Published:Updated:

ஸ்டாலினை முந்தும் ரங்கசாமி... தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது?!

ரங்கசாமி - ஸ்டாலின்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் இன்னும் நிறைவேற்றவில்லை. ஆனால், அந்த வாக்குறுதியை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிறைவேற்றுகிறார்.

ஸ்டாலினை முந்தும் ரங்கசாமி... தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது?!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் இன்னும் நிறைவேற்றவில்லை. ஆனால், அந்த வாக்குறுதியை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிறைவேற்றுகிறார்.

Published:Updated:
ரங்கசாமி - ஸ்டாலின்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றுப்பட்டுவிட்டதாக தி.மு.க-வினர் கூறிவருகிறார்கள். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சில முக்கியமான வாக்குறுதிகளை தி.மு.க அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அதனால், தி.மு.க அரசுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்துவருகிறார்கள். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோபத்துக்கு தி.மு.க அரசு ஆளாகியிருக்கிறது.

குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்கிற தி.மு.க-வின் வாக்குறுதி சட்டமன்றத் தேர்தலின்போது பெண் வாக்காளர்களைப் பெரிதாகக் கவர்ந்தது. தி.மு.க வெற்றிபெற்றவுடன், ரூ.1,000 உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்கும் என்று குடும்பத் தலைவிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இதுவரை அது வழங்கப்படவில்லை. எதிர்க் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து எழுப்பிவந்த நிலையில், அதற்கு தி.மு.க-வினரிடமிருந்து பதில் வந்தது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

முதல்வர் மு.க.ஸ்டாலின், “மாநிலத்தின் நிதி நிலைமையைச் சரிசெய்து கொண்டிருக்கிறோம். நிதி நிலை சரியான பிறகு திட்டம் அமல்படுத்தப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்” என்று முதல்வர் தெரிவித்துவருகிறார்.

மேலும், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்க, தகுதியான குடும்ப அட்டைதாரர்களின் பெயர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது” என்று கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தெரிவித்தார். பின்னர், இந்தத் திட்டம் தொடர்பாக அதிகாரிகள், பொருளாதார நிபுணர்களுடன் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தியதாக கடந்த நவம்பர் மாதம் செய்தி வெளியானது.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

அது குறித்து ட்வீட் வெளியிட்ட நிதியமைச்சர், “முதல்வரின் புரட்சிகரமான உரிமைத் தொகை திட்டத்தின் செயல்முறைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான குழுவுடன் நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. போலிச் செ‌ய்‌திகளை வைத்து திட்டமிட்டு அவதூறு பரப்பும் சக்திகள் நம்மை என்றைக்கும் சமூகநீதி இலக்கில் இருந்து திசை திருப்ப முடியாது” என்று கூறியிருந்தார்.

எதிர்க்கட்சியினரின் அழுத்தம் போன்ற காரணங்களால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் தி.மு.க அரசு இருக்கிறது. மேலும், தங்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, மாத உரிமையைத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் இருக்கிறது.

ஆகவே, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதைத் தவிர தி.மு.க அரசுக்கு வேறு வழியில்லை. இல்லையென்றால், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரத்துக்குச் செல்லும்போது, பெண்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை தி.மு.க-வினருக்கு ஏற்படும்.

முதல்வர் ரங்கசாமி
முதல்வர் ரங்கசாமி

இப்படியான சூழலில்தான், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் பொங்கலுக்குள் தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியிருக்கிறார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் டிசம்பர் 29-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “அரசின் மாதாந்திர உதவித்தொகை ஏதும் பெறாத 21 வயது முதல் 55 வயதுக்குள் இருக்கும் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்திருந்தோம். இந்தத் திட்டம் வரும் பொங்கலுக்குள் தொடங்கப்படும்” என்றார்.

மேலும், “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவியும், 16 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியமும் மிக விரைவில் வழங்கப்படும். அதன் பிறகு விண்ணப்பிக்கும் நபர்களுக்கும்கூட உதவித் தொகை வழங்குவோம்” என்றார் ரங்கசாமி.

முதல்வர் ரங்கசாமி - ஆளுநர் தமிழிசை
முதல்வர் ரங்கசாமி - ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி தி.மு.க அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமாரின் இல்ல விழாவில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ‘புதுச்சேரியில் ஒரு பொம்மை ஆட்சி நடைபெறுகிறது’ என்று ஸ்டாலின் விமர்சித்தார். அதற்கு பதிலடி கொடுத்த ரங்கசாமியின் ஆதரவாளர்கள், ‘தமிழ்நாட்டில் கொடுத்த வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், புதுச்சேரியில் நல்லாட்சி நடத்திவரும் ரங்கசாமியை ஸ்டாலின் விமர்சித்தது அநாகரிகமானது’ என்றனர். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 அமல்படுத்த நாள் குறித்ததன் மூலம், ‘இது, பொம்மை ஆட்சி அல்ல’ என்று ஸ்டாலினுக்கு ரங்கசாமி பதிலடி கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.