Published:Updated:

`ராகுல் பேசியது நாட்டின் மீதான கவலை!' - அமைச்சருக்குப் பதில்கொடுத்த கனிமொழி

மத்திய அமைச்சரின் கேள்விக்கு தி.மு.க எம்.பி கனிமொழி அளித்த பதிலைப் பாராட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கரவொலி எழுப்பினர்.

கனிமொழி
கனிமொழி

ஜார்கண்ட் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நேற்று பேசிய ராகுல் காந்தி மத்திய அரசையும், மோடியையும் விமர்சித்து பேசியிருந்தார். ``மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் நினைவிருக்கிறதா? இதனால் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது. இது ரேப் இன் இந்தியாவாக மாறியுள்ளது” என்றார். இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த பா.ஜ.க எம்.பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தின்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் பெண் எம்.பிக்கள் எழுந்து நின்று ராகுலின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என முழக்கமிட்டனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அப்போது பேசிய பா.ஜ.க எம்.பி பிரகலாத் ஜோஷி, ``ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு கனிமொழியும், சுப்ரியா சுலேவும் என்ன பதில் சொல்கிறார்கள்?’ என்று கேட்டார். இதன்காரணமாக அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கனிமொழி தன் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகரை நோக்கி ``சபாநாயகர் அவர்களே... இது கேள்வி நேரம். சபை உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா?” என்றார். சபையின் கூச்சல் அடங்கியதும் கனிமொழி பேசத் தொடங்கினார்.

`ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும்!'- மக்களவையில் கொதித்த பா.ஜ.க பெண் எம்.பி-க்கள்
`ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும்!'- மக்களவையில் கொதித்த பா.ஜ.க பெண் எம்.பி-க்கள்

``அமைச்சர் என் பெயரையும், சுப்ரியா சுலேவின் பெயரையும் குறிப்பிட்டு எங்கள் பதிலை எதிர்பார்ப்பதாகக் கூறினார். இந்த விவகாரம் அவைக்கு வெளியே நடந்தது” என்று பதிலளித்தார். கனிமொழியின் இந்தப் பதிலைக் கேட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் கூச்சல் எழுப்பினர்.

தி.மு.க எம்.பி கனிமொழி
தி.மு.க எம்.பி கனிமொழி

மீண்டும் தன் பேச்சை தொடர்ந்த கனிமொழி, ``மேக் இன் இந்தியா திட்டம் பற்றி பிரதமர் எப்போதும் பேசி வருகிறார். அதை நாங்கள் மதிக்கிறோம். மேக் இன் இந்தியா திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு, இந்தியா வலுவான பொருளாதாரமாக மாற வேண்டும் என்றே நாங்களும் விரும்புகிறோம். ஆனால், நாட்டில் நடப்பது என்ன? அதைதான் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். மேக் இன் இந்தியாவுக்கு பதிலாக துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்றுதான் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இது நாட்டைப் பற்றிய அவரது கவலை. இதில் என்ன தவறிருக்கிறது?” என்று கனிமொழி பதிலளிக்க பா.ஜ.கவினர் மீண்டும் கூச்சல் எழுப்பத் தொடங்கினர்.

தி.மு.க எம்.பி கனிமொழி பதிலளித்தவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கரவொலி எழுப்பினர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கனிமொழி அருகே வந்து பாராட்டினர்.`

அஸ்ஸாம் கலவரம்
அஸ்ஸாம் கலவரம்

``குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அஸ்ஸாமில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தை மக்களவையில் எழுப்ப திட்டமிட்டிருந்த நிலையில், ராகுல் பொதுக்கூட்டத்தில் பேசியதை பா.ஜ.கவினர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டனர். அவையில் தேவையில்லாமல் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர்" என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.