Published:Updated:

பி.ஜே.பி. பிரசாரத்தை முறியடித்து வெற்றி... மிதமான இந்துத்துவ வாதியா கெஜ்ரிவால்?

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

மீண்டும் டெல்லியைக் கைப்பற்றியுள்ளார் ஆம்ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால். தேர்தலில் வெற்றிபெற்றவுடன், ``இன்று செவ்வாய்க்கிழமை. அனுமாருக்கு உகந்த நாள். அவர் டெல்லியை ஆசீர்வதித்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்" என்றார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ``பி.ஜே.பியை எதிர்ப்பது, ஒட்டுமொத்த இந்துக்களையும் எதிர்ப்பது ஆகாது. அரசியல் ரீதியாக நமக்குள் சண்டைகள் இருக்கலாம்; ஆனால் இந்துக்களாக நமக்குள் பிரச்னை எதுவும் இருக்கக்கூடாது" என்றார். அவர் அவ்வாறு கூறியதற்கு இரண்டு நாள்களுக்குப் பிறகு, டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன.

மீண்டும் டெல்லியைக் கைப்பற்றியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். தேர்தலில் வெற்றிபெற்றவுடன், ``இன்று செவ்வாய்க்கிழமை. அனுமாருக்கு உகந்த நாள். அவர் டெல்லியை ஆசீர்வதித்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்" என்றார். அவரது சகாக்களும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுமான சஞ்சய் சிங், ராகவ் சத்தா முதலானோரும் இதை முன்மொழிந்ததோடு, `பாரத்மாதா கீ ஜே!', 'வந்தே மாதரம்!' முதலான முழக்கங்களை முன்வைத்து, வெற்றியைக் கொண்டாடினர்.

சுரேஷ் பையாஜி ஜோஷி
சுரேஷ் பையாஜி ஜோஷி

பி.ஜே.பியின் தேர்தல் வியூகம் மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது. தேர்தல் பிரசாரங்கள் முழுவதுமே, பி.ஜே.பி தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவையே முன்வைத்து பிரசாரம் செய்தனர். இதை எதிர்கொள்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவால், மிதவாத இந்துத்துவத்தைத் தேர்ந்தெடுத்தார். அவரது பிரசார உத்தி, டெல்லியின் வளர்ச்சிப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்த போதும், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் தன்னை `அனுமான் பக்தர்' ஆக வெளிப்படுத்திக்கொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் நேரலையில் அனுமான் மந்திரத்தைத் தெளிவாகக் கூறியும் தனது இந்து அடையாளத்தை நிரூபித்தார்.

தனது தேர்தல் பிரசாரத்தின் தொடக்க நாள்களை டெல்லியின் வளர்ச்சி, பாதுகாப்பான குடிநீர், தடையற்ற மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, தரமான மருத்துவம், கல்வி முதலான சொற்களால் நிரப்பி வந்த அரவிந்த் கெஜ்ரிவாலை, தேர்தல் நாள் நெருங்க நெருங்க, இந்து அடையாள அரசியலை நோக்கித் தள்ளியது பி.ஜே.பியின் பிரசாரம். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஆம் ஆத்மி கட்சி எந்தக் கருத்தையும் தேர்தல் பிரசாரத்தில் கூறாத போது, பி.ஜே.பி.யின் பிரசாரங்கள் அதன் அடிப்படையிலேயே இயற்றப்பட்டிருந்தன. ஷஹீன்பாக் போராட்டம் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பேசுபொருளாக மாறியது.

டெல்லி காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால், ஷஹீன்பாக்கை ஒரே நாளில் காலி செய்திருப்போம்
அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு `ஹாட்ரிக் ஹிட்' பரிசளித்த தூண்கள் யார்?!

பிரதமர் நரேந்திரமோடி டெல்லி தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில், ``சீலம்பூர், ஜாமியா, ஷஹீன்பாக் முதலான போராட்டங்கள் தேச ஒற்றுமையைச் சீர்குலைக்கும் அரசியல் நோக்குடன் நடைபெறுகின்றன" என்றார். இவை அனைத்தும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ``ஷஹீன்பாக்கில் போராடுபவர்களுக்குக் கெஜ்ரிவால் பிரியாணி விநியோகிக்கிறார்" என்றார். பி.ஜே.பியின் வாக்காளர்களுக்கு, `பிரியாணி' என்பது எதைக் குறிக்கும் என்பது தெரியும். ஷஹீன் பாக்கை வைத்து நடக்கும் அரசியலைக் கெஜ்ரிவால் எளிதாகக் கையாண்டார். ``டெல்லி காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால், ஷஹீன்பாக்கை ஒரே நாளில் காலி செய்திருப்போம்" என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.

முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் போக்கைக் கெஜ்ரிவால் கையாண்டிருந்தால், அதைப் பயன்படுத்தி பி.ஜே.பி தேர்தல் பிரசாரத்தைக் கூர்மைப்படுத்தியிருக்கும். ஆனால், அவரோ, பி.ஜே.பியால் குறிவைக்கப்படும் இந்து வாக்குகளைக் கவரும் நோக்கில் செயல்பட்டார். ஷஹீன்பாக்கின் முஸ்லிம்கள் எப்படியும் பி.ஜே.பிக்கு வாக்கு செலுத்தப் போவதில்லை என்பது அவரது திட்டமாக இருந்திருக்கலாம். அவரது திட்டப்படியே, ஷஹீன்பாக் அமைந்திருந்த ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் அமானத்துல்லாஹ் கான் ஏறத்தாழ 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

மோடி - கெஜ்ரிவால்
மோடி - கெஜ்ரிவால்
தேர்தல் அரசியல் களத்திற்குள் பி.ஜே.பி முழுமையாக வருவதற்கு முன்பு வரை, சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களின் வாக்கு வங்கியைக் காங்கிரஸ் கட்சியும், பி.ஜே.பி அல்லாத மாநிலக் கட்சிகளும் குறிவைத்துப் பணியாற்றின. ``முஸ்லிம்களின் வாக்கு வங்கிக்காக இந்துக்களை வஞ்சிக்கிறார்கள்" என்ற முழக்கத்தின் அடிப்படையிலேயே, இந்து வாக்கு வங்கியைக் கடந்த 30 ஆண்டுகளாக பி.ஜே.பி. ஒருங்கிணைத்து வந்தது. சாமான்ய இந்துக்களின் மனநிலையின் இந்த மாற்றத்தைத் தொடர்ந்து விதைத்து வந்தது சங் பரிவார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், இந்த மனமாற்றத்தையே அறுவடை செய்துகொண்டது பாரதிய ஜனதா கட்சி. எனினும், இந்து வாக்கு வங்கியின் மனநிலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதை டெல்லியில் பயன்படுத்திக்கொண்டார் கெஜ்ரிவால்.

பி.ஜே.பியின் ராமருக்குப் பதிலாக அனுமானைப் பயன்படுத்தினார் கெஜ்ரிவால். தேர்தல் முடிவுகள் வந்தவுடன், அனுமான் கோயிலுக்குச் சென்று, வழிபாடு நடத்தினார். 2016-ம் ஆண்டு, பிரதமர் மோடி `துல்லியத் தாக்குதல்' நடத்தியதாகக் கூறியபோது, அதைக் கேள்விக்குட்படுத்தியதால் கடுமையாக விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்ட கெஜ்ரிவால், தற்போது காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை ஆதரித்தார். ஜே.என்.யூவில் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்த கெஜ்ரிவால், ஜாமியாவில் முஸ்லிம் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து வாயே திறக்கவில்லை. பி.ஜே.பியைத் தேர்தலில் வீழ்த்தும் நோக்கில், தனது வளர்ச்சிப் பணிகளைப் பட்டியலிட்டது போலவே, தன்னை இந்து தேசியவாதியாகக் கட்டமைக்கவும் கெஜ்ரிவால் தயங்கவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவாலின் கடந்த காலத்தை வைத்து, அவரது தற்போதைய நிலைப்பாடுகளை மதிப்பிடலாம். 'சமத்துவத்திற்கான இளைஞர்கள்' என்ற இடஒதுக்கீடு எதிர்ப்பு அமைப்பின் வழியாகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் அரவிந்த் கெஜ்ரிவால். அது மண்டல் கமிஷனின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்து வரும் அமைப்பு. தற்போது அதனோடு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எந்தத் தொடர்பும் இல்லையென்றபோதும், அதைத் தற்போதைய சூழலோடு பொருத்திப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அன்னா ஹசாரேவுடன், `ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் முன்னணித் தலைவராக அவர் இருந்தபோது, அந்த அமைப்பு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஒன்றாக அறியப்பட்டிருந்தது. ஊழல் எதிர்ப்பு ஒன்றை மட்டுமே பிரதானமாகக் கொண்டிருந்த கெஜ்ரிவாலின் அமைப்பு, ஊழலுக்கு மூலகாரணமாக இருந்தவற்றை விமர்சிக்கத் தவறியது.

அரவிந்த் கெஜ்ரிவால் - அன்னா ஹசாரே - கிரண் பேடி
அரவிந்த் கெஜ்ரிவால் - அன்னா ஹசாரே - கிரண் பேடி

ஆம்ஆத்மி கட்சி தொடங்கப்பட்டபோது, ``அரசு என்பது நிர்வாகம் மட்டுமே செய்ய வேண்டும்; வியாபாரம் செய்யக் கூடாது. வியாபாரம் என்பது தனியாரின் பணி" என்றார். அப்போதே, ஆம் ஆத்மி கட்சி நடுத்தர மக்களின் பகல் கனவு என்றும், என்.ஜி.ஓ அரசியல் செய்யும் கட்சி என்றும் வர்ணிக்கப்பட்டது. உலகம் முழுவதும் தாராளமயம் பொருளாதாரக் கொள்கையாக அமல்படுத்தப்பட்டிருந்த வேளையில், இந்தியாவில் ஊழல் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்தபோது, ஃபோர்டு முதலான பெருநிறுவனங்களிலிருந்து நிதிபெற்று தொடங்கப்பட்டிருந்தது ஆம் ஆத்மி கட்சி. `ஆம் ஆத்மி' என்றால் `சாமான்யன்' என்று பொருள். ஆம் ஆத்மி முன்வைத்த `சாமான்யன்', தாராளமயத்தை ஏற்று, ஊழலை மட்டுமே பிரதானப் பிரச்னையாகக் கருதுபவன். பிற்காலத்தில், தனது முந்தைய கருத்துகளை மாற்றிக் கொண்டதாகக் கூறினார் அரவிந்த் கெஜ்ரிவால்.

தாராளமயத்தின் நெருக்கடியில் பிறந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது இந்துத்துவத்தின் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. பி.ஜே.பியால் மூர்க்கமாக மாற்றப்பட்ட இந்து வாக்கு வங்கியைக் கைப்பற்ற மிதவாத இந்துத்துவம் ஆம் ஆத்மி கட்சிக்குக் கைகொடுத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் முதலான மாநிலங்களின் தேர்தலின்போது, இதே உத்தியைக் கடைப்பிடித்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், கைலாஷ் மானசரோவருக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டதோடு, தனது கோத்திரம் குறித்தும் வெளிப்படுத்த ராகுல்காந்தி தயங்கவில்லை. மற்றொரு காங்கிரஸ் தலைவரான சசி தரூர் தொடர்ச்சியாகத் தனது இந்து அடையாளத்தை வெளிப்படுத்தி வருபவர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டல்... சித்தாந்தச் சிக்கலில் தி.மு.க!

அரசியல் தலைவர்கள் தங்கள் மத அடையாளத்தை வெளிப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. இந்திய அரசியலமைப்பு இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் தங்கள் மத அடையாளங்களைப் பிரசாரம் செய்வதற்கு உரிமை வழங்கியிருக்கிறது. இந்தியாவின் முதல் பிரதமராக நேரு இருந்த போது, குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் சோம்நாத் கோயிலுக்கு அரசுப் பயணம் செய்வதை எதிர்த்தார். மதச்சார்பற்ற குடியரசு ஒன்றின் தலைவர், தனது தனிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுவதைக் கூட, அரசியலில் மதம் கலந்துவிடக் கூடாது என்ற அச்சத்தினால் உருவான எதிர்ப்பு நேருவுடையது.

இந்தியாவின் அரசியல் தற்போது இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் அளவுகளின் அடிப்படையில் மாற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க `இந்துக்களின் கட்சி' என்று தன்னை முன்னிறுத்தும் வகையில், இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கையிலும், பெரும்பான்மை மக்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. தேர்தலில் பி.ஜே.பி தோற்றிருக்கலாம்; ஆனால் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்தியல் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. சுரேஷ் பையாஜி ஜோஷி கூறியது போல, `அரசியலில் சண்டை இருக்கலாம். ஆனால் இந்துக்களுக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும்' என்பது உண்மையாகியுள்ளது. ஒவ்வொரு முறையும் வாக்கு செலுத்த வரிசையில் நிற்கும் உண்மையான சாமான்யனின் விரல்களில், வெவ்வேறு வண்ணக்கலவையில் `காவி' வண்ணம் பூசுகிறது அரசு. எது எப்படியோ, ஆர்.எஸ்.எஸ் ஹேப்பி அண்ணாச்சி!

அடுத்த கட்டுரைக்கு