Published:Updated:

`வெள்ளை அறிக்கை' - அதிமுக ஆட்சியின் ஆவணப்படமா, திமுக ஆட்சியின் வரி வசூலுக்கான ட்ரெய்லரா?

வெள்ளை அறிக்கை வெளியிட்ட பி.டி.ஆர்
வெள்ளை அறிக்கை வெளியிட்ட பி.டி.ஆர்

வெள்ளை அறிக்கை அ.தி.மு.க அரசின் நிர்வாகத் திறன் இன்மையைக் காட்டுகிறதா அல்லது தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகளைச் செய்யாமல் நழுவிக் கொள்ளப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது குறித்து ஒரு பார்வை...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2013-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பான பல்வேறு தகவல்கள் இந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. "ஒரு மாநிலத்திற்கு வருமானம் என்பது வரி வருமானம், வரியில்லா வருமானம், மத்திய அரசு வழங்கும் வரிப் பகிர்வு, மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு வழங்கப்படும் மானியங்கள் மூலமாகத்தான் வருமானம் கிடைக்கும். ஆனால், மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்தது முதல் மாநிலங்களுக்கு என இருந்த வரி விதிக்கும் உரிமை பறிக்கப்பட்டதுடன் நமக்கு வழங்க வேண்டிய வரி பங்கில் சுமார் 20 ஆயிரம் கோடிக்கு மேல் நிலுவையில் இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள், பேரிடர் கால இழப்புகளுக்கான மானியமும் முறையாக வழங்கப்படவில்லை. கடந்த பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க அரசின் நிர்வாகத் திறன் இன்மையால் கடன் அதிகரித்ததோடு வட்டியாகவே பல நூறு கோடிகளைக் கட்ட வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாட்டின் நிதி நிலைமை சென்றுவிட்டது" என வெள்ளை அறிக்கை வெளியீட்டின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியிருக்கிறார். மற்றொரு பக்கம் தி.மு.க தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அதிலிருந்து நழுவவே இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது என விமர்சனம் எழுந்திருக்கிறது.

ஸ்டாலினுடன் பழனிவேல் தியாகராஜன்
ஸ்டாலினுடன் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கை அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாகத் திறன் இன்மையால் நிதி நிலைமையில் ஏற்பட்ட அவலநிலையைக் காட்டுகிறதா அல்லது வரி வசூல் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பா உண்மை என்ன?

அதிமுக இமேஜை காலி செய்கிறதா தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை?!

“வெள்ளை அறிக்கையின்படி 2011-இல் அ.தி.மு.க ஆட்சி அமைந்தபோது தமிழ்நாட்டின் வருமானம் உபரியாகத்தான் இருந்திருக்கிறது. அதனால்தான் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தப் பொருளாதார நெருக்கடியும் இல்லாமல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் ஆட்சி நடத்த முடிந்திருக்கிறது. 2013-வரை சீராக இருந்த தமிழ்நாட்டின் நிதி நிலைமை ஜெயலலிதா தன் மீதான வழக்கு விசாரணை மற்றும் உடல்நிலை காரணமாக ஆட்சி அதிகாரத்தை ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்களிடம் ஒப்படைத்தபின் மிக மோசமான நிலைமைக்குச் சென்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் உபரியாக இருந்த வருவாய் குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வெள்ளை அறிக்கை
வெள்ளை அறிக்கை

நலத்திட்ட உதவிகளுக்கு மட்டுமே கடன் வாங்கிக் கொண்டிருந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், வாங்கிய கடனுக்கு வட்டியைச் செலுத்தவுமே கடன் வாங்கும் அவலநிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது என்பதை வெள்ளை அறிக்கை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது” என்பவர்கள்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

31.3.2021 அன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டின் மொத்த பொதுக்கடன் 5,70,189 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதம் சரிவு ஏற்பட்டு 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகச் செலவிடப்படும் செலவு 5.4 சதவிகிதம் குறைந்திருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சரியான நேரத்தில் தேர்தல் நடந்ததாதல் அவற்றின் செயல்திறன் குறைந்திருப்பதோடு தமிழ்நாட்டிலேயே அதிகளவு இழப்பைச் சந்தித்துள்ள துறையாகவும் மாறியுள்ளது. மின்வாரியம், போக்குவரத்து, குடிநீர் வடிகால் வாரியங்கள் உள்ள அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பல லட்சம் கோடி கடனில் மூழ்கிக் கிடக்கின்றன. வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தரவுகளே அ.தி.மு.க ஆட்சி எந்தளவு மோசமாக நடந்தது. மக்களையும் நாட்டையும் எந்தளவு மோசமான பொருளாதார நெருக்கடியில் தள்ளியிருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.

எஸ்.பி. வேலுமணி வீடு
எஸ்.பி. வேலுமணி வீடு

அ.தி.மு.க அரசின் ஆட்சிக் காலம் மக்கள் நலன் பார்க்காமல் சுயநலனுடன் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே லாபம் பெறும் நோக்கில் இருந்திருக்கின்றன. தற்போது நடைபெற்ற முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான வருமான வரிச் சோதனை முடிவுகளும் அதையே உணர்த்துகின்றன” எனவும் விளக்குகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

“அ.தி.மு.க. ஆட்சியில் நிதிநிலை சீர்கேடு ஏற்பட்டது என்பது தவறான கருத்து, வளர்ச்சி திட்டங்களுக்குத் தான் கடன் வாங்கினோம்” என வெள்ளை அறிக்கை தொடர்பாகத் தனது கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஜீரோ பட்ஜெட் என பணக்காரர்கள் வசதியாக வாழவும் ஏழைகள் கடன் சுமையும் தத்தளிக்கவுமே வைத்திருக்கிறார்கள் என நிதி அமைச்சர் கூறுவது உண்மையே என்றாலும் மக்கள் மீது வரிச்சுமை ஏற்றப்படவில்லை என்பதும் அதன் மூலம் புரிகிறதுதானே. மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவில்லை, பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை, பத்திரப் பதிவுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை, பேருந்து, மின்சாரம், குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்டவற்றில் வரி ஏற்றப்படவில்லை.

தி.மு.க தேர்தல் அறிக்கை 2021
தி.மு.க தேர்தல் அறிக்கை 2021

ஒவ்வொரு அரசுத் துறையிலும் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் இருக்கிறார்கள். இதனால் வருவாயைவிட ஊதியத்திற்கே அதிக செலவு ஆகிறது. மாநிலத்திற்கான வருவாய் வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டிருக்கின்றன. மாநிலத்தை நடத்துவதே சிரமமானது என வெள்ளை அறிக்கையில் தி.மு.க சொல்லியிருக்கிறது.

கஜானா காலி! - வெடிவைக்கும் வெள்ளை அறிக்கை

வெள்ளை அறிக்கையில் தி.மு.க வெளியிட்டிருக்கும் நிதி நிலைமையைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் அனைத்துக் கட்டணங்களும் உயர்வது மட்டுமல்லாது வருவாய் விதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு ஓய்வூதியதாரர்களின் மடியிலும் கை வைக்க வாய்ப்பு இருப்பதாகவே படுகிறது. மேலும், அரசு கொடுக்கும் இலவசங்கள், மானியங்களைக் குறைக்கவும் வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன். வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டியே வரி, கட்டணங்களை உயர்த்துவதோடு தி.மு.க தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து எஸ்கேப் ஆகவும் வாய்ப்பிருக்கிறது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்கள்.

ஆனந்த் சீனிவாசன்
ஆனந்த் சீனிவாசன்

பட்ஜெட்டில் பெரிதாக ஏதும் இடம்பெறப் போவதில்லை என்பதையும் இந்த வெள்ளை அறிக்கை சூசகமாக உணர்த்துகிறது” எனவும் அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அரசின் அடுத்தடுத்த நகர்வுகள்தான் இந்த விமர்சனங்களுக்கான விடையாக இருக்கும் என்பதால் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு