Published:Updated:

மொழிப் பிரச்னையை முதலில் கிளப்பியது யார்?! - பிரதமர் மோடியின் ஆதங்கமும் அரசியலும்

மோடி ( AP )

உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி மொழி குறித்துப் பேசிய கருத்து இந்திய அளவில் பெரும் விவாதமாக உருவான நிலையில், பிரதமர் மோடி மொழி குறித்து கருத்து தெரிவித்திருப்பது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மொழிப் பிரச்னையை முதலில் கிளப்பியது யார்?! - பிரதமர் மோடியின் ஆதங்கமும் அரசியலும்

உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி மொழி குறித்துப் பேசிய கருத்து இந்திய அளவில் பெரும் விவாதமாக உருவான நிலையில், பிரதமர் மோடி மொழி குறித்து கருத்து தெரிவித்திருப்பது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Published:Updated:
மோடி ( AP )

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு பேசும்போது, ``கடந்த சில நாள்களாகவே மொழி அடிப்படையில் சர்ச்சையைக் கிளப்ப முயற்சி நடைபெற்றுவருகிறது. பா.ஜ.க ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பைக் காண்கிறது. தேசிய கல்விக் கொள்கையில் ஒவ்வொரு மாநில மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் 37-வது கூட்டத்துக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்துப் பேசும்போது, "உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாத வரையில், அது பரப்பப்படாது. மத்திய அமைச்சரவையின் 70 சதவிகித நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்
Rajasekaran.K / Vikatan

அமித் ஷா இந்தி மொழி குறித்து தெரிவித்த இந்தக் கருத்துக்கு பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு பதிலளிக்கும்விதமாக “தமிழ்தான் இணைப்பு மொழி” எனக் கூறினார். அதோடு தனது சமூக வலைதளப் பக்கங்களில், தமிழ்த்தாய் தமிழின் அடையாளமான `ழ’கரத்துடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை, `இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்...’ என்ற பாரதிதாசனின் பாடலைக் குறிப்பிட்டு, `தமிழணங்கு’ எனப் பதிவிட்டிருந்தார்.

தமிழணங்கு
தமிழணங்கு

ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த இந்த ஓவியம் இந்திய அளவில் மிகப்பெரிய விவாதமாக மாறியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“மொழி குறித்தான விழிப்புணர்வு முன்பு இருந்ததைவிட இப்போது அதிகமாக இருக்கிறது” என்கிறார் வழக்கறிஞரும், திமுக செய்தித் தொடர்பாளருமான மனுராஜ் சண்முகசுந்தரம்.

“மொழிப் பிரச்னை இன்றோ நேற்றோ ஆரம்பித்த சர்ச்சையோ, சண்டையோ, போராட்டமோ இல்லை. குறிப்பாக இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது 1937-களிலிருந்தே தமிழகத்தில் மெட்ராஸ் மாகாணத்தில் அதிகமாக இருந்தது. பிரதமர் மோடியின் கருத்து எதன் அடிப்படையில் சொன்னார் என்பது தெரியவில்லை.  ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு என்று பா.ஜ.க முன்வைக்கிறது. அந்த ஒரு மொழி இந்திதான் என்பதை எல்லோரும் உணர்கிறார்கள் என்பதன் பிரதிபலிப்பாகக்கூட இருக்கலாம். அந்த ஒரு மொழி ஒவ்வொருவரின் தாய் மொழி என்றால் இங்கு பிரச்னை இல்லை. 1950-ம் ஆண்டு, நம் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டபோது, எட்டாவது அட்டவணையில் எட்டாவது ஷெட்யூலில் குறைந்த அளவில்தான் மொழிகள் இருந்தன. ஆனால், இன்றைக்கு 22 மொழிகள் உள்ளன. 1950-லிருந்து 2022 வரை அலுவல் மொழிகளாக அதிகப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். குறைக்கவில்லை.

வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம்
வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம்

மொழி குறித்தான விழிப்புணர்வு கடந்த எழுபது ஆண்டுகளில் அதிகரித்துதான் இருக்கிறது. மொழி அழிந்தால் நம் கலாசாரம், பண்பாடு இருக்காது. அந்த உரிமையைப் பேசுவதற்கே பேச்சு இருக்காது என்பதை மக்கள் உணர்கிறார்கள். அரசியல் கட்சிகளும் அதை எடுத்துக்கொண்டு முன்வைப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஏனெனில், அதற்கான இடத்தை சட்டம் நமக்குக் கொடுத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 14-ன் படி மொழி, மதம், பாலினம் அடிப்படையில் ஒடுக்கக்கூடாது. எல்லாமே சமம் எனச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அதை மீறும்போது சுட்டிக்காட்டுகிறோம். நேரு ‘இந்தி இருக்கும்போது ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருந்துகொண்டுதான் இருக்கும்’ என்கிற உத்தரவாதம் கொடுக்கிறார். எங்கெல்லாம் இந்தி அந்த மாநிலத்தின் மொழி இல்லையோ அங்கெல்லாம் ஆங்கிலத்தைச் சமமாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனச் சட்டம் சொல்கிறது. உலகப் பொதுமொழியாக ஆங்கிலம் இருக்கிறது. ஆனால், ஒவ்வோர் உள்துறை அமைச்சரும் ஏதாவது ஒரு வழியில் குழப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். அதைத்தான் எதிர்கிறோம்” என்கிறார் மனுராஜ் சண்முகசுந்தரம்.

“திமுக, திக மொழிப் பற்றை உண்டாக்குவதைவிட மொழி வெறியை உண்டாக்கி, அதன் மூலமாக அரசியல் செய்துவருகிறார்கள்” என்கிறார் ‘பெரியாரின் மறுபக்கம்’, ‘இந்துத்துவ அம்பேத்கர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரும், பா.ஜ.க பிரமுகருமான மா.வெங்கடேசன்.

“மொழிக்கு அடிப்படையில் இனம் வைக்கிறார்கள். அந்த இனம் திராவிட இனம் என்று சொன்னால்கூட, அதைச் சுருக்கி தமிழ் என்றுதான் கொண்டுவருகிறார்கள். மொழியை வைத்து அரசைக் கட்டமைத்தவர்கள், அந்த மொழிக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்களா இல்லை வளர்த்திருக்கிறார்களா என்று பார்த்தால் அப்படி இல்லை. உதாரணத்துக்கு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைக் கணக்கில் எடுத்து அவர்களிடம் தமிழ் எழுதச் சொன்னால் சரியாக எழுத, படிக்க வரவில்லை. அறிவியல், பொறியியல் பாடங்கள் தமிழ் மொழிபெயர்ப்பே இல்லை. கிட்டத்தட்ட 1967-லிருந்து இருக்கிறவர்கள் இதை எப்போதோ கொண்டுவந்திருக்க வேண்டுமல்லவா... இங்கு சட்டம் போட்டுதான் வணிக வளாகங்களுக்கே தமிழ்ப் பெயர் வைக்கவேண்டிய சூழல் இருக்கிறது.

எழுத்தாளர் மா.வெங்கடேசன்
எழுத்தாளர் மா.வெங்கடேசன்

சுதந்திரத்துக்குப் பிறகு மொழி அடிப்படையில்தான் மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்து உண்டாக்கினார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நாட்டின் முன்னேற்றம் நோக்கிப் போகும்போது மறுபடியும் மொழியைவைத்து அரசியல் செய்கிறார்கள். பா.ஜ.க என்றும் தாய்மொழிக்கு எதிரி அல்ல. ஒரு மொழிதான் உயிர். மொழி அழிந்தால் அந்த இனம் அழிந்துவிடும். அந்தத் தெளிவில்தான் ஐந்தாவது வரை தாய் மொழியில் படிக்க வேண்டும் என்கிறோம். அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே இந்தியைக் கொண்டு வர வேண்டும் என்பது இருப்பதால்தான் இந்தியைப் பற்றிப் பேசுகிறோம். அதனால்தான் நிதி ஒதுக்கி மத்தியில் ஆளும் அரசுகள் இந்திக்காக நிறைய செய்கிறார்கள்.

புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி எல்லோரும் பேசுகிறோம். அவர் இந்தி மொழி பற்றிச் சொல்லும்போது,  ‘ஒரு தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னால் இந்தி நிச்சயமாக வேண்டும். இந்தியை விட்டுவிட்டால் இந்த தேசம் சிதறுண்டு போகும்’ என்கிறார். மற்ற கட்சிகள் இதை ஏற்றுகொள்வார்களா?

தமிழ்நாட்டில் தமிழ் மொழியை வளர்த்திருந்தால் பிரச்னையே இல்லையே... தனியார் பள்ளிகளில் எங்கு தமிழ் இருக்கிறது...  `இந்தி தமிழை அழிக்கிறதா, ஆங்கிலம் தமிழை அழிக்கிறதா’ என்கிற வாதத்தை வைத்தால் ஆங்கிலம்தான் தமிழை அழிக்கிறது என்பேன். காரணம், தமிழ்-இந்தி வார்த்தைகள் நெருங்கியிருக்கின்றன. என் வேலை சம்பந்தமாக 24 மாநிலங்களுக்குப் போனேன். இதில் அடிமட்ட தூய்மைப் பணியாளர்களைவைத்து ஒரு மாநிலத்தில் நான்கு மாவட்டங்களிலாவது கூட்டம் நடத்துவேன். அப்படிப் பார்க்கும்போது ஒரு ஆளுக்குக்கூட ஆங்கிலம் தெரியவில்லை. எல்லாமே இந்திதான். இந்தியா முழுவதும் சுற்ற வேண்டுமென்றால் இந்தி அவசியம். ஆங்கிலம் தேவையே இல்லை. சிலர் ஆங்கிலம் உலகப் பொதுமொழி என்கிறார்கள். ஜெர்மனி, சீனா போன்ற நாடுகளில் ஆங்கிலம் தெரியாமல்தான் இருக்கிறார்கள். குறிப்பிட்ட நாடுகளுக்குப் போகும்போதுதான் ஆங்கிலம் தேவைப்படுகிறது. இங்கு மொழியை வளர்ப்பதற்கு பதிலாக, மொழியைவைத்து அரசியல் செய்வதைத்தான் பிரதமர் மோடி சுட்டிக்காட்டுகிறார்” என்கிறார் மா.வெங்கடேசன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism