Published:Updated:

``புதுச்சேரியில்கூட நம்மால் வெற்றிபெற முடியவில்லையே?" - கட்சி நிர்வாகிகளிடம் குமுறிய ராமதாஸ்

தி.மு.க அரசை நான் விமர்சிக்கும்போதெல்லாம் தைலாபுரத்திலிருந்து தைலம் வந்துவிட்டது என்று கூறுவார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.

புதுச்சேரியில் பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பட்டானூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் ஜி.கே.மணி முன்னிலையில் நடந்த இந்தக் கூட்டத்தில் காரைக்காலில் படுகொலை செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர் தேவமணி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நிர்வாகிகளிடம் பேசிய ராமதாஸ், ``புதுச்சேரியில் நான் உழைத்த உழைப்பெல்லாம் வீணாகிப்போய்விட்டது. சிறிய பிரதேசமான புதுச்சேரியில் ஒருசில தொகுதிகளில்கூட நம்மால் வெல்ல முடியவில்லை. நாம் கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்த நிலையில், பலர் பதவியை அனுபவித்துவிட்டு நன்றி மறந்து சென்றுவிட்டனர்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் பா.ம.க ஆட்சிக்கு வர வேண்டும். கட்சியை பலப்படுத்த இனி நாம் அரசியல் செய்யாமல் பாசப்பிணைப்பையே ஏற்படுத்த வேண்டும். புதுவையை விட்டுவிட்டீர்களே எனப் பலரும் என்னைத் தொடர்புகொண்டு கேட்கின்றனர். 20 கிலோமீட்டர் தூரத்தில் புதுவையுடன் மிகவும் நெருக்கமாகவே இணைப்பில் இருக்கிறேன். முன்பு தி.மு.க அரசை நான் விமர்சிக்கும்போதெல்லாம் தைலாபுரத்திலிருந்து தைலம் வந்துவிட்டது என்று கூறுவார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அவர் கூறியதுபோல, புதுவைக்கு நான் அனுப்பிய தைலத்தைத் தலையில் தேய்த்துக்கொண்டு தலைவலி சரியாகிவிட்டது எனக் கட்சிப்பணி செய்யாமல் படுத்துவிட்டீர்கள்.

இதே மாநிலத்தில் என்னைக் கொலை செய்ய முயன்றனர். ஆனால், அன்று தப்பித்துவிட்டேன். புதுவையில் கொள்கை உடைய கட்சியாக பா.ம.க இருக்கிறது. மீண்டும் புத்துயிர் பெற்று வேகமாகச் செயல்பட்டு, புதுச்சேரியில் நான்கு தொகுதிகளிலும், காரைக்காலில் இரண்டு தொகுதிகளிலும் நாம் வெற்றிபெற வேண்டும்.

ராமதாஸ்
ராமதாஸ்

நாம் தனித்துப் போட்டியிட்டு இங்கு ஆறு தொகுதிகளில் வெற்றிபெற்றாலே ஆட்சிக்கு வர முடியும். கூட்டணியெல்லாம் வேண்டாம். அதை வெற்றிக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். அதற்காக வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரம் செய்யுங்கள். நாம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறக் கட்சியில் மாற்றமும் செய்யப்படுகிறது” என்றார்.

கவுன்சிலர் பதவிக்கு நிற்கக் கூட ஆளில்லை, நாம் ஏன் வளரவில்லை? -ஆலோசனைக் கூட்டத்தில் ராமதாஸ் ஆதங்கம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு