திரிபுரா சட்டப்பேரவை மொத்தம் 60 இடங்களைக்கொண்டது. இங்கு 25 ஆண்டுகளாக சி.பி.எம் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவந்தது. கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காதவிதமாக பா.ஜ.க வெற்றிபெற்றது. அப்போது மொத்தமிருக்கும் 60 தொகுதிகளுக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க 51 இடங்களிலும், ஐ.பி.எஃப்.டி 9 இடங்களிலும் போட்டியிட்டன.
இடது முன்னணிக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஃபார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தலா ஓர் இடத்திலும் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சி 59 இடங்களில் தனித்துப்போட்டியிட்டது. இதில் யாரும் எதிர்பாராதவிதமாக பா.ஜ.க 36 இடங்களில் வெற்றிபெற்றது.

கூட்டணி ஆட்சி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. எனினும், பா.ஜ.க கூட்டணிக்கும் இடது முன்னணி கூட்டணிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் இல்லை. இந்த இரு கூட்டணிகளுக்குமிடையே 5 தொகுதிகளில் 1,000 வாக்குகளுக்கும் குறைவாகவும், 29 தொகுதிகளில் 5,000 வாக்குகளுக்கும் குறைவாகவே வாக்கு வித்தியாசம் இருந்தது. அப்போது 36 தொகுதிகளில் வென்றிருந்த பா.ஜ.க-வால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை.
இதையடுத்து தனது கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணியுடன் (ஐ.பி.எஃப்.டி) இணைந்து ஆட்சி அமைத்தது பா.ஜ.க. அந்தக் கட்சி 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் நான்கரை ஆண்டுகள் திரிபுராவின் முதலமைச்சராக பா.ஜ.க-வின் பிப்லப் குமார் தேப் இருந்தார். அவரின் செயல்பாடுகளும், சர்ச்சைப் பேச்சுகளும் சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பைக் கிளப்பின. இதையடுத்து கடந்த ஆண்டு அவர் மாற்றம் செய்யப்பட்டு, மாணிக் சாகா முதல்வராக நியமனம் செய்யப்பட்டார்.

களத்தில் மம்தா பானர்ஜி..!
இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்குள்ளாக ஆளும் கூட்டணியிலிருந்து எட்டு எம்.எல்.ஏ-க்கள் விலகியிருக்கிறார்கள். இவர்களில், நான்கு பேர் பழங்குடியின மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருக்கும் `திப்ரா மோதா’ கட்சிக்கும், மூவர் காங்கிரஸுக்கும், ஒருவர் திரிணாமுல் காங்கிரஸுக்கும் சென்றுவிட்டனர். இவ்வாறான சூழலில்தான் அந்த மாநிலத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க 55 தொகுதிகளிலும், ஐ.பி.எஃப்.டி 5 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. இடது முன்னணி-காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ராம் நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு இடது முன்னணி தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. இது தவிர மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியும் தேர்தலைச் சந்திக்கிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த ஆண்டு நடக்கும் மாநிலத் தேர்தல்கள் பார்க்கப்படும் நிலையில், பா.ஜ.க கூட்டணிக்கு இந்தத் தேர்தல் சவாலான ஒன்றாகவே இருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதற்குத் தனது கூட்டணிக் கட்சிக்குக் குறைவான தொகுதிகளை ஒதுக்கியது, எட்டு எம்.எல்.ஏ-க்கள் விலகியிருப்பது முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இது தவிர காங்கிரஸ் கட்சி பழங்குடியினர் தொகுதிகளைக் குறிவைத்து தேர்தல் பணிகள் மேற்கொண்டுவருகிறது. எனவே, அந்தக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தத் தேர்தல் மூலமாக காங்கிரஸ் கட்சி தனது இழந்த வாக்குவங்கியை மீட்கும்பட்சத்தில் எதிர்க்கட்சிகளுக்குக் கூடுதல் நம்பிக்கையை வழங்கும்.
இலவச ஸ்கூட்டி!
அதனால், தேர்தல் களத்தில் பா.ஜ.க-வுக்குப் பதற்றம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே, பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அந்தக் கட்சி வெளியிட்டுவருகிறது. சமீபத்தில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதில், 'பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களில் பெண் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையின் பெயரில் ரூ.50,000-க்கு பத்திரம் வழங்கப்படும். கல்வியில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி தரப்படும். பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் அனைத்துப் பயனாளிகளுக்கும் 2 இலவச எல்.பி.ஜி சிலிண்டர்கள் வழங்கப்படும்.

தகுதியிருக்கும் அனைத்து நிலமற்ற குடிமக்களுக்கும் நிலப்பட்டா விநியோகிக்கப்படும். பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் பதிவுசெய்திருக்கும் அனைவருக்கும் 2025-க்குள் வீடு கட்டித் தரப்படும். ரூ.5-க்கு மூன்று வேளை சமைத்த உணவு வழங்க கேன்டீன்கள் திறக்கப்படும். கல்வியில் சிறந்து விளங்கும் 50,000 கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும். ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கான ஆண்டு வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும். ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் வழங்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இரட்டை இன்ஜின் ஆட்சி!
இது தவிர அந்தக் கட்சியின் சார்பில் தீவிர தேர்தல் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதில் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு பேசிவருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் நடந்த பிரசாரத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, "மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. பா.ஜ.க-வின் இரட்டை இன்ஜின் ஆட்சிதான் வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் கொண்டுவந்தது. வன்முறை, மிரட்டல், பயம் ஆகியவற்றிலிருந்து திரிபுரா மாநிலத்தை பா.ஜ.க-தான் காப்பாற்றியிருக்கிறது.

பல ஆண்டுகளாக திரிபுராவில் வளர்ச்சிக்கு இடையூறாக கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் இருந்துவந்தன. பா.ஜ.க-தான் வளர்ச்சியைக் கொண்டுவந்தது, வன்முறையை ஒழித்தது. நெடுஞ்சாலை, ரயில்வே, இன்டர்நெட், விமான நிலையங்கள் என்று அனைத்துவிதமான வளர்ச்சிகளையும் பா.ஜ.க திரிபுராவில் கொண்டுவந்திருக்கிறது. தற்போது தெற்காசியாவின் நுழைவுவாயிலாக (கேட்வே ஆஃப் சவுத் ஏசியா) திரிபுரா மாநிலம் வளர்ச்சி பெற்றிருக்கிறது. பழங்குடியின மக்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பழங்குடியின மக்களின் பங்களிப்பை வெளிப்படுத்த பா.ஜ.க அரசு பாடுபடுகிறது.
திரிபுராவில் பா.ஜ.க ஆட்சி அமைந்தால் நெடுஞ்சாலைகள், இணையதள சேவை, ரயில்வே, விமான சேவைகள் மேம்படுத்தப்படும் என அறிவித்தோம். அதன்படி இன்று செய்து முடித்திருக்கிறோம். இணையதள சேவைக்காக திரிபுரா கிராமங்களில் கண்ணாடி இழை கேபிள்களைப் பதிக்கும் பணி வேகமாக நடைபெற்றுவருகிறது. கிராமங்களை இணைக்க 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக புதிய சாலைகள் போடப்பட்டிருக்கின்றன.

அகர்தலாவில் விமான நிலையம் கட்டப்பட்டிருக்கிறது. கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் கிராமங்களுக்கு 4-ஜி இணையதள சேவை வழங்கப்பட்டுவருகிறது. இதன் மூலம் திரிபுரா, உலக அரங்கில் இடம்பெற்றிருக்கிறது. திரிபுரா மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் முனைப்பில் பா.ஜ.க அரசு ஈடுபட்டிருக்கிறது. முன்பெல்லாம் திரிபுரா மாநில காவல் நிலையங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைப்பற்றி வைத்திருந்தனர்.
"உங்களின் வேலைக்காரனாக..."
பா.ஜ.க ஆட்சி வந்த பிறகு, சட்டம் தனது ஆட்சியைச் செய்கிறது. மக்களுக்கு சுய அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளால் ஏழைகளை எந்தப் பிரச்னையிலிருந்தும் விடுவிக்க முடியாது. பா.ஜ.க உங்களின் வேலைக்காரனாக, உங்களின் உண்மையான தோழனாக, உங்களின் ஒவ்வொரு கவலையையும் போக்க இரவும் பகலும் கடுமையாக உழைத்துவருகிறது. எனவே, மீண்டும் இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.
இவ்வாறு ஒருபுறம் கவர்ச்சிகரமான அறிவிப்பு, தீவிர தேர்தல் பிரசாரம் என பா.ஜ.க தீவிரம் காட்டி வந்தாலும், மறுபுறம் எதிர்க்கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுத்திவருகின்றன.