிர்த்து தொலைக்காட்சியில் பேட்டியளித்தார். அப்படியும் அவரை சேர்க்க ஒப்புக்கொள்ளவில்லை, ஸ்டாலின். அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிராகப் போட்டியிட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அத்தேர்தலில் தி.மு.க. மோசமான தோல்வியடைந்ததும் ''என்னை ஒதுக்கினால் இதுதான் நிலை'' என்று பயமுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து, "2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க தோற்கும்" என்றார். ஆனால், பெரிய அளவில் தோல்வி இல்லாததால், ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. உறவினர்கள், நண்பர்கள் மூலம் மீண்டும் தி.மு.க-வில் சேரத் தூதுவிட்டுப் பார்த்தும் பலனில்லாததால், "தி.மு.க-வை ஸ்டாலின் குடும்பம் பின்னாலிருந்து இயக்குகிறது" என்று கூறினார். ஆனால், அதற்கும் ஸ்டாலினிடமிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை. இந்த நிலையில்தான் கருணாநிதியின் மரணத்துக்குப்பின் தி.மு.க-வில் தனக்கொரு பொறுப்பு கிடைக்கும் என்று நினைத்தார், அழகிரி.

கருணாநிதி, அழகிரி
கருணாநிதி, அழகிரி

ஆனால், சட்டையே செய்யவில்லை, தி.மு.க. அதோடுதான் கடுப்பாகி, ஒரு மாதம் கழித்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தன்னுடைய ஆதரவாளர்களைத் திரட்டி சென்னையில் அமைதி ஊர்வலம் நடத்தினார். அப்பாடா, நமக்கு விடிவுக் காலம் பிறக்கப்போகிறது என்று ஆதரவாளர்கள் ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அது ஒன்றுதான், அழகிரி நீண்டகாலத்துக்குப்பின் பெரிய அளவில் கூட்டிய ஆதரவாளர் கூட்டம். 'விரைவில் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்' என்று கருணாநிதி சமாதியில் நின்று கூறிவிட்டு மதுரை வந்தவர்தான், அதற்குப்பின் எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்காமல் மெளனகுருவாக மாறிவிட்டார்.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்புகூட தி.மு.க. தோல்வி அடையும் என்பதுபோலச் செய்தியாளர்களிடம் கூறினார். இப்படி அவர் அதிரடியாகப் பேசியது அவருடைய ஆதரவாளர்களுக்குக்கூடப் பிடிக்கவில்லை. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சிலர் தி.மு.க-வுக்கு வேலை செய்தார்கள். அழகிரியின் சாபம் பொய்த்தது. தேர்தல் வெற்றி தோல்விக்கு அவர் ஒரு காரணியில்லை என்ற பேச்சு, கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களிடமும் எழுந்தது.

அழகிரி
அழகிரி

பி.ஜே.பி-யை எதிர்க்கக் கூடாது என்ற மனநிலையில் இருந்ததால்தான் அவர் அப்படிக் கூறியதாகக் கூறப்பட்டது. காரணம், மகன் துரை தயாநிதி மீது ரொம்பவும் பாசம் கொண்டவர். துரை, மதுரையில் இருந்தால் தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடுவார் என்று அப்போதே சென்னையில் செட்டிலாக வைத்தார். 'கிளவுட் நைன்' என்று திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க வைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது போடப்பட்ட கிரானைட் குவாரி வழக்கில் துரையை கைது செய்யப் பார்த்தார்கள்.

அதைப் பெரும்பாடுபட்டு நிறுத்தினார். அந்த வழக்கு, தற்போதும் நிலுவையில் இருந்துவருகிறது. அந்த வழக்கின் தொடர்ச்சியாகச் சில மாதங்களுக்கு முன், துரை தயாநிதி பேரிலுள்ள 40 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கிவைத்துள்ளது. இது, அழகிரியை முற்றிலுமாக முடக்கியது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அமலாக்கத் துறை, மகன்மீது வேறு எந்த நடவடிக்கையும் எடுத்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர் தவிப்பதாகச் சொல்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஸ்டாலின், அழகிரி
ஸ்டாலின், அழகிரி

ஸ்டாலின் தன் மகன் உதயநிதியை திரைப்படத் துறையிலும், முரசொலி அறக்கட்டளையிலும், உயர்ந்த இடத்துக்கு கொண்டுவந்து தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் ஆக்கிவிட்டார். ஆனால், யார் யாரையோ பெரிய இடத்துக்குக் கொண்டுவந்த தன்னால், தன் ஒரே மகனை உயர்ந்த இடத்தில் வைக்க முடியவில்லையே என்ற ஆற்றாமையை நெருங்கிய நண்பர்களிடம் வெளிப்படுத்தி வருகிறாராம், அழகிரி.

"தி.மு.க-விலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட பலபேரை மீண்டும் இணைய வைத்த தன்னை, ஐந்தாண்டுகளாகியும் கட்சியில் இணைக்க மறுக்கிறார்களே என்ற கவலை அவரைப் பிடித்து ஆட்டுகிறது. தன்னை தி.மு.க-விலிருந்தும் விலக்கி, கட்சியினரிடமிருந்தும் விலக்கி ஸ்டாலின் சாதித்துவிட்டார். அதனால், இனி எதைப்பற்றியும் பேசாமல் இருக்க முடிவு செய்துவிட்டார் அண்ணன்" என்று அவரின் ஆதரவாளர்கள் புலம்பித் தீர்க்கின்றனர்.

இதுபற்றி அழகிரியின் கருத்தை அறிய அவர் வீட்டுக்குச் சென்றால், 'சார், யாரையும் பார்க்க முடியாது என்று கூறிவிட்டார்' என்று அங்குள்ள காவலர்கள் விரட்டுகிறார்கள். அவருக்கு போன் செய்தால் எடுக்க மறுக்கிறார். மெசேஜ் அனுப்பினால் பதில் தருவதில்லை.

கடந்த 14-ம் தேதி தெற்குவாசல் பகுதி ஆதரவாளர் வீட்டுத் திருமணத்துக்கு வந்தவரை செய்தியாளர்கள் கேட்டும் எந்தப் பதிலும் சொல்லவில்லை. நாம், அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு "உங்களுடைய அரசியல் திட்டம்தான் என்ன?" என்று கேட்டதற்குப் பதில் கூறாமல் நம்மை ஏற இறங்கப் பார்த்தவர், கனத்த மௌனத்தைப் பதிலாகத் தந்துவிட்டு காரில் ஏறினார்.

அந்த மெளனத்திற்கான அர்த்தத்தைக் காலம்தான் உணர்த்த வேண்டும்.

பின் செல்ல