Published:Updated:

நேரு ஸ்டேடியம்... ஜெமினி ஸ்டுடியோ.. சூ என்லாயின் அன்றைய விசிட்!

ஐ.சி.எப் நிறுவனத்தில்  சீனாவின் முன்னாள் அதிபர் சூ என்லாய்
ஐ.சி.எப் நிறுவனத்தில் சீனாவின் முன்னாள் அதிபர் சூ என்லாய்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்திறங்கிய, சூ என்லாயை அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஸ்ரீ பிரகாசா வரவேற்றார்.

கடந்த ஒருவாரமாகவே இந்தியாவே பரபரப்பாக இருக்கிறது. தொலைக்காட்சியில் மாமல்லபுரம், மகாபலிபுரம் என்ற வார்த்தைகள்தான் அடிக்கடி உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம்... சீன அதிபர் ஸீ ஜின்பிங் மாமல்லபுரம் வருகிறார். சென்னையில் இரு நாள்கள் தங்கியிருக்கும் ஜின்பிங், மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

சீனாவின் தற்போதைய  அதிபர் ஜின்பிங், மோடி
சீனாவின் தற்போதைய அதிபர் ஜின்பிங், மோடி

சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி சோழா நட்சத்திர ஹோட்டலில், ஜின்பிங் தன் பரிவாரங்களுடன் தங்குகிறார். இதனால், சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீன அதிபர் ஒருவர் சென்னை வருவது இதுதான் முதல்முறையா என்றால், இல்லை. இதற்கு முன்னரும் சீன அதிபர் ஒருவர் சென்னை வந்திருக்கிறார். மாமல்லபுரத்துக்கும் விசிட் அடித்திருக்கிறார். அவர்தான் சீனாவின் முதல் பிரீமியர் சூ என்லாய்.

1949-ம் ஆண்டு மாசேதுங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அந்த நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்து சீன அதிபராகப் பதவியேற்ற சூ என்லாய் 1976-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார். இடைப்பட்ட காலத்தில், 1956-ம் ஆண்டு இரு நாள்கள் சென்னைக்கு விசிட் அடித்தார் சூ என்லாய். டிசம்பர் 5-ம் தேதி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்திறங்கிய சூ என்லாயை, அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஸ்ரீ பிரகாசா வரவேற்றார். பின்னர், கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் (நேரு ஸ்டேடியம்) நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இரவில் ராஜ் பவனில் கவர்னர் பிரகாசா, சூன் என்லாய்க்கு விருந்தளித்தார்.

சீனா முன்னாள் அதிபர் சூ என்லாய் வருகை பற்றி ஆனந்த விகடனில் கட்டுரை
சீனா முன்னாள் அதிபர் சூ என்லாய் வருகை பற்றி ஆனந்த விகடனில் கட்டுரை
பத்மினியின் நடனத்தை ரசித்த சீன அதிபர்!- இது ஹிஸ்ட்ரி சுவாரஸ்யம்

அடுத்த நாள் மாமல்லபுரத்துக்குச் சென்ற சூ என்லாய், கடற்கரைக் கோயில், சிற்பங்கள் போன்றவற்றை ரசித்து மகிழ்ந்தார். அந்தக் காலக்கட்டத்தில் இந்தியா, சீனா இரு நாடுகளுமே பொருளாதாரத்தில் ஒரே அளவில்தான் இருந்தன. 1980-ம் ஆண்டுக்குப் பிறகு சீனா, அபரிமிதமான வளர்ச்சியைப் பெறத் தொடங்கியது. அப்போது, ஆசியளவில் சென்னை ஐ.சி.எப் நிறுவனம் பெரும் புகழ்பெற்றது.

ஐ.சி.எப் நிறுவனத்தைப் பார்வையிட்ட சூ என்லாய் வரவேற்பு நோட்டில், ''இந்த நிறுவனம் அற்புதமான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சீன மக்கள் இங்கே வந்து பார்வையிடவும் கற்றுக்கொள்ளவும் நிறைய விஷயங்கள் உள்ளன. இங்கே பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமும் பயிற்சி முறையும் சிறப்பாக இருக்கிறது'' என்று எழுதினார். சூ என்லாயால் பாராட்டப்பட்ட ஐ.சி.எப்., தற்போதுதான்' வந்தேபாரத்' போன்ற சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், சீனாவில் ஏற்பட்ட தொழில் முன்னேற்றம் காரணமாக அங்கே புல்லட் ரயில்கள் பறந்து கொண்டிருக்கின்றன. பீஜிங் - ஷென்ஷென் நகரங்களுக்கிடையே ஓடும் புல்லட் ரயில் 2,203 கிலோ மீட்டர் தொலைவை 8 மணி நேரத்தில் கடந்துவிடும்.

ஐ.சி.எப் நிறுவனம் சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. சிறப்பான உள்கட்டமைப்புடன் இயங்குகிறது.
சீனாவின் முன்னாள் அதிபர் சூ என்லாய்

தொடர்ந்து, ஜெமினி ஸ்டூடியோவையும் சூ என்லாய் பார்வையிட்டார். எஸ்.எஸ்.வாசன், எஸ்.பாலசுப்ரமணியன் ஆகியோர் வரவேற்று, ஸ்டூடியோவைச் சுற்றிக்காட்டினர். ஜெமினி ஸ்டூடியோவில் நடந்துகொண்டிருந்த படப்பிடிப்பை சூ என்லாய் கண்டுகளித்தார். நாட்டியத்துக்குப் புகழ்பெற்ற நடிகை பத்மினியின் நடனத்தையும் அவர் ரசித்தார். சூ என்லாயின் சென்னை விசிட் பற்றி ஆனந்த விகடனிலும் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

சென்னை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டிசம்பர் 7-ம் தேதி சூ என்லாய் சீனா திரும்பினார்.

அடுத்த கட்டுரைக்கு