தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக்கொண்ட நாளிலிருந்து தி.மு.க அரசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகிறார். அந்தவகையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி சென்னையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, தான் கையில் கட்டியிருக்கும் வாட்ச் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அதன் ரசீதை வெளியிடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். அண்ணாமலையின் லிஸ்ட்டில் எந்தெந்த அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள கமலாலயம் வட்டாரத்தில் விசாரித்தோம். முக்கிய அமைச்சர்களின் பெயர்களை இலைமறை காய்மறையாக நம்மிடம் தெரிவித்தார்கள்.
சமீபத்தில் பா.ஜ.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-வில் ஐக்கியமான நிர்வாகி ஒருவர், அண்ணாமலைக்கும் ஓர் அமைச்சருக்குமிடையே ரகசியத் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு வைத்திருந்தார். அந்த அமைச்சர் தொடர்பான ஊழல் புகாரைதான் பிரதானப்படுத்த திட்டமிட்டிருக்கிறாராம் அண்ணாமலை. அதேபோல, சமீபத்தில் தமிழ்நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் அத்தியாவசியப் பொருளை விநியோகம் செய்யும் முக்கியத் துறை சார்ந்த சில ஆவணங்கள் குறித்தும் தகவல்கள் வெளியிடப்போகிறாராம் அண்ணாமலை.
ஜோதி மாவட்ட அமைச்சர் தொடர்பாகவும் சில ஆவணங்களையும், இலாக்கா மாற்றம் நடந்த ஒரு துறை குறித்த சில ஆவணங்களையும் வெளியிடப்போவதாகக் கூறப்படுகிறது. மேலும், மோஸ்ட் சீனியர் அமைச்சர் ஒருவரின் துறை தொடர்பாகவும், இனிப்பு பெயரைக்கொண்ட அமைச்சரின் துறை குறித்த சில ஆவணங்களையும் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதேபோல பெண் அமைச்சர் ஒருவரின் துறையில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து ஆவணங்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மேலும், சில அமைச்சர்களின் சொத்துப்பட்டியல்களும், முதலீடுகள் குறித்தும் ஆவணங்கள் வெளியிடப்போகிறாராம். இந்தப் பட்டியல் முதற்கட்டமானதுதான் என்றும் இனிவரும் காலங்களில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதுப்புது பட்டியல் வெளியிடப்படும் என்று அழுத்தமாகக் கூறுகிறார்கள் கமலாலயத்திலுள்ள சீனியர்கள் சிலர்.
`அரசுக்கு எதிராக இதுவரை அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டுகளெல்லாம் ஆதாரமற்றவையாகவே இருந்திருக்கின்றன. உதாரணமாக ஆவின் ஹெல்த் மிக்ஸ் விவகாரத்தை எடுத்துக்கொள்ளலாம். தற்போதும் அதுபோலவே ஏதாவது ஆதாரமில்லாத குற்றச்சாட்டையே அண்ணாமலை முன்வைப்பார்’ என்று அமைச்சர்கள் தரப்பில் எண்ணுகிறார்கள். அதை மாற்றி ஆதாரங்களுடன் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.