ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநிலத்தின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப்பில் `வீடு தேடி ரேஷன்' திட்டத்தை அறிமுகப்படுத்திய பக்வந்த் மானுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். அதையடுத்து, ``டெல்லியில் நாங்கள் நான்கு ஆண்டுகளாக இத்திட்டத்தைக் கொண்டுவர முயல்கிறோம், ஆனால் மத்திய அரசு தடுத்துவருகிறது” எனக் குற்றம் சாட்டியிருந்தார், இந்த நிலையில், தனியார் ஊடகப் பேட்டியொன்றில், ``பாஜக, காங்கிரஸுக்கு எதிராக நான் இங்கு இல்லை. நான் நினைப்பதெல்லாம் நாட்டைப் பற்றி மட்டுமே" என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

தொடர்ந்து, ``நான் இன்னும் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்க்கவில்லை. அவர்களுக்கு (காஷ்மீர் பண்டிட்) மறுவாழ்வுதான் தேவை, படம் அல்ல. நமது அரசு மத்தியில் அமைந்தால், உங்களைப் பற்றிப் படம் எடுப்பதற்கு பதிலாக, உங்கள் கைகளைப் பிடித்து காஷ்மீரிலுள்ள உங்கள் வீட்டில் இறக்கிவிடுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.
ராமாயணம் மற்றும் கீதையில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ, அதுதான் இந்துத்துவா. ராமர் யாருக்கும் பகைமையைக் கற்பிக்கவில்லை. நான் ஏன் அவரை (மோடி) கேலி செய்ய வேண்டும்? அவர் என்னுடைய மற்றும் நாட்டின் பிரதமர். எனக்கு யாருடனும் பகை இல்லை. பாஜக, காங்கிரஸ், மோடி ஜி, சோனியா ஜி அல்லது ராகுல் காந்திக்கு எதிராக நான் இங்கு இல்லை. நான் நினைப்பதெல்லாம் நாட்டைப் பற்றி மட்டுமே. மக்களுக்கு சேவை செய்யவே அவர்களுக்கு (பாஜக) அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆணவத்தைக் காட்டுவதற்கு அல்ல. நாங்கள் 130 கோடி மக்கள் கொண்ட கூட்டணியை உருவாக்குவோம்" என அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
