Published:Updated:

பெகாசஸ் விவகாரம்: அதிரவைக்கும் உண்மைகளும் ஆட்டம் காணும் பா.ஜ.க அரசும்!

சூடுபிடிக்கும் 'பெகாசஸ்' விவகாரம்
சூடுபிடிக்கும் 'பெகாசஸ்' விவகாரம்

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்டோரின் செல்போன்களை பெகாசஸ் என்ற ஸ்பைவேரைப் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் உண்மைகளும், பா.ஜ.க அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும் என்ன?

`பெகாசஸ்’ என்ற ஸ்பைவேர் மூலம் உலகின் முக்கியப் பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களின் செல்போன்களை அவர்கள் சார்ந்த நாட்டின் அரசாங்கமே உளவு பார்த்தது என்பதுதான் சமீபத்தில் உலக அரசியலை உலுக்கிக்கொண்டிருக்கும் செய்தி. 'பெகாசஸ் புராஜக்ட்' என்ற பெயரில் 'தி கார்டியன்' உள்ளிட்ட 16 ஊடங்கங்கள் நடத்திய ஆய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில் உலகம் முழுவதும் சுமார் 50,000-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 40 பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள், ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக `தி வயர்’ இணையப் பத்திரிகை கூறுகிறது. நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வோர் அரசாங்கமும் சந்தேகத்துக்குரிய சிலரின் செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் நடைமுறை இருக்கிறது என்றாலும், தற்போது வெளியான லிஸ்ட்டில் பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள் ஆகியோர் அடங்கியிருப்பதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பெகாசஸ்
பெகாசஸ்

பெகாசஸ் ஸ்பைவேர் ஒரு போனிலிருந்து நீக்கப்படும்போது அது பயன்படுத்தப்பட்டதற்கான தடையங்களும் சேர்ந்தே அழிந்துவிடும் என்பதால், இதனால் பாதிக்கப்பட்ட செல்போன்களைக் கண்டறிவது கடினமாக இருந்திருக்கிறது. தற்போது ஐபோன், சில ஆண்ட்ராய்டு போன்களில் பெகாசஸை நீக்கும்போது சில தடயங்களை அந்த ஸ்பைவேர் விட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது. இதைவைத்தே பெகாசஸ் ஹேக்கிங்கை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். பெகாசஸ் ஸ்பைவேரின் பின்னணியைக் கண்டு அச்சப்பட வேண்டிய காரணமும், பா.ஜ.க அரசுக்கு இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும் என்னென்ன?

'பெகாசஸ்' விவகாரம்: பி.கே, ராகுல் தொடங்கி முன்னாள் உச்சநீதிமன்ற பெண் ஊழியர் வரை நீளும் பட்டியல்...

அதிரவைக்கும் உண்மைகள்

பெகாசஸ் ஸ்பைவேரை செல்போனுக்குள் செலுத்தியவுடன் கால், மெசேஜ், என்கிரிப்ட் டெக்ஸ் உள்ளிட்டவற்றை மட்டுமல்ல... மைக்ரோபோன், கேமரா முதலானவற்றையும் நமக்குத் தெரியாமலேயே இயக்க முடியும் என்கிறார்கள். இஸ்ரேல் அரசு இதை `இணையவழி ஆயுதம்’ என்றுதான் அழைக்கிறது. அந்த அளவுக்கு எளிதாக ஊடுருவி ஒருவரின் அந்தரங்கத்தைத் தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல, பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 12-க்கும் மேற்பட்டோரின் செல்போன்களில் இந்த பெகாசஸ் ஸ்பைவேர் புகுத்தப்பட்டிருக்கிறது. டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சையத் ரகுமான் கிலானி, அமித் ஷா மகன் நிறுவனத்தின் பண மோசடி தொடர்பாக ஆய்வு செய்து செய்திகள் வெளியிட்டவர், பியூஷ் கோயல் தொடர்பான செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர், ரஃபேல் ஊழல் மற்றும் காஷ்மீர் பிரச்னைகள் உள்ளிட்ட மிகவும் சென்சிட்டிவான விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து செய்திகள் வெளியிட்ட ஊடகவியலாளர்களின் செல்போன் எண்கள் வேவு பார்க்கப்பட்டுள்ளன.

ராகுல் காந்தி - பிரசாந்த் கிஷோர்
ராகுல் காந்தி - பிரசாந்த் கிஷோர்

முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கோகோய் மீது குற்றம்சாட்டிய பெண், அவருடைய உறவினர்களின் எண்களும் உளவு பார்க்கப்பட்டோர் பட்டியலில் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் செல்போனும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஹேக் செய்யப்பட்டதாக வெளியான ஒவ்வொருவரும் மத்திய அரசுடனோ, முக்கிய அதிகாரிகள், தலைவர்களுடனோ கருத்தியல்ரீதியில் எதிர்நிலையில் செயல்பட்டவர்கள் என்பதுதான் இதில் அதிர்ச்சி தரும் உண்மை.

ஆட்டம்கண்ட பா.ஜ.க அரசு

``சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டே மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்போது இந்தத் தகவல் வெளியாகியிருப்பதாகவும், இது அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பான செய்தி என்றும், இந்தியர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்கவோ, ஹேக் செய்யவோ நமது அரசியலமைப்புச் சட்டப்படி பல்வேறு துறைகளின் அனுமதி பெற வேண்டும் என்பதால், அது எளிதாக நடந்திருக்க வாய்ப்பில்லை" எனவும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் ``இந்தியா பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தவேயில்லை” என மத்திய உள்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். ``மத்திய அரசு உளவு பார்க்கவில்லை, பெகாசஸை வாங்கவில்லை என்பது உண்மை என வைத்துக்கொண்டாலும் இந்திய அரசின் அமைச்சர்கள், தேர்தல் ஆணையர், நீதிபதிகள், தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களின் செல்போன்களை ஹேக் செய்து உளவு பார்த்தது யார் எனக் கண்டறிய உடனடியாக ஒரு குழுவை அமைக்க வேண்டும்’’ என எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து மத்திய அரசுக்கு தற்போது அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

பெகாசஸ்
பெகாசஸ்
Pixabay

‘இந்திய அரசு இல்லையென்றால், அதன் எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஏன் இஸ்ரேலேகூட உளவு பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துவிடும் எனும்போது நம் நாட்டின் பாதுகாப்பில் இந்த அளவுக்கு கவனக்குறைவாக மத்திய அரசு இருந்தது ஏன்?’ எனவும் எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

‘பெகாசஸ் ஸ்பைவேரை தாங்கள் பயன்படுத்தவில்லை என்றுதான் மத்திய அரசு சொல்கிறதே தவிர அதை வாங்கவில்லை எனக் கூறவில்லை. எனவே, இது குறித்து மத்திய பா.ஜ.க அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்’ எனவும் அரசுக்கு எதிராகக் குரல்கள் எழுந்திருக்கின்றன. ‘இந்தியாவின் பாதுகாப்புக்காகத்தான் இப்படிச் செய்தோம் என்று மத்திய அரசு கூறுமானால் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க-வுக்கு தேர்தல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்கத் தேர்தல் அதிகாரி, மத்திய அமைச்சர்கள் என இந்த ஸ்பைவேரால் கண்காணிக்கப்பட்டவர்களாகக் கூறப்படுபவர்களால் எந்த அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் என்பதையும் மத்திய அரசு விளக்க வேண்டும். ஒருவரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டு அவரைக் கண்காணிப்பதன் மூலம் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதோடு, ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படும் அபாயமும் இருக்கிறது’ எனப் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசைக் கேள்விகளால் துளைத்துக்கொண்டிருக்கிறார்கள். மற்ற பிரச்னைகளை எளிதில் கையாண்ட மத்திய பா.ஜ.க அரசு உண்மையில் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல் திணறிவருவது உண்மைதான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

மேலும், `தேசநலன், தேசத்தின் பாதுகாப்பு எனத் தொடர்ந்து பேசிவரும் மத்திய பா.ஜ.க அரசு தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்தியா மீது நிகழ்த்தியிருக்கும் இணையவழித் தாக்குதலாகவே இதைப் பார்க்க முடியும். இந்த இக்கட்டிலிருந்து மத்திய அரசு எப்படி வெளிவரப் போகிறது?’ என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது. விரைவில் அதற்கான விடை கிடைக்கும் என மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு