Published:Updated:

செங்கோட்டையில் மதக்கொடி; பா.ஜ.க தொடர்பு! - வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் தீப் சித்து யார்?

நடிகர் தீப் சித்து யார்?
News
நடிகர் தீப் சித்து யார்? ( Twitter )

``2019 நாடாளுமன்றத் தேர்தலில், குர்தாஸ்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருக்கிறார் தீப் சித்து. 2020-ல் விவசாயிகளுக்கு ஆதரவாக `சம்பு மோர்ச்சா' அமைப்பைத் தொடங்கினார்.''

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி டெல்லியின் நான்கு எல்லைகளிலும் கடந்த 60 நாள்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள் விவசாயிகள். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று டெல்லியின் எல்லைப் பகுதிகளில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயச் சங்கங்கள் முன்னரே அறிவித்திருந்தன. இதற்கான ஒத்திகையை ஜன.7-ம் தேதி மேற்கொண்டனர். இதன்படி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு முன்பாக, `டெல்லி காவல்துறை அனுமதி அளித்த இடம் வரை சென்று, பிறகு பேரணியை முடித்துக்கொள்வோம்' என்று போராடும் விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் உறுதியளித்திருந்தனர். ஆனால், விவசாயிகளின் ஒரு பகுதியினர் டிராக்டர்களிலும், குதிரைகளிலும் டெல்லி நகருக்குள் நுழைய, அது காவல்துறைக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையேயான மோதலாக மாறியது. அதுமட்டுமல்லாமல், செங்கோட்டையில் `நிஷான் சாஹேப்' (Nishan Saheb) என்று சொல்லப்படும் சீக்கிய மதக்கொடியை ஏற்றினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தநிலையில், டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு பஞ்சாபைச் சேர்ந்த திரைப்பட நடிகர் தீப் சித்துதான் முழுக் காரணம் என்று விவசாய சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். செங்கோட்டையில் கொடி ஏற்றி, கலவரம் நடத்தியதும் தீப் சித்து தலைமையிலான கும்பல்தான் என்று குற்றம்சாட்டுகின்றனர் விவசாயிகள்.

தீப் சித்து
தீப் சித்து

இதையடுத்து நடிகர் தீப் சித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ``எங்கள் எதிர்ப்பைக் காட்டுவதன் அடையாளமாகவே செங்கோட்டையில் கொடியேற்றினோம். அங்கு நாங்கள் தேசியைக்கொடியை இறக்கியதாகச் சொல்கிறார்கள். நாங்கள் தேசியக்கொடியை இறக்கவில்லை. எங்கள் கொடியை மட்டுமே ஏற்றினோம்'' என்று விளக்கமளித்து, வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். நடிகர் தீப் சித்து தலைமையிலானவர்கள்தான் செங்கோட்டையில் கொடியேற்றினர் என்பதற்கு அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவே சாட்சியாக அமைந்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

யார் இந்த தீப் சித்து?

பஞ்சாப் மாநிலம், முக்த்சரில் (Muktsar) பிறந்தவர் சித்து. முதலில் மாடலிங் உலகில் அறிமுகமானவர், 2015-ம் ஆண்டு நடிகராகத் திரையுலகில் அறிமுகமானார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருக்கிறார் தீப் சித்து. 2020-ம் ஆண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக `சம்பு மோர்ச்சா' என்ற அமைப்பைத் தொடங்கினார்.

தீப் சித்து
தீப் சித்து
Twitter/@iamdeepsidhu

விவசாயிகள் போராட்டம் தொடங்கியது முதலே சம்பு மோர்ச்சா அமைப்பை விவசாயிகள் போராட்டத்தில் இணைக்க முயன்றுவந்தார் சித்து. ஆனால், தொடக்கம் முதலே அவரைத் தங்களோடு இணைத்துக்கொள்ள மறுத்துவந்தனர் விவசாயிகள். தீப் சித்துவை விவசாயிகள் புறக்கணித்துவருவது தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவந்தன.

`தீப் சித்து பா.ஜ.க ஆதரவாளர் என்பதால், அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என விவசாயச் சங்கங்கள் தொடக்கம் முதலே எச்சரித்துவந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தீப் சித்து
தீப் சித்து
Twitter

இந்தநிலையில், கடந்த டிசம்பர் 6-ம் தேதி, தனக்கும் தீப் சித்துவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் நடிகரும் பா.ஜ.க எம்.பி-யுமான சன்னி தியோல். இதைத் தொடர்ந்தும் சித்துவை, விவசாயிகள் புறக்கணித்தேவந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெல்லி நகருக்குள் பேரணி?

காவல்துறை அனுமதித்த இடத்தில் மட்டுமே பேரணி நடத்தப்போவதாக விவசாயச் சங்கங்கள் உறுதியளித்திருந்தன. இந்தநிலையில், சில விவசாயச் சங்கங்களை இணைத்துக்கொண்டு தன்னுடைய ஆட்களுடன், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே பேரணியைத் தொடங்கியிருக்கிறார் தீப் சித்து.

லக்கா சித்தானா (Lakha Siddhana) என்ற பிரபல ரௌடியோடு இணைந்து இந்த வன்முறைகளில் தீப் சித்து ஈடுபட்டிருப்பதாக விவசாயிகள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

டெல்லி செங்கோட்டை வன்முறை
டெல்லி செங்கோட்டை வன்முறை
இது குறித்து ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், ``ரௌடி கும்பல் தலைவன் லக்கா சித்தானாவும், நடிகர் தீப் சித்துவும் பேரணி நடப்பதற்கு இரண்டு நாள்கள் முன்பாக சிங்கு பகுதியில் போராடிவந்த சில விவசாயிகள் மத்தியில் பேசியிருக்கிறார்கள். வன்முறையைத் தூண்டும் வகையில் அங்கிருந்தவர்களிடம் பேசியிருக்கின்றனர். தீப் சித்து குறித்து நாங்கள் முன்பே போலீஸாரிடம் தகவல் தெரிவித்திருந்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்று கூறியிருக்கிறார்.
தீப் சித்து பா.ஜ.க-வோடு தொடர்புடையவர். வன்முறை நடந்தபோது செங்கோட்டையில் மைக்ரோபோனுடன் வந்திருந்தார் தீப் சித்து. அவர்தான் சில விவசாயிகளை செங்கோட்டைக்கு அழைத்துச் சென்று வன்முறை நடத்தியிருக்கிறார். இந்தச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சாட்சியாக இருந்தும், இதுவரை அவர் கைதுசெய்யப்படவில்லை.
யோகேந்திர யாதவ், ஸ்வராஜ் இந்தியா அமைப்புத் தலைவர்

வெளியான புகைப்படங்கள்!

இந்தநிலையில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தீப் சித்துவின் சில புகைப்படங்களை வெளியிட்டு, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். அந்தப் புகைப்படங்களில், பிரதமர் மோடியுடனும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தீப் சித்து இருப்பதே பரபரப்புக்குக் காரணம். மோடியுடன் இருக்கும் புகைப்படத்தில் சன்னி தியோலும் இருக்கிறார். இந்தப் புகைப்படங்களைப் பதிவிட்டு...

மோடியுடனும், அமித் ஷாவுடனும் இருக்கும் தீப் சித்துதான் இன்று செங்கோட்டையில் நடந்த வன்முறையை வழிநடத்தியவர்.
பிரசாந்த் பூஷண், மூத்த வழக்கறிஞர்

இந்தப் புகைப்படங்கள் வெளியானவுடன் பா.ஜ.க எம்.பி சன்னி தியோல், `` செங்கோட்டையில் நடந்த வன்முறை மிகவும் வருத்தத்துக்குரியது. எனக்கும் எனது குடும்பத்துக்கும் தீப் சித்துவுடன் எந்தத் தொடர்புமில்லை என்று டிசம்பர் 6-ம் தேதியே தெளிவுபடுத்தியிருந்தேன். ஜெய்ஹிந்த்'' என்று பதிவிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடியுடன் சன்னி தியோல்
பிரதமர் மோடியுடன் சன்னி தியோல்
Twitter

கொதிக்கும் பா.ஜ.க ஆதரவாளர்கள்!

பிரசாந்த் பூஷண் பதிவுக்கு பதிலடி கொடுக்கும்விதமாகப் பல விஷயங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர் பா.ஜ.க ஆதரவாளர்கள். ``2019-ல் பா.ஜ.க வேட்பாளர் சன்னி தியோலுக்கு ஆதரவாக இருந்தவர்தான் தீப் சித்து. ஆனால், தேர்தல் நடந்து முடிந்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகிவிட்டன. இதற்கிடையில் நடந்தவற்றை மறைக்க நினைக்கிறார்கள் சிலர். இந்த 18 மாத இடைவெளியில் சம்பு மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பைத் தொடங்கிய தீப் சித்து, பல இடங்களில் பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசியிருக்கிறார். வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவருகிறார். சன்னி தியோலுக்கும் அவருக்குமே தற்போது தொடர்பில்லை எனும்போது பா.ஜ.க-வோடு எப்படித் தொடர்பிருக்கும். இந்த வன்முறைக்கும் பா.ஜ.க-வுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை'' என்கிறார்கள் உறுதியாக.