Published:Updated:

எப்போது முடிவுக்கு வரும் நீட் அரசியல்? - நீட் விலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் அதிகாரம்தான் என்ன?

நீட் விலக்கு விவகாரம்!
News
நீட் விலக்கு விவகாரம்!

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெறுவதற்காக தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. இந்த முயற்சியில் பல தடைகளை தமிழக அரசு சந்தித்துவருகிறது. இந்தப் பிரச்னைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?

நீட் தேர்வு அரசியல், முடிவின்றி தொடர்ந்துகொண்டிருக்கிறது. முதல் முறையாக, 2013-ம் ஆண்டு நீட் தேர்வு தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா உட்பட பல மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) கல்வி வருவதால், தங்கள் அதிகார வரம்பில் தலையிடுவது போல நீட் தேர்வு இருப்பதாக மாநிலங்கள் வாதிட்டன. நீட் தேர்வு, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனாலும், 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீட் தேர்வுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும் என்று 2016 சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்

2017-ம் ஆண்டு மே மாதம் நீட் தேர்வு நடைபெற்றபோது, மாணவ - மாணவிகள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பிரச்னை எழுந்தது. நீட் தேர்வில், ஆங்கிலம் மற்றும் பிற மொழி கேள்விகள் வேறு வேறாக இருந்தன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், நீட் தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் 2017-ம் ஆண்டு மே மாதம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு, உச்ச நீதிமன்றம் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் இடைக்காலத் தடை விதித்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கையின்போது, மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மாநில அரசு பிறப்பித்த அரசாணை, 2017-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

அந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லியில் பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்கள் ஆகியவற்றுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் அவசரச் சட்டம் கொண்டுவந்தால், அதற்கு ஒத்துழைப்பு அளிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெறுவதற்கு சட்ட ரீதியான, அரசியல் ரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியிலும் அப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும் அந்த முயற்சி தொடர்கிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெறுவோம் என்பது தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது.

ஆகவே, தமிழக சட்டமன்றத்தில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி ஏகமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது, பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் மட்டும் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவருக்கோ மத்திய அரசுக்கோ அந்த மசோதாவை அனுப்பாமல் ஆளுநரே வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதுதான் இன்றைக்கு பிரச்னை.

செந்தில்குமார்
செந்தில்குமார்

இந்த விவகாரம் குறித்து தி.மு.க-வைச் சேர்ந்த தர்மபுரி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமாரிடம் பேசினோம். ``இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கிறது. இந்த நிலைப்பாடு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே எடுக்கப்பட்டது. தி.மு.க ஆட்சியில் கடந்த செப்டம்பர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், தி.மு.க-வின் மக்களவைக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலு தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி-க்கள் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால், அவரை சந்திக்க முடியவில்லை. அவரின் செயலாளரிடம் மனுக் கொடுத்துவிட்டு தமிழக எம்.பி-க்கள் வந்தனர். இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சரைச் சந்திக்க தமிழக எம்.பி-க்கள் பல முறை முயற்சி செய்தும், அவரை சந்திக்க முடியவில்லை.

தி.மு.க தலைமையிலான அரசுக்கும் மத்திய அரசுக்குமான உறவு சுமுகமாகவே இருக்கிறது. மத்திய அரசின் ஒத்துழைப்புடன்தான் பல விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, தமிழ்நாடு தொடர்பான பிரச்னைகளுக்காக மத்திய அமைச்சர்களை தமிழக எம்.பி-க்கள் சந்திப்பது இயல்பான ஒன்றாகவே இருக்கிறது. இந்த சூழலில், நீட் விலக்கு தொடர்பான மசோதா தொடர்பாக உள்துறை அமைச்சரைச் சந்திக்க பல நாள்களாக முயன்றும் முடியவில்லை.

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதால், மற்ற மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளுக்கு எதிரான ஒன்றும் இது கிடையாது. அப்படியிருக்கும்போது, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதன் மூலம் பா.ஜ.க-வுக்கு நல்ல பெயர் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழக அரசால் விலக்கு கேட்கப்பட்டாலும்கூட, விலக்கு வழங்கியது மத்திய அரசு என்கிறபோது, நாங்கள்தான் விலக்கு கொடுத்தோம் என்று பா.ஜ.க-வால் உரிமை கொண்டாட முடியும். இதன் மூலம் தங்கள் கட்சியை வளர்ப்பதற்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கும்.

மத்திய அரசை சம்மதிக்க வைத்து விலக்குப் பெறுவது என்பதுதான் சிறந்த வழி. தமிழ்மொழி வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் என்பது இன்னொரு வழி. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறாமல் அதைச் செய்ய வேண்டும்” என்றார் செந்தில்குமார்.

இந்தப் பிரச்னை குறித்து அரசியல் விமர்சகரான வழக்கறிஞர் அக்னீஸ்வரனிடம் பேசினோம்.

``பொதுப்பட்டியலில் இருக்கும் ஒரு பொருளில் ஏற்கெனவே மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றிவிட்டது என்றால், அந்த சட்டத்துக்கு இணையான ஒரு சட்டத்தை, சிறு திருத்தங்களுடன் மாநில அரசு இயற்றலாம். அதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினால், பிரிவு 200-ன்படி அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும்.

அதுபோல, பொதுப்பட்டியலில் இருக்கும் ஒரு பொருளில் மத்திய அரசால் ஒரு சட்டத்தை நிறைவேற்றி நாடு முழுவதும் அது நடைமுறையில் இருக்கும்போது, அந்தப் பொருளில் ஒரு மாநிலம் மட்டும் ஒரு சட்டத்தை நிறைவேற்றினால், அதற்கு பிரிவு 201-ன் படி ஆளுநர் ஒப்புதல் கொடுக்கலாம். அல்லது, பரிசீலனைக்கு நேரம் எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை, அந்த மசோதாவை அவர் திருப்பி அனுப்பினால், மாநில அரசு மீண்டும் ஒரு மசோதாவை இயற்றி அனுப்பலாம். அதை, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைக்க வேண்டும்.

அக்னீஸ்வரன்
அக்னீஸ்வரன்

2006-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சட்டம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கிடையாது என்கிற ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தார். அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்துவிட்டது. அப்போது, மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தது. அதுபோல, இப்போது மத்திய அரசும், மாநில அரசும் அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கடந்து, ஈகோ இல்லாமல் நடந்துகொண்டால், நீட் தேர்வு விலக்கு விவகாரம் சுமுகமாக முடிவுக்கு வரும். இல்லையென்றால், இந்தப் பிரச்னை இழுத்துக்கொண்டே போகும்” என்றார் அக்னீஸ்வரன்.