Published:Updated:

முல்லைப்பெரியாறு அணை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது?! - சர்ச்சையும் விளக்கமும்

முல்லைப்பெரியாறு அணையில் கேரள அரசு தண்ணீரைத் திறந்துவிட்டது என்ற சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அதன் உண்மை நிலவரம் என்ன?!

முல்லைப்பெரியாறு அணை சர்ச்சை:

சமீபத்தில் கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின், இடுக்கி மாவட்ட ஆட்சியர் சீபாஜார்ஜ், பீர்மேடு எம்.எல்.ஏ வாலுர்சோமன் மற்றும் பல்வேறு கேரளா அரசு உயரதிகாரிகள் முல்லைப்பெரியாறு அணைக்குச் சென்றனர். அப்போது அங்கிருந்த வனத்துறைக்குச் சொந்தமான படகில் சென்று அணைப்பகுதியைப் பார்வையிட்டார்கள். மேலும், அங்கிருந்த அதிகாரிகளிடமும், கேரளா காவல்துறையினரிடமும் விவரங்களைக் கேட்டறிந்துள்ளனர். அதன் பின்னர் கேரள அரசின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளின் கூட்டமும் நடைபெற்றது.

அணையில் ஆய்வு மேற்கொண்ட  கேரள அமைச்சர்,  அதிகாரிகள்
அணையில் ஆய்வு மேற்கொண்ட கேரள அமைச்சர், அதிகாரிகள்

தொடர்ந்து கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின், அக்டோபர் 29-ம் தேதி முல்லைப்பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்தார். சொன்னபடியே, அன்று காலை 7 மணியளவில் அணைக்கு வந்தார் அமைச்சர். மொத்தமுள்ள 13 மதகுகளில், அணையின் 3 மற்றும் 4-வது மதகைத் திறந்து, விநாடிக்கு 257 கனஅடி வீதம், 514 கனஅடி நீர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் கேரளா மாநிலத்தின் இடுக்கி அணைக்குச் செல்லும்.

விவசாயிகள் கண்டனம்:

தண்ணீர் திறந்துவிட்டிருப்பதால், கரையோரப் பகுதி மக்கள் முகாம்களில் பாதுகாப்பாகத் தங்குவதற்கான ஏற்படும் செய்யப்பட்டிருந்தது. அணையில் நீர் திறக்கும்போது, தமிழக அரசைச் சேர்ந்த பெரியாறு அணை செயற்பொறியாளரும், உதவிப் பொறியாளரும் உடனிருந்தனர். முல்லைப்பெரியாறு அணையை, தமிழக அரசின் அனுமதியில்லாமல், கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் திறந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கேரள அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன.

அணை திறக்கும்போது கேரள அமைச்சர், அதிகாரிகள்
அணை திறக்கும்போது கேரள அமைச்சர், அதிகாரிகள்

கடந்த 29-ம் தேதி தேனியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவசாயச் சங்க நிர்வாகிகள், ``முல்லைப்பெரியாறு அணையில் 139.5 அடி நீரைத் தேக்க உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால், அந்த அளவுக்கு வருவதற்கு முன்பே அணையிலிருந்து கேரளாவுக்கு 514 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களுக்கு அணையிலிருந்து நீர் கிடைக்காத நிலையில், இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நாள் ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கும் கறுப்பு நாள். கேரள அரசின் செயலைக் கண்டித்து இன்று முதல் போராட்டம் நடத்தவிருக்கிறோம்" என்று கூறினார்கள்.

முல்லைப்பெரியாறு அணை: கேரளாவின் ஆய்வு, தொடர் கோரிக்கை... இரண்டு மதகுகள் வழியாக உபரிநீர் திறப்பு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது, ``முல்லைப்பெரியாறு அணை முதலன்முறையாகத் தமிழக அரசின் அனுமதி பெறாமல் கேரள அரசால் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. மாநில அரசுக்குத் தெரிந்துதான் இது நடந்ததா, அனுமதி பெற்றுத்தான் செய்தார்களா என்று தெரியவில்லை. அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும்போதே அவசரமாகத் திறந்துவிடப்பட்டிருக்கிறது" என்றார்.

அண்ணாமலை
அண்ணாமலை

மேலும்,``இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். தமிழக அமைச்சர்கள் எங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளனர். தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூற வேண்டும். தமிழக அரசு அனுமதி இல்லாமல், கேரள அரசு தங்களின் விருப்பம்போல் திறந்திருக்கிறார்கள். திமுக அரசு, தமிழக உரிமையை விட்டுக்கொடுக்கத் தயாராகிவிட்டதா என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும்" என்று பேசினார்.

ஆர்ப்பாட்டம் அறிவித்த அதிமுக:

இதற்கிடையே, மதுரையிலுள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பின்னர் முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கிக்கொள்ள நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருந்தார். அதிமுக ஆட்சியில் மூன்று முறை 142 அடி நீர் தேக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

ஆனால், தற்போது, முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்க, கேரள அரசு இடையூறு தருகிறது. அதை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. திமுக அரசைக் கண்டித்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர், ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும்" என்று கூறினார்.

தமிழக அரசின் விளக்கம்:

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டிருந்த அறிக்கையில், ``முல்லைப்பெரியாறு அணை முழுமையாக தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சில ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் முல்லைப்பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுபோலத் தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மைக்குப் புறம்பானது. 28-ம் தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துவந்ததால், இரண்டு மதகுகளைத் திறக்க மதுரை மண்டல நீர்வளத்துறை முடிவெடுத்தது. இது குறித்து, நிலையான வழிகாட்டுதலின்படி, கேரள அரசின் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

துரைமுருகன்
துரைமுருகன்

தமிழக நீர்வளத்துறைப் பொறியாளர்களால்தான் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டன. மதகுகள் திறக்கும் நேரத்தில் கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் உடனிருந்து பார்வையிட்டார்கள். உண்மை நிலை இதுவாக இருக்க, கேரள அரசு அதிகாரிகள்தான் அணை மதகுகளைத் திறந்தார்கள் என்பது தவறான தகவல். உச்ச நீதிமன்ற ஆணையின்படி, மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதலில் தெரிவித்த, நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அளவின்படி, தமிழக நீர்வளத்துறை அணையின் நீர்மட்டத்தை முறைப்படுத்திவருகிறது. அணையின் இயக்கம் குறித்துத் தவறான செய்தி தெரிவித்திருப்பதில், ஏதோ உள்நோக்கம் இருப்பதுபோலத் தோன்றுகிறது. தமிழக அரசுதான் முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருகிறது" என்று கூறப்பட்டிருந்தது.

முல்லைப்பெரியாறு விவகாரம்: `டிசம்பரில் ஸ்டாலினுடன் பினராயி விஜயன் சந்திப்பு' - கேரள அமைச்சர் தகவல்!

கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின், ``முல்லைப்பெரியாறு அணையில் வரும் 29-ம் தேதி காலை 7 மணி முதல் நீர் திறக்கப்படும் எனத் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் இது குறித்து அச்சம்கொள்ள வேண்டாம். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் (28.10.2021) காலை 7 மணியிலிருந்து சம்பந்தப்பட்ட கிராம அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் செல்ல வேண்டும்.

கோவிட் நெறிமுறையை முழுமையாகப் பின்பற்றி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமுக்குச் செல்வோரின் வீடுகள் இருக்கும் பகுதியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்" என்று கடந்த 27-ம் தேதி தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதிவு மூலம், அணையில் நீர் திறப்பது தமிழக அரசு சார்பில் கேரளாவுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றும், தண்ணீர் திறக்கும்போது, கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் உடனிருந்தார்கள் என்பதும் தெரியவருகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு