Published:Updated:

ஒண்ணு போனா இன்னொண்ணு... மாரிதாஸ்மீது குவியும் வழக்குகள் - பின்புலம் என்ன?

மாரிதாஸ்
News
மாரிதாஸ்

மாரிதாஸ்மீது ஒரு வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் மற்றொரு வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

சமீபத்தில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக யூடியூபர் மாரிதாஸ் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தைப் பதிவு செய்திருந்தார். அவரின் கருத்து பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் இருப்பதாக மதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், மதுரை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் மதுரை காவல்துறையினர் 124-A, 153-A , 504, 505 (1) b, 505 (2) ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, மாரிதாஸைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

மாரிதாஸ்
மாரிதாஸ்

ஏற்கெனவே, கைதுசெய்யப்பட்டு சிறையிலிருக்கும் நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் போலியான மின்னஞ்சல் ஆவணங்களைத் தயாரித்தது தொடர்பான வழக்கில் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்து சர்ச்சை தொடர்பான வழக்கில், தன்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாரிதாஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஹெலிகாப்டர் விபத்து சர்ச்சை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், தனியார் தொலைக்காட்சி வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் இன்னும் சிறையில்தான் இருக்கிறார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மாரிதாஸ் தரப்பிலிருந்து ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மாரிதாஸ் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவ காரணம் தப்லீக் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் என்ற வகையில் பேசியிருந்தார்.

மாரிதாஸ்
மாரிதாஸ்

இவரின் பேச்சு இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுகிறது. சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்துகிறது என்று நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், 292A, 295A, 505 (2) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகிய நான்கு பிரிவுகளில் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குத் தொடர்பாக, தேனி சிறையிலிருந்த மாரிதாஸ் மீண்டும் கைதுசெய்யப்பட்டு நெல்லை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி மாரிதாஸை வரும் டிசம்பர் 30-ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவிட்டார். அதன்படி, பாளையங்கோட்டைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி மாரிதாஸ் தொடர்ந்து கைதுசெய்யப்படுவது தொடர்பாக, தமிழக பா.ஜ.க கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``தி.மு.க, அரசின்மீது வைக்கப்படும் விமர்ச்சனங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படிக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. மாரிதாஸ் அனைத்துத் தரப்பினருக்கும் எளிமையாகப் புரியும்படி ஒரு செய்தியை விளக்குகிறார். தங்களின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க அரசு இப்படித் தொடர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தங்களை விமர்சிப்பவர்களை அடக்க வேண்டும் என்ற ஓர் எண்ணத்தை தி.மு.க கொண்டிருக்கிறது. இது மிகவும் தவறானது மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது" என்றார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

மேலும், ``மாரிதாஸ் பா.ஜ.க-வைச் சேர்ந்த உறுப்பினர் கிடையாதுதான். இருந்தாலும், ஓர் அநியாயம், அராஜகம் நடக்கும் நேரத்தில் அவருக்குத் துணை நிற்க வேண்டாமா? ஜனநாயகம் நசுக்கப்படும் நேரத்தில் அதற்காகக் குரல்கொடுப்பதில் என்னத் தவறிருக்கிறது. தற்போது மாரிதாஸ் தி.மு.க ஆட்சியில் இல்லாத சமயத்தில் பதியப்பட்ட ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். சட்டப்படிதான் தி.மு.க நடவடிக்கை எடுக்கிறது என்றால், நானே தி.மு.க உறுப்பினர்கள், தி.மு.க தோழமைக் கட்சி உறுப்பினர்களின் மீது பல்வேறு வழக்குகளைப் பதிவுசெய்திருக்கிறேன். வழக்கு பதிவுசெய்யப்பட்ட அனைவரும் கைதுசெய்யப்படுவார்களா? குறிப்பாக மாரிதாஸ் கைதுசெய்யப்படுகிறார் என்பதற்கு, அவரின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாததும், அதைப் பொறுத்துக்கொள்ள முடியாததும் மட்டுமே காரணம். இந்தப் போக்கை திமுக கைவிட வேண்டும்" என்று பேசினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``மாரிதாஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் என்ன சம்பந்தம்? அவரைக் கைதுசெய்ததற்கு பா.ஜ.க ஏன் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவருகிறது. இது ஓர் அரசியல் பித்தலாட்டம். பா.ஜ.க-வினர் மாரிதாஸ் போன்றவர்களை இப்படி மறைமுகமாகப் பேசவைப்பதை விட்டுவிட்டு நேரடியாகப் பேசவைக்க வேண்டும். அதுமட்டுமின்றி மாரிதாஸ் மீது எங்களுக்கு என்ன காழ்ப்புணர்ச்சி வரப்போகிறது... அவர் தமிழ்நாட்டுக்கு யார்... அவர் சொன்னால் யார் கேட்கப்போகிறார்கள். இந்தச் சமூக வலைதளங்களிலுள்ள சிலரைத் தவிர யாருக்கு அவரைத் தெரியும்? அவர் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கே மாரிதாஸ் யார் என்று தெரியாது" என்று கூறினார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தொடர்ந்து பேசியவர், `` 10 பைசாவுக்குப் பிரயோசனம் இல்லாத மாரிதாஸை நாங்கள் ஏன் எதிர்க்கப்போகிறோம்... அவர்மீது எங்களுக்குக் காழ்ப்புணர்ச்சி வரவேண்டிய அவசியம் என்ன? அவர் பேசுவது முழுவதுமே பொய் மட்டும்தான். அவர்மீது ஒரு மோசடி வழக்கு பதியப்பட்டிருக்கிறது. அந்த வழக்கில் அவர் கைது செய்யப்படவேண்டியது அவசியம்தானே... அரசு தன்னுடைய கடமையைத்தான் செய்திருக்கிறது. மாரிதாஸைக் கைதுசெய்வதில் தி.மு.க-வுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது" என்றார்.