Published:Updated:

முன்னாள் மின்சாரமா, கூட்டுறவுத்துறையா? லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த குறி யார் மீது?!

மின்சாரத்துறை
மின்சாரத்துறை

ஆளுங்கட்சியினர் பட்ஜெட் விவாதத்திலும் தொடர் புகார்களைக் கூறிவருகிறார்கள். இவையெல்லாம் அடுத்த ரெய்டுக்கான அடியா... அப்படி நடந்தால் அடுத்த குறி யார் மீது... ஓர் அலசல்!

தி.மு.க ஆட்சி அமைப்பதற்கு முன்பிருந்தே அ.தி.மு.க அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களைத் தெரிவித்துவந்தனர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், டி.ஜெயக்குமார் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது உட்பட பல்வேறு ஊழல் புகார்களை முன்வைத்து 97 பக்கங்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது தி.மு.க. ``கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும்” என்பதைத் தங்கள் தேர்தல் வாக்குறுதியிலேயே இடம்பெறச் செய்திருந்தனர். ஆட்சி அமைத்த நேரம் கொரோனா பெருந்தொற்றுக்காலம் என்பதால் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள்மீது கவனம் செலுத்தாமல் இருந்தது தமிழ்நாடு அரசு. பெருந்தொற்றின் தீவிரம் குறைந்ததும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து தனது வருமான வரி சோதனையை அரங்கேற்றியது. அதன் பிறகு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

ரெய்டு
ரெய்டு

தற்போது தி.மு.க-வின் பார்வை எடப்பாடி பழனிசாமி மீது திரும்பியிருக்கிறது. ஆனால், அவர்மீது வருமான வரித்துறை சோதனை என்றில்லாமல், கொடநாடு கொலை வழக்கு என்ற வேறொரு ரூட்டை எடுத்திருக்கிறது. இவரை அடுத்து அதிமுக-வின் எந்த முக்கியப் புள்ளி விசாரணை வடத்துக்குள் வருவார் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மத்தியிலேயேயும் எழுந்திருக்கிறது. அந்தக் கேள்வியை முன்வைத்து அரசியல் வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.

உடையும் கொடநாடு மர்மம்!

``அடுத்து யார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடக்கும்?” என்ற கேள்வியை திமுக-வின் முக்கியப் புள்ளிகள் சிலரிடம் முன்வைத்ததுமே ``முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மீதுதான் அடுத்த ரெய்டு” எனப் பளிச்சென பதில் கிடைத்தது. ``அதற்கு முகாந்திரமாக அறப்போர் இயக்கம் சில தகவல்களைப் பத்திரிகையாளர்கள் மத்தியில் வெளியிட்டிருக்கிறது. மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது , ``வட சென்னையிலுள்ள அனல் மின் நிலையத்துக்கு சென்னை துறைமுகம் மூலம் கொண்டுவரப்படும் நிலக்கரி உள் ஒதுக்கீடு, வெளி ஒதுக்கீடு என இரு பிரிவுகளாகச் சேமிக்கப்படுகிறது. நிலக்கரிக் கிடங்கில் இருப்பைச் சரிபார்த்தபோது, பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பில் உள்ள நிலக்கரிக்கும் இடையில் 2,38,000 டன் வித்தியாசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது" என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். மேலும் அதன் மதிப்பு சுமார் 85 கோடி ரூபாய் இருக்குமென்றும் அவர் தெரிவித்தார். அதைக் கண்டறிய ஆய்வுக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். நிலக்கரி ஊழலில் தொடர்புடையவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

தங்கமணி
தங்கமணி

நிலக்கரி மூலமாக நடந்த ஊழல் மட்டும் பல லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வை வலுப்படுத்த அந்தப் பகுதியில் இருக்கும் அமைச்சர்கள் மீதுதான் முதலில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அந்தவகையில் மட்டுமல்லாமல் தி.மு.க-வுக்கு மிகப்பெரிய குடைச்சலைக் கொடுத்தவர் என்ற வகையிலும், செந்தில் பாலாஜிக்கு ஆகவே ஆகாது என்ற வகையிலும் நிச்சயம் தங்கமணி மீதுதான் லஞ்ச ஒழிப்புத்துறையின் பார்வை பட வாய்ப்பு இருக்கிறது” என்றார்கள்.

வேலுமணி விவகாரம்: தொடரும் `ரெய்டுகள்’... விசாரணை வளையத்தில் அதிகாரிகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், சிலர், ``சட்டப்பேரவையில் நடந்த கூட்டுறவு மற்றும் உணவுத்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது ``கூட்டுறவுச் சங்கங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்ததை அடுத்துப் பேசிய ஊரகத் தொழில்துறை அமைச்சர் தாமோதரன், ``நாமக்கல், சேலம் பகுதிகளில் தாய்கோ வங்கியின் ஐந்து கிளைகளில் தங்க நகைகளை எடுத்துவிட்டு போலி நகைகளை வைத்து 7 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார்கள். அதனால் மீதமுள்ள 45 தாய்கோ வங்கி கிளைகளிலும் உள்ள நகைகளை ஆய்வுசெய்ய உத்தரவிட்டிருக்கிறார். மேலும், கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி ``பயிர்க்கடன் தள்ளுபடியைப் பொறுத்தவரை 81 சதவிகிதம் பேருக்கு ரசீது வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தவர், சாகுபடி பரப்பளவு, பயிருக்கு வழங்கவேண்டிய கடனைவிடப் பல மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும், அதன் மூலம் 516 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சேலம், நாமக்கல்லில் மட்டும் சுமார் 503 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதிலும் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். கடன் தள்ளுபடியை எதிர்நோக்கி ஒரு நாளைக்கு முன்பாகவே திட்டம் போட்டு தள்ளுபடி செய்திருப்பதாகவும், பயிர்க்கடன் வழங்கும்போது கூட்டுறவுச் சங்கங்கள் ஏனையை வசூலையும் கடனாகக் கொடுத்து விதிமீறலில் ஈடுபட்டிருக்கின்றன எனவும் தெரிவித்தார்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

மின்சாரத்துறை மானிய விவாதத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி ஆகியோர் மட்டும்தான் பதிலளித்தார்கள். ஆனால், கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் உணவுத்துறை அமைச்சர், ஊரகத் தொழில்துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் எனப் பலரும் பதிலளித்திருக்கிறார்கள். மேலும், கலைஞர் நூலக விவகாரத்திலும் செல்லூர் ராஜூ முதல்வரின் வெறுப்பைச் சம்பாதித்திருக்கிறார். எனவே அடுத்த ரெய்டு தங்கமணி அப்படி இல்லையென்றால் செல்லூர் ராஜூ மீதுதான் இருக்கும்” என்றார்கள்.

“என்னைத் தொட முடியாது!” - சவால்விடும் வேலுமணி

அதிகாரிகள் தரப்பில் விசாரணை செய்தோம். தமிழகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் தற்போது முகாமிட்டிருக்கிறார்கள். அவர்கள் முகாமிட்டுள்ள பகுதிகள் எல்லாம் முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்புடையவை. அவர்களின் டிரைவர்கள், உதவியாளர்கள், நெருங்கியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என மிகப்பெரிய திட்டத்தோடு அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். அரசு தரப்பிலிருந்து யார் என்று சொல்லிவிட்டால்போதும் தயாராகிவிடுவார்கள். தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதுமே மாதத்திற்கு ஓர் அமைச்சர் என்று திட்டமிட்டு ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாகத் திட்டமிட்டபடி அதைச் செயல்படுத்த முடியவில்லை. இனி அது தொடரும். கொஞ்சநாள் பொறுத்திருங்கள் யார் என்பது வெளிச்சத்துக்கு வரும்” என்றனர்.

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர்
எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர்

எதிர்க்கட்சியினர் சொல்வதுபோல அரசியல் காழ்ப்புணர்ச்சியாகவோ அவர்களை மிரட்டும் முயற்சியாகோ இருக்கலாம். ஆளும் கட்சி சொல்வது போல தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகவோ ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாகவோ இருக்கலாம். ஆனால், மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் அதற்குத் தீர்வும் நிச்சயம் தேவை. அதுதான் மக்களின் எதிர்பார்ப்பும் கூட.

அடுத்த கட்டுரைக்கு