Published:Updated:

பயிர்க்கடன் தள்ளுபடி... மோதிக்கொள்ளும் செல்லூர் ராஜூ - ஐ.பெரியசாமி!

கடந்த ஆட்சியில் புகாருக்குள்ளான ஒவ்வொரு திட்டத்தையும் திமுக அரசு விசாரணை நடத்தவுள்ளதாகத் தகவல்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"கடன் தள்ளுபடி அறிவித்து ஐந்து மாதங்களாகியும் பத்திரம், நகைகளைத் திருப்பித் தராமல் இழுத்தடிக்கிறார்கள்" என்று விவசாயிகள் ஒரு பக்கம் புகார் எழுப்ப, "எடப்பாடி ஆட்சியில் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி மோசடி பற்றி விசாரணை நடத்தப்படும்" என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிதிருப்பதும் கூட்டுறவுத்துறைக்குள் அனலைக் கிளப்பியுள்ளது.

கூட்டுறவு வங்கி
கூட்டுறவு வங்கி

கடந்த பிப்ரவரி 5-ம் தேதி, 110 விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் 31.01.21 வரை விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் மூலம் 16,43,000 விவசாயிகள் பலன் அடைவார்கள் என்றும், தள்ளுபடி செய்யும் தொகையின் மதிப்பு 12,110 கோடி ரூபாய் என்றும் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் விவசாய சங்கத் தலைவர்களும், அரசியல் கட்சியினரும் புகார் எழுப்பினார்கள். பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் கூட்டுறவு வங்கிகள் அரசின் அறிவிப்பால் மேலும் சிக்கலுக்கு உள்ளாகும் என்று கூட்டுறவுத்துறை பணியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். 'பயிர்க்கடன் தள்ளுபடியில் நடந்துள்ள முறைகேடு பற்றி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விசாரணை நடத்துவோம்' என்று மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார்.

விவசாயி
விவசாயி

'கடன் தள்ளுபடி மூலம் பலனடையும் உண்மையான விவாயிகள் மிகவும் குறைவு. விவசாயம் செய்யாமல் வெறும் நிலத்தை மட்டும் காட்டி ஆதாயம் அடைந்தவர்களே அதிகம்' என்று புகார் எழும்பியதோடல்லாமல், 'தள்ளுபடி செய்யப்படுகிற தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு, கடைசி இரண்டு மாதங்களில் கடன் பெற்ற , அ.தி.மு.க புள்ளிகள்தான் பலனடையப் போகிறவர்களில் அதிகம். பல சொசைட்டிகளில் பணமே இல்லாமல் கடன் கொடுத்திருக்கிறார்கள். கடன் வழங்கிய தொகையின் மதிப்பு சேலம் மாவட்டத்தில்தான் அதிகம்' என அடுத்தடுத்துப் பல புகார்கள் எழுந்தன. சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இந்த விவகாரம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது மட்டுமல்லாமல், அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கியில் ஆறு சவரனுக்குள் அடமானம் வைக்கப்பட்ட நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தி.மு.க ஐந்து சவரனுக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. தற்போது தி.மு.க அரசு அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் திட்டமிட்டுவருவதாகச் சொல்லப்படும் நிலையில்தான் அமைச்சர் ஐ.பெரியசாமியின் குற்றச்சாட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயிர்க்கடன் வழங்குவது சம்பந்தமாக கடந்த 9-ம் தேதி மதுரையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஐ.பெரியசாமி, "கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு கடன் கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். யார் தவறு செய்திருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

இது பரபரப்பை ஏற்படுத்தவே, உடனே இதற்கு பதில் அளித்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, "நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் கூட்டுறவுத்துறை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. கூட்டுறவுத்துறை பற்றி அவருக்குத் தெரியவில்லை. விருப்பமில்லாமல் அந்தத் துறையில் அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமி வெறுப்பில் இப்படிப் பேசுகிறார்'' என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பயிர்க் கடன் தள்ளுபடி நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் நிலையில், அடுத்த சாகுபடிக்குத் தயாராகிவரும் விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களில் மீண்டும் கடன் பெறுவதும் சிக்கலாகி உள்ளது. செல்லூர் ராஜூவின் குற்றச்சாட்டு குறித்து ஐ.பெரியசாமியிடம் கேட்டோம். ''கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூவுக்கு அந்தத் துறையில் என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. தற்போதுவரை தொடக்க வேளாண்மை வங்கிகள் ஆன்லைன் மூலமாக மத்திய வங்கியுடன் இணைக்கப்படவில்லை. கடந்த 10 வருடங்களாக கூட்டுறவுத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அந்தப் புகார்களின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். செல்லூர் ராஜூ விஞ்ஞானபூர்வமாகச் சிந்திப்பவர். நாங்கள் அப்படியல்ல. சட்டப்படிச் செயல்பட்டு வருகிறோம்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

துறையில் முறைகேடு நடக்கவில்லை என்றால், விசாரணையை தொடங்கிய உடனே ஏன் பதற்றமடைய வேண்டும்? பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே விவசாயிகள் அல்லாதவர்களுக்கும் கடன் வழங்கியுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை வங்கியில் கடன் கொடுப்பதற்குப் பணமே இல்லை. மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்தும் பணம் வாங்கவில்லை. பணமே இல்லாமல் கடன் கொடுத்திருக்கிறார்கள். இது போன்ற அதிசயம் இந்தியாவில் வேறு எங்குமே நடந்ததில்லை. இந்த விஞ்ஞானபூர்வ ஊழலைத்தான் விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறோம். தமிழ்நாட்டிலுள்ள 4,451 தொடக்க வேளாண்மை வங்கிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தவறு நடந்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிகளில் கணினி இருந்தாலே அது ஆன்லைன் என நினைத்துக்கொண்டிருக்கிறார் செல்லூர் ராஜூ. முதலில் இதைப் பற்றி தெளிவு பெறட்டும். அதற்குப் பிறகு கூட்டுறவுத்துறை பற்றி எனக்கு என்ன தெரியும் என்பது பற்றிப் பேசட்டும். மக்களிடம் நேரடித் தொடர்பிலுள்ள இந்தத் துறை, கடந்த 10 ஆண்டுகளில் சீர்கெட்டுப் போயுள்ளது. இதைச் சீர்ப்படுத்த பல நடவடிக்கைளை எடுத்துவருகிறோம். தேசிய வங்கிகளுக்கு இணையாகக் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வருவோம்'' என்றார்.

செல்லூர் ராஜூவிடம் பேசியபோது, "அரசியலுக்காக, 'முறைகேடு' என்று சும்மா பேசுகிறார். கூட்டுறவுத்துறை சிறப்பாகவும் வெளிப்படையாகவும் செயல்பட்டது எங்கள் ஆட்சியில்தான். பயிர்க்கடன் தள்ளுபடியில் சொசைட்டி தலைவர், செயலாளர் முறைகேடு செய்திருந்தால் 30 நாள்களில் மாவட்ட பதிவாளருக்கும், 60 நாள்களில் கூடுதல் பதிவாளருக்கும், 120 நாள்களில் பதிவாளருக்கும் ஆன்லைன் மூலமாகவே புகார் அனுப்பலாம். இதை மக்களுக்கும் தெரிவித்திருந்தோம்.

அதுபோல் யார் யாருக்குக் கடன் தள்ளுபடி கொடுத்துள்ளோம் என்பதை ஒவ்வொரு சொசைட்டியிலும் டிஜிட்டல் போர்டில் தெரிவித்துள்ளோம். அதில் சங்க உறுப்பினர் எண்ணையும் போட்டிருப்போம். அதில் தவறாக யாரையாவது போட்டிருந்தால் உடனே புகார் அளிக்கும்படி அறிவித்திருந்தோம். அவ்வளவு வெளிப்படையாகச் செயல்படுத்தினோம். ஆனால், தி.மு.க ஆட்சிக் காலத்தில் அப்படி கிடையாது.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

பயிர்க்கடன் தள்ளுபடியில் கடுகளவுகூட முறைகேடு நடக்கவில்லை. என்ன நடந்திருக்கும்னா, பெரிய விவசாயிகள் 'முன்ன பின்ன' வாங்கியிருப்பார்கள். அதையும் நாங்கள் கண்டுபிடித்தோம். அது மட்டுமல்லாமல் புகார் உள்ள சொசைட்டி உறுப்பினர்களை மீண்டும் தேர்தலில் நிற்க முடியாத அளவில் செய்திருக்கிறோம். கூட்டுறவு சங்க விதிகள் 1988-ன்படி, முறைகேட்டில் ஈடுப்பட்ட நிர்வாகிகளை சொசைட்டி தேர்தலில் நிற்க அனுமதிக்கவில்லை. அவர்கள்மீது நடவடிக்கை எடுத்தோம். தி.மு.க ஆட்சியில்தான் இந்த விதியைக் கண்டுகொள்ளாமல் சொசைட்டி தேர்தலை நடத்தினார்கள். அதையும் மீறி தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்களிடம்தான் விசாரணை செய்ய வேண்டும். அதற்கு அரசாங்கம் பொறுப்பாக முடியாது. இன்று கூட்டுறவு மாநில வங்கி, மாவட்ட வங்கிகள் ஆன்லைன் செய்யப்பட்டதால்தான் இவ்வளவு டெபாசிட் வந்துள்ளது. தொடக்க வேளாண்மைச் சங்கங்கள் மொத்தம் 4,409. ஆனால், அவர் 4,451 என்று தவறாகச் சொல்கிறார். விவசாயிகள் அதிகமில்லாத பகுதியில் அமைந்துள்ள சொசைட்டிகளை கடன் சங்கங்களாக மாற்றியுள்ளோம். அங்கு பயிர்க்கடன் கொடுப்பதில்லை.

அது மட்டுமல்லாமல் ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கி வழிகாட்டல்படி பயிர்க்கடன் வாங்கியவர்களுக்கு கார்டு வழங்கியுள்ளோம். அதனால் ஆன்லைன் மூலம், மைக்ரோ ஏ.டி.ம் மூலம்தான் பணம் வழங்க முடியும். எல்லாம் ஆன்லைனில் உள்ளதால் கடன் கொடுக்கும் விவரம் அனைத்தும் மாவட்ட, மாநில வங்கிகளுக்கு உடனே வந்துவிடும். அதனால் இதில் எந்த முறைகேடும் பண்ண முடியாது. ஆனால், அவரோ அனைத்தும் கணினி மயமாக்கப்படவில்லை, ஆன்லைனில் இல்லை என்கிறார். நான் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்புதான் அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளையும், சொசைட்டிகளையும் கணினிமயமாக்கினேன். ஏ.டி.எம் வசதியுடன் தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளைக் கொண்டுவந்தேன். 13 வகையான கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் சிறப்பான முறையில் தேர்தலை நடத்தியுள்ளோம். 2008-ல் தேர்தலை அறிவித்த கலைஞரால் கட்சிக்காரர்கள் பிரச்னை செய்ததால் தேர்தலை நடத்த முடியவில்லை'' என்றவரிடம்,

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

"சேலம் மாவட்டத்துக்கு அதிகமாகக் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறதே?'' என்று கேட்டோம்.

"இருக்கிற வங்கிகளில் சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி பவர்ஃபுல்லா இருக்கு. இப்போது மட்டுமல்ல, ராஜாஜி பதிவாளரா இருந்த காலத்திலிருந்து அந்த வங்கி சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. அங்கு டெபாசிட்டுகள் அதிகம், உறுப்பினர்களும் அதிகம். அதனால் அந்த அடிப்படையில் கடன் அதிகம் வழங்கியிருப்பார்கள். எங்கள் ஆட்சியில் அரசாணை வெளியிட்டதால் கடன் தள்ளுபடியை இந்த அரசு செயல்படுத்தித்தான் ஆகணும். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை'' என்றார்.

நம்மிடம் பேசிய விவசாயியும், வழக்கறிஞருமான பி.ஸ்டாலின், ''அ.தி.மு.க., தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள்தான் மாறி மாறி கூட்டுறவு சொசைட்டிகளில் பொறுப்புக்கு வருகிறார்கள். அதுபோல் அங்கு பணியாற்றம் அலுவலர்கள் மனது வைத்தால்தான் சாமானிய விவசாயிகள் கடன் பெற முடியும். குறைந்த அளவிலான கடனை விவசாயம் செய்பவர்களுக்கு அளித்துவிட்டு, அதிக அளவில் கடனை அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு கொடுத்துவிடுவார்கள். இது உயரதிகாரிகளுக்கு நன்கு தெரியும். கிராம மக்கள் நமக்கேன் வம்பு என்று கண்டுகொள்வதில்லை. கூட்டுறவுத்துறையில் அறிவிக்கப்படும் புதிய கடன் உட்பட, சலுகைகள் அனைத்தும் ஆளும்கட்சி புள்ளிகளுக்கும், அலுவலர்களுக்கும் முன்கூட்டியே தெரிந்துவிடும் என்பதால், அளிக்கப்படும் சலுகை அனைத்தும் உண்மையான விவசாயிகளைவிட இவர்களுக்கே போய் சேர்கின்றன. இப்போது தள்ளுபடி அறிவிப்பு வந்தும் பத்திரங்களை, நகைகளைத் திருப்பி தர தாமதமாகிவருவதால், ஊரடங்கு காலத்தில் அதை நம்பியிருந்த விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்" என்றார்.

வழக்கறிஞர் பி.ஸ்டாலின்
வழக்கறிஞர் பி.ஸ்டாலின்

நம்மிடம் பேசிய கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சிலர், "பயிர்க்கடன் தள்ளுபடியில் நிறைய மோசடிகள் நடந்திருப்பது உண்மைதான். கடந்த ஜனவரி 31 வரை கடன் பெற்றவர்களுக்கு இந்தத் தள்ளுபடி கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், அந்த மாதத்தில்தான் அதிக அளவில் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு அறிவிப்புக்கு பின்பும் முன் தேதியிட்டு பல சொசைட்டிகளில் கடன் கொடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் பல மாவட்டங்களில் போராட்டம் நடத்தினார்கள். அதிலும் சேலம் மாவட்டத்தில் கடன் தொகை அதிகம். அதனால் இந்த மோசடி பற்றி உண்மையை வெளியே கொண்டுவர நேர்மையான விசாரணைக்குழுவை அரசு அமைக்க வேண்டும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு