Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்: சூடுபிடிக்கும் களம்... 9 மாவட்டங்களில் வெற்றிவாய்ப்பு யாருக்கு அதிகம்?

ஸ்டாலின், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

இன்னும் ஒருசில நாள்களில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது. இந்தத் தேர்தல் எந்தக் கட்சிக்குச் சாதகமாக இருக்கும், எந்தக் கட்சி அதிக இடங்களைப் பிடிக்கும் என மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. தேர்தலைச் சுமுகமாக நடத்துவது குறித்து, அங்கீகரிக்கப்பட்ட 11 கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது. தொடர்ந்து, `விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும். அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்' என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கட்சிகளைக் கேட்டுக்கொண்டனர். மறுபுறம், உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல தென்காசி, ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும் நெல்லை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - உள்ளாட்சித் தேர்தல்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - உள்ளாட்சித் தேர்தல்

அரசும் தேர்தல் ஆணையமும் ஒருபுறம் தயாராகிவர, அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில், ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அதேபோல, ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அறிவித்திருக்கிறது அதிமுக தலைமை. இதர கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கிவிட்டன.

கடந்த டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில், திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களைத் தவிர மற்ற 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. திருநெல்வேலியிலிருந்து தென்காசியும், காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டும் வேலூரிலிருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும் விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சியும் அப்போதுதான் பிரிக்கப்பட்டிருந்ததால், தொகுதி மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையவில்லை. மற்ற 27 மாவட்டங்களில், 515 மாவட்ட கவுன்சிலர், 5,090 ஒன்றிய கவுன்சிலர், 9,624 கிராம ஊராட்சித் தலைவர், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பணியிடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. அதில், 513 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில், தி.மு.க 243 இடங்களிலும், அ.தி.மு.க 214 இடங்களிலும் வெற்றிபெற்றன. 5,090 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில், தி.மு.க 2,100 இடங்களையும் அ.தி.மு.க 1,781 இடங்களையும் கைப்பற்றின. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவை-விட திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்பட்டது.

தி.மு.க., அ.தி.மு.க
தி.மு.க., அ.தி.மு.க

இந்தநிலையில், இன்னும் ஒருசில நாள்களில் ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது. இந்தத் தேர்தல் எந்தக் கட்சிக்குச் சாதகமாக இருக்கும், எந்தக் கட்சி அதிக இடங்களைப் பிடிக்கும் என மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ப்ரியன்

``தேர்தல் நடைபெறவிருக்கிற ஒன்பது மாவட்டங்களில் திருநெல்வேலி, தென்காசியைத் தவிர மற்ற ஏழு மாவட்டங்கள் வட மாவட்டங்கள். இந்த மாவட்டங்களில், கடந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 35 இடங்களில் 28 இடங்களை திமுக கூட்டணிதான் கைப்பற்றியது. வெறும் ஏழு இடங்களை மட்டுமே அதிமுக கூட்டணி கைப்பற்றியது. அதேபோல, திருநெல்வேலி, தென்காசியில் மொத்தமுள்ள 10 இடங்களில், ஆறு இடங்களில் திமுக-தான் வெற்றிபெற்றிருக்கிறது. நான்கு இடங்களை மட்டுமே அதிமுக கைப்பற்றியது. தவிர, வன்னியர் இட ஒதுக்கீட்டை நடைமுறைக்குக் கொண்டுவந்தது, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு மணிமண்டபம், அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் உள்ளிட்ட விஷயங்கள் வட தமிழகத்தில் இன்னும் திமுக-வின் செல்வாக்கை உயர்த்தியிருக்கின்ரன. வழக்கமாக, அதிமுக-வுக்கு வாக்களிக்கும் வட மாவட்ட பட்டியலின மக்கள், கடந்த தேர்தலில் பாமக அந்தக் கூட்டணியில் இருந்ததால், மாற்றி திமுக கூட்டணிக்கு வாக்களித்தனர். இதை முன்னாள் அமைச்சர் வீரமணி வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

ப்ரியன்
ப்ரியன்

வன்னியர்களுக்கு ஆதரவாக திமுக சில நடவடிக்கைகளை எடுத்துவருவதால், வன்னியர் அல்லாத பிற சமூக மக்களுக்கு கோபம் வருமா என்கிற கேள்வி எழலாம். ஆனால், பாமக அந்தக் கூட்டணியில் இருக்கும்வரை, அவர்களும் திமுக கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள். தவிர, ஆட்சிக்கு வந்த இந்த 120 நாள்களில் திமுக செய்திருக்கிற நல்ல விஷயங்கள் காரணமாக அவர்களின் வாக்குகள் அதிமுக - பாமக கூட்டணிக்குப் போவதற்கான வாய்ப்புகள் குறைவே. ஆகமொத்தம், பட்டியலின மக்கள், வன்னியர் அல்லாதவர்கள், வன்னியர்களில் சில பிரிவினரின் ஆதரவு என அனைவரின் ஆதரவும் இருப்பதால் சட்டமன்றத் தேர்தலைவிட அதிகமான இடங்களில் திமுக உள்ளாட்சித் தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. தவிர, கடந்த நான்கு மாதங்களில் ஸ்டாலினின் இமேஜும் கூடியிருக்கிறது. அதேவேளையில் மறுபுறம், அதிமுக-வில் பல்வேறு குளறுபடிகள் நிலவிவருகின்றன. அதனால், திமுக ஸ்வீப் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.''

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் 2,577 கோடி ரூபாய் இழப்பு... யார் காரணம்?

துரை கருணா

``தேர்தல் நடைபெறப்போகும் மாவட்டங்கள் பெரும்பாலும் கிராமப் பகுதிகளை அதிகமாகக்கொண்டவை. அதனால், ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அதிமுக-வுக்குச் சாதகமாக இருக்கும். ஒன்றியம், மாவட்டம் என வரும்போது திமுக-வுக்கு கூடுதல் வாய்ப்பு இருக்கும். திமுக-வில் தற்போது வெற்றி பெற்றிருக்கிற எம்.எல்.ஏ-க்கள் தங்களுடைய உறவினர்கள், ஆதரவாளர்களை உள்ளாட்சிப் பதவிகளில் கொண்டுவருவதற்கு மெனக்கெடுவார்கள். காரணம், உள்ளாட்சிப் பொறுப்புகளில், ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட மற்ற கட்சி நிர்வாகிகள் வந்துவிட்டால் லோக்கல் எம்.எல்.ஏ-வான தங்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விடுமோ எனக் கருதுவார்கள். வேட்பாளர்களாக நிறுத்துவதோடு மட்டுமல்ல, அவர்களின் வெற்றிக்காக எம்.எல்.ஏ-க்களே நேரடியாகக் களத்தில் இறங்கும்போது திமுக-வின் வெற்றிவாய்ப்பு இன்னும் அதிகமாகும். வழக்கமாகவே ஆளுங்கட்சியாக இருக்கும்போது, உள்ளாட்சி அமைப்புகளில் தீவிரமாகக் களப்பணியாற்றி வெற்றியைக் கைப்பற்றுவதுதான் திமுக-வின் ஸ்டைல்.

துரை கருணா
துரை கருணா

தவிர, அதிமுக-வில், தற்போது வலிமை வாய்ந்த தலைவர் இல்லை. இந்தநிலையில், கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்குப் போட்டி வேட்பாளர்கள் அதிகமாக நிற்பார்கள். ஜெயலலிதா காலத்திலேயே அது நடந்திருக்கிறது எனும்போது தற்போது நாம் சொல்லவே வேண்டியதில்லை. ஆனால், திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால், போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் வேறு வேலைகளில் பார்த்துக்கொள்ளலாம் என அமைதியாகச் சென்றுவிடுவார்கள். இந்தச் சாதக, பாதகங்களை ஆராயும்போது, ஆளுங்கட்சியான தி.மு.க 65 சதவிகித இடங்களைப் பிடிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக நான் பார்க்கிறேன்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு