Published:Updated:

`காவல்துறை டு சிபிஐ; 4,000 பேரிடம் விசாரணை; ஆனாலும்?’ -ராமஜெயம் பிறந்தநாளில் கலங்கிய ஆதரவாளர்கள்

ராமஜெயம் கொலை செய்யப்பட்டு ஏழு வருடங்கள் ஆகின்றன. குற்றவாளிகளை எப்போது கண்டுபிடிப்பார்கள் என அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

ராமஜெயம் சிலைக்கு மரியாதை
ராமஜெயம் சிலைக்கு மரியாதை

தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29 -ம் தேதி, தில்லை நகர் பகுதியில் வாக்கிங் சென்றபோது மர்மநபர்களால் காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல், திருச்சி கல்லணை அருகேயுள்ள திருவளர்சோலை காவிரி ஆற்றின் கரை ஓரமாகக் கண்டெடுக்கப்பட்டது. தமிழகத்தையே அதிர்ச்சியில் உறையவைத்த இந்தக் கொலை நடந்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இதுவரை கொலையாளிகள் குறித்து எவ்வித துப்பும் துலங்காமல் கிணற்றில் போட்ட கல்லாகவே வழக்கு கிடக்கிறது. ராமஜெயத்தின் பிறந்தநாளான நேற்று, குற்றவாளிகளை எப்போது கண்டு பிடிப்பார்கள் என அவரது ஆதரவாளர்கள் புலம்பினர்.

ராமஜெயம் பிறந்தநாள் போஸ்டர்
ராமஜெயம் பிறந்தநாள் போஸ்டர்

நேற்று, மறைந்த ராமஜெயத்தின் 58-வது பிறந்தநாள். அதையொட்டி அவரது ஆதரவாளர்கள், அறிவாலயம் தந்த அற்புதமே... அன்புள்ளம் கொண்டவரே... திருச்சியின் வரலாறே! உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை திருச்சியின் பல்வேறு பகுதிகளில் ஓட்டி அதகளப்படுத்தினார். இன்று காலை, திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமஜெயம் திருவுருவச்சிலைக்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டுவந்து மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.

மேலும், திருச்சி மாநகர தி.மு.க செயலாளர் அன்பழகன், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், எம்.எல்.ஏ-க்கள் ஸ்டாலின் குமார், சௌந்தரபாண்டியன் ஆகியோர் சகிதமாக ராமஜெயத்தின் அண்ணனும் திருச்சி தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளருமான எம்.எல்.ஏ கே.என்.நேரு ராமஜெயத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.

உணவு உண்ணும் ஆதரவாளர்கள்..
உணவு உண்ணும் ஆதரவாளர்கள்..

அதைத் தொடர்ந்து ஏற்பாடு செய்திருந்த உணவு எல்லோருக்கும் பரிமாறப்பட்டது. எப்போதும் கலகலப்பாக இருக்கும் கே.என்.நேரு, காலை முதலே அமைதியாக இருந்தார். அவரின் ஆதரவாளர்கள் சாப்பிடாமல் தன்னைச் சுற்றிவந்த வண்ணமே இருப்பதை உணர்ந்த அவர், உணவு பரிமாறும் இடத்திற்குச் சென்று அமர்ந்தபடி எல்லோரையும் அமர்ந்து சாப்பிட உத்தரவிட்டார். இறுதிவரை அங்கேயே அமர்ந்திருந்த அவர், மற்றவர்களைச் சாப்பிடவைத்துவிட்டு, அவர் மட்டும் சாப்பிடாமல் கலங்கியபடி எழுந்து சென்றார்.

கொல்லப்பட்ட ராமஜெயம்
கொல்லப்பட்ட ராமஜெயம்

இவற்றை கவனித்த ராமஜெயத்தின் ஆதரவாளர்கள் நம்மிடம், “ராமஜெயம் கொலை செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. கொலை நடந்ததும், அப்போதைய திருச்சி மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையிலான காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார்கள். அவர்களின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதநிலையில், அதே வருடம் ஜூலை மாதம் வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது.

முதலில் அதிரடி காட்டிய சிபிசிஐடி போலீஸார் ராமஜெயத்தின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், அரசியல்வாதிகள் என சுமார் நான்காயிரம் பேரிடமும் விசாரணை நடத்தியதாகக் கூறியது. அவர்கள் சிலரிடம் போலீஸார் துருவித்துருவி விசாரித்தும், நான்கு வருடங்கள் ஆன நிலையில் வழக்கில் முன்னேற்றம் இல்லை. இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் நம்பிக்கையில்லை என ராமஜெயத்தின் மனைவி லதா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிட, நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு சிபிஐ விசாரிக்க உத்தரவு பெற்றார். கடந்த 2017 நவம்பர் மாதம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.

ஆதரவாளர்களுடன் நேரு
ஆதரவாளர்களுடன் நேரு

அப்போது நீதிமன்றம், ராமஜெயம் கொலைவழக்கில் மூன்று மாத காலத்திற்குள் விசாரணையை முடிக்குமாறு அறிவுறுத்தியது. அதைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் கொஞ்சம் வேகமாக இருந்த சிபிஐ, சென்னையில் இருந்து வந்து திருச்சியில் முகாமிட்டு, வழக்கை முதலில் இருந்து விசாரிக்க தொடங்கினார்கள். இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு, ராமஜெயம் கொலைவழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டதால், வழக்கம்போலவே இந்த வழக்கு விசாரணை மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. இதன் காரணமாகக் கடந்த 22 மாதங்களாக சிபிஐ விசாரணையிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிடக்கிறது. எனவே, ராமஜெயம் கொலைவழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி சிபிஐ உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும்” என்று புலம்பினார்.

ராமஜெயம் கொலை செய்யப்பட்டு ஏழுஆண்டுகள் ஆன நிலையிலும், இந்த வழக்கை தமிழக போலீஸார், சிபிசிஐடி போலீஸார், சிபிஐ போலீஸார் இதுவரை சுமார் நான்காயிரம் பேரிடம் விசாரணை நடத்தியும் கொலையாளிகள் குறித்து துப்பு துலங்காமல் இருப்பது, அவரின் ஆதரவாளர்களை விரக்தி அடையவைத்துள்ளது.