குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் ஆவணப்படம் இருப்பதாகக் கூறி பா.ஜ.க, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தின. இதனையடுத்து பிபிசி-யின் ஆவணப்படத்தை மத்திய அரசு தடைசெய்தது. ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப் என அனைத்து தளங்களிலிருந்தும் பிபிசி-யின் ஆவணப்படம் நீக்கப்பட்டது. அதனையும் மீறி டெல்லி, கேரளா என ஆங்காங்கே பிபிசி ஆவணப்படத்தை திரையிடும் முயற்சிகள் நடைபெற்றன. தடையை மீறி ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், `பிபிசி-யை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும்' என இந்து சேனா என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

அந்த அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா பெயரில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அந்த மனுவில், “2014-ம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்தபிறகு, ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியும் வேகமெடுத்திருக்கிறது. இதை இந்திய எதிர்ப்பாளர்களாலும், பிபிசி-யாலும் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. குஜராத் கலவரத்தில் அப்போதைய மாநில அமைச்சர்கள் யாருக்கும் தொடர்பில்லை என்பதை நானாவதி ஆணைய அறிக்கை 2020-ம் ஆண்டிலேயே சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்துவிட்டது. பிபிசி இப்போது மட்டுமல்ல, சுதந்திரத்துக்குப் பிந்தைய தொடக்க காலத்திலிருந்தே அரசுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு எதிராகவும் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. 1970-ல் பிபிசி இந்தியாவில் தடைசெய்யப்பட்டதைப் போல, இப்போதும் தடைசெய்ய வேண்டும்” என்று முறையிடப்பட்டிருக்கிறது.
இந்து சேனா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வைத்திருக்கும் முறையீட்டில் கூறியிருப்பதைப் போல, 1970-ம் ஆண்டில் அப்போதைய இந்திரா காந்தி அரசால் பிபிசி இந்தியாவில் தடைசெய்யப்பட்டு, 2 ஆண்டுகள் முடங்கியிருந்தது.
அதன் பின்னணி குறித்துப் பார்ப்போம்.

புகழ்பெற்ற பிரெஞ்சு இயக்குநர் லூயிஸ் மல்லே 1967-ம் ஆண்டில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அன்றைய மதராஸ், கல்கத்தாவில் அவரது பயணங்கள் இருந்தன. பயணத்தின்போது தான் கண்ட காட்சிகளைக் கொண்டு ஆவணப்படம் தயாரிக்க திட்டமிட்ட அவர், அடுத்த ஆண்டே மீண்டும் இந்தியா வந்தார். கல்கத்தாவும் மதராஸும் அன்றைக்கும் இந்தியாவின் பெரும் நகரங்களில் முக்கியமானவை. குறிப்பாக, கல்கத்தா அன்றைக்கு இந்தியாவின் இரண்டாவது பெரிய நகரம். உலகின் மிக முக்கிய சமூக கலாசார பின்னணி கொண்ட நகரமும்கூட. கல்கத்தாவின் சாலைகள், தெருக்களில் கேமராக்களை வைத்து அங்கிருந்த மக்களின் இயல்பான நடவடிக்கைகளை அவர் பதிவுசெய்தார். அதை, `கல்கத்தா' என்ற பெயரிலேயே அவர் ஆவணப்படமாக வெளியிட்டார்.

மேலும், அவரின் மற்றொரு ஆவணப்படமான `Phantom India', 7 குறுந்தொடர்களாக வெளிவந்தது. இந்தியாவில் நிலவிய வறுமை, நீலகிரியில் இருந்த பழங்குடியின மக்களின் வாழ்வாதார சூழல், சாதிய அமைப்பு முறைகளை மையப்படுத்தியதாக அந்த ஆவணப்படம் இருந்தது. 1968 முதல் 1969-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த ஆவணப்படங்களுக்கான படப்பிடிப்புகள் நடந்தன. 2 ஆவணப்படங்களும் இந்தியாவில் மட்டுமின்றி பிரிட்டனில் வாழ்ந்த இந்திய வம்சாவளிகள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தியத் தூதரகம் சார்பில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆவணப்படத்தை ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டுமென இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பிரிட்டன் மக்களிடம் இந்தியாவுக்கு எதிரான மனநிலையை இந்த ஆவணப்படம் கட்டமைக்கும் என அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. ஆனால் ஆவணப்படங்களை ஒளிபரப்புவதை நிறுத்த முடியாது என பிபிசி திட்டவட்டமாகக் கூறிவிட்டது. `உலக அரங்கில் இந்தியாவை தரக்குறைவாக காட்டுவதா?' என கடுங்கோபத்தில் இருந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, 1970-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி, பிபிசி-யை இந்தியாவில் தடைசெய்து உத்தரவிட்டார். 2 ஆவணப்படங்களும் முடக்கப்பட்டன.
டெல்லியில் இருந்த பிபிசி-யின் இந்திய அலுவலகத்தை அடுத்த 15 நாள்களுக்குள் மூட வேண்டுமென, அப்போது அதன் நிர்வாகிகளாக இருந்த மார்க் டல்லி, ரோனி ராப்சன் ஆகியோருக்கு உத்தரவுகள் பறந்தன. பிபிசி-யில் பணிபுரிந்த வெளிநாட்டவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. அங்கு பணிபுரிந்த இந்தியர்களும் பிபிசி-யைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அரசியல் ரீதியாக அன்றைக்கு நாடு முழுவதும் பிபிசி-க்கு எதிராக ஒரே மாதிரியான கொதிப்பான மனநிலை காணப்பட்டது. `பழங்கால பாரம்பர்யத்தை அதிர்ச்சியூட்டும் நவீன சிக்கல்களுடன் பதிவுசெய்தது' என 1972-ம் ஆண்டில் Phantom India ஆவணப்படம் குறித்து நியூயார்க் டைம்ஸ் கருத்து தெரிவித்தது. பல லட்சக்கணக்கானோரின் வறுமையை இந்தப் படம் உருவகப்படுத்துவதாகவும் கூறியது. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகே பிபிசி இந்தியாவில் மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது. 1971-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர், பிபிசி இந்தியாவில் இயங்க அனுமதிக்கப்பட்டதற்கு மிக முக்கியக் காரணமாகும்.

அன்றைய காங்கிரஸ் அரசுக்கும் பிபிசி-க்கும் இடையிலான பனிப்போர் அத்துடன் முடிந்துவிடவில்லை. 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலையின்போது அனைத்து ஊடகங்களையும் போல பிபிசி-க்கும் நெருக்கடிகள் இருந்தன. “இந்தியாவுக்கு எதிரான, இந்தியாவை இழிவுபடுத்தும் வகையிலான செய்திகளையே பிபிசி வெளியிடுகிறது. இந்திய மண்ணுக்கு எதிராக பிபிசி செயல்பட மீண்டும் அனுமதிக்கக் கூடாது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவை அவமதிக்க பிபிசி தவறவில்லை” என 41 காங்கிரஸ் எம்.பி-க்கள் கையொப்பமிட்டு, 1975-ம் ஆண்டில் கூட்டறிக்கை வெளியிட்டனர். பிபிசி-யை மீண்டும் தடைசெய்ய வேண்டுமென்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. இதையடுத்து அப்போதும் பிபிசி-க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்திரா காந்தி காலத்துக்குப் பிறகு பிபிசி உடனான மத்திய அரசின் மோதல் போக்குகள் அவ்வப்போது தொடர்ந்திருந்தாலும், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிதும் அதிகரித்திருக்கிறது. நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக 2015-ம் ஆண்டில், பிரிட்டன் இயக்குநர் லெஸ்லி உட்வின் `இந்தியாவின் மகள்' என்ற ஆவணப்படம் ஒன்றை தயாரித்தார். பிபிசி-யில் வெளியான `ஸ்டோரிவில்லே' தொடரின் அங்கமாக இந்த ஆவணப்படம் வெளிவந்தது. 2015-ம் ஆண்டில் மகளிர் தினமான மே 8-ம் தேதி இந்த ஆவணப்படம் உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டது. டெல்லியில் இந்த ஆவணப்படத்தை வெளியிட திட்டமிட்டவர்கள்மீது காவல்துறை வழக்கு பதிந்தது. பிபிசி-யால் ஆவணப்படம் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டுமென வெளியுறவு அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. அதையும் மீறி பிரிட்டன் மற்றும் வெளிநாடுகளில் `இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டது.

குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், வரம்பு மீறி பேசியது ஆவணப்படத்தில் அப்படியே இடம்பெற்றிருந்தது. இதற்கு அரசுத் தரப்பில் மட்டுமின்றி, பொதுவெளியிலும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. ஆவணப்படம் வெளியிடப்பட்டதில் விதிகள் மீறப்பட்டதாக அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிபிசி-யை பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதையடுத்து, `இந்தியாவின் மகள் ஆவணப்படம் தடைசெய்யப்படுகிறது' என அறிவித்தார் அப்போதைய நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு.

அதே போல, 2019 புல்வாமா தாக்குதல் தொடர்பாகவும் மத்திய அரசுக்கும், பிபிசி நிறுவனத்துக்கும் இடையே சுணக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.!