Published:Updated:

பாஜக Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி - குஜராத் தேர்தல் களத்தில் முந்துவது யார்?

குஜராத் தேர்தல்

1995-ம் ஆண்டு முதல் குஜராத் தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்துவருகிறது பா.ஜ.க. கால் நூற்றாண்டுக்கு மேலாக அங்கு எதிர்க்கட்சி அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

பாஜக Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி - குஜராத் தேர்தல் களத்தில் முந்துவது யார்?

1995-ம் ஆண்டு முதல் குஜராத் தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்துவருகிறது பா.ஜ.க. கால் நூற்றாண்டுக்கு மேலாக அங்கு எதிர்க்கட்சி அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

Published:Updated:
குஜராத் தேர்தல்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கவிருக்கிறது வாக்குப்பதிவு. டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, குஜராத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. மும்முனைப் போட்டி நிலவும் குஜராத்தில் எந்தக் கட்சி முந்துகிறது?

1995-ம் ஆண்டு முதல் குஜராத் தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்துவருகிறது பா.ஜ.க. கால் நூற்றாண்டுக்கு மேலாக அங்கு எதிர்க்கட்சி அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். கடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலிலேயே போட்டியிட்டிருந்தாலும், இந்த முறை அங்கு தீவிரமாகக் கால்பதித்திருக்கிறது ஆம் ஆத்மி. காங்கிரஸ், பா.ஜ.க மட்டுமே களமாடிக்கொண்டிருந்த குஜராத்தில், ஆம் ஆத்மி தீவிரமாக வேரூன்றியிருப்பது, அந்த மாநில அரசியலையே புரட்டிப்போட்டிருக்கிறது எனலாம்.

மோடி
மோடி

பா.ஜ.க - அதிருப்தி!

குஜராத்தில் எப்போதும் சாதி, மதத்தை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கும் பா.ஜ.க., இந்த முறை ரூட்டை மாற்றியிருக்கிறது. மத்திய, மாநில பா.ஜ.க செய்த சாதனைகளைத் தொகுதிவாரியாகச் சென்று மக்களிடம் பிரபலப்படுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறது. குறிப்பாக, குஜராத் முழுவதும் பரவலாக இருக்கும் பழங்குடியின மக்களைக் கவரும் வகையிலான வாக்குறுதிகளையும் அறிவித்துவருகிறது. தங்களது சொந்த மாநிலத்தில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றனர். பிரசாரங்களும், அங்கு அறிவித்திருக்கும் புதிய மெகா திட்டங்களும் நமக்குக் கைகொடுக்கும் என பா.ஜ.க நம்பிக்கொண்டிருந்த சமயத்தில், மோர்பி பால விபத்து பா.ஜ.க-வுக்கு தலைவலியை உண்டாக்கியிருக்கிறது. இருந்தும், பட்டிதார், படேல் சமூக வாக்குகளும், மோடி, அமித் ஷாவுக்கான வாக்குவங்கியும் குஜராத்தில் தம்மை வெற்றிபெறச் செய்யும் என நம்புகிறது பா.ஜ.க.

சொதப்பும் காங்கிரஸ்!

கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க மீதிருந்த அதிருப்தியால் மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 77 இடங்களைக் கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியானது காங்கிரஸ். இந்த முறை அந்த அதிருப்தி மேலும் அதிகரித்திருப்பதால், வெற்றி நமதே என்றிருந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், ஆம் ஆத்மியின் வருகை காங்கிரஸுக்குப் பெரும் சிக்கலாக அமைந்திருக்கிறது. மேலும், கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள், எம்.எல்.ஏ-க்கள் விலகியதும் அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் சரியான முன்னெடுப்புகளைச் செய்யாதது, மக்கள் மத்தியில் அவர்களுக்கான செல்வாக்கைக் குறைத்திருக்கிறது. குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும், ராகுல் காந்தி தெலங்கானாவில் நடைப்பயணம் மேற்கொண்டுவருவது கட்சி நிர்வாகிகளிடமே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ``இனிமேலாவது சொதப்பாமல், எஞ்சியிருக்கும் நாள்களில் சரியான பிரசாரங்களை மேற்கொண்டால் காங்கிரஸின் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது தப்பிக்கும்'' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஆம் ஆத்மி - காங்கிரஸ்
ஆம் ஆத்மி - காங்கிரஸ்

ஆட்சியைப் பிடிக்குமா ஆம் ஆத்மி?

அரவிந்த் கெஜ்ரிவாலின் `டெல்லி மாடல்' பிரசாரமும், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆம் ஆத்மியின் பல்வேறு வாக்குறுதிகளும், குஜராத்தைத் தாண்டி இந்தியா முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இருந்தும், அந்தக் கட்சிக்கென மாநில அளவில் செல்வாக்குமிக்க தலைவர்கள் யாரும் இல்லாதது மைனஸ். ``கெஜ்ரிவால் மேற்கொள்ளும் பிரசாரங்கள் காங்கிரஸ் வாக்குவங்கியை உடைக்குமே தவிர, பா.ஜ.க-வின் வாக்குவங்கிக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படுத்தாது என்றே சொல்லப்படுகிறது. ஆம் ஆத்மியின் வருகை காங்கிரஸை பலவீனப்படுத்தியிருப்பதே பா.ஜ.க-வுக்குச் சாதகமாக அமையும்'' என்கின்றனர் குஜராத் அரசியலைக் கவனித்துவருபவர்கள்.

கருத்துக்கணிப்புகள் சொல்வதென்ன?

டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம், இ.டி.ஜி சர்வே நிறுவனத்தோடு இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள்:

* பா.ஜ.க: 125-131

* காங்கிரஸ்: 29-33

* ஆம் ஆத்மி: 18-22

ஏ.பி.பி செய்தி நிறுவனமும், சி-வோட்டர் சர்வே நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்:

* பா.ஜ.க: 135

* காங்கிரஸ்: 35

* ஆம் ஆத்மி: 11

* மற்றவை: 1

பாஜக - அமித் ஷா, மோடி
பாஜக - அமித் ஷா, மோடி
மற்ற சில கருத்துக்கணிப்புகளும் குஜராத்தில் பா.ஜ.க-வே வெற்றிபெறும் எனச் சொல்லியிருக்கின்றன. ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாறும் காட்சிகளுக்கேற்ப, தேர்தல் முடிவுகளும் மாறலாம்!