Published:Updated:

ட்ரெண்ட் ஆன #StandWithAfreenFatima: யார் இந்த அஃப்ரீன் ஃபாத்திமா... அவரின் வீடு ஏன் இடிக்கப்பட்டது?!

அஃப்ரீன் ஃபாத்திமா ( ட்விட்டர் )

அஃப்ரீன் ஃபாத்திமாவின் வீடு இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் #StandWithAfreenFatima என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.

ட்ரெண்ட் ஆன #StandWithAfreenFatima: யார் இந்த அஃப்ரீன் ஃபாத்திமா... அவரின் வீடு ஏன் இடிக்கப்பட்டது?!

அஃப்ரீன் ஃபாத்திமாவின் வீடு இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் #StandWithAfreenFatima என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.

Published:Updated:
அஃப்ரீன் ஃபாத்திமா ( ட்விட்டர் )

முகமது நபிகள் குறித்துத் தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா அவதூறாகப் பேசியிருந்தார். இதற்குப் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், உத்தரப்பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் வெடித்தது. அது வன்முறையாக மாறியது.

போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக 60-க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறை கைதுசெய்தது. போராட்டத்தின்போது வாகனங்களுக்குத் தீவைப்பு நடந்தது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைக்க முயன்றனர். இந்த நிலையில் போராட்டத்துக்கு முக்கிய காரணமானவராகக் கருதப்படும் அஃப்ரீன் ஃபாத்திமாவின் தந்தை ஜாவேத் முகமது-வின் வீடு இடிக்கப்பட்டிருக்கிறது.

அஃப்ரீன் ஃபாத்திமா
அஃப்ரீன் ஃபாத்திமா

இது தொடர்பாக பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்தின் (பிடிஏ) மூத்த அதிகாரி ஒருவர், "இந்த வீடு பி.டி.ஏ மூலம் வரைபடத்தைப் பெறாமல் கட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மே 10-ம் தேதி ஜாவேத் முகம்மதுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவரின் கருத்தைத் தெரிவிக்கும்படி கூறப்பட்டது. அவருக்கான கால அவகாசம் மே 24 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கூறப்பட்ட தேதியில், ஜாவேத் அல்லது அவரின் வழக்கறிஞர் என யாரும் வரவில்லை. இது தொடர்பாக எந்த ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை, எனவே மே 25-ம் தேதி வீட்டை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், ஜாவேத் முகமது-வின் மனைவி, "வீடு தொடர்பான ஆவணம் கேட்டு ஜூன் 10-ம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. அப்போது முதல் காவல்துறை வீட்டிலேயேதான் இருந்தார்கள். ஜூன் 11-ம் தேதி சனிக்கிழமை இரவு வீடு இடிக்கப்படும் என்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டது. வார இறுதி நாள் என்பதால் எங்களால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியவில்லை. இதன் மூலம் திட்டமிட்டு அவசரமாகத்தான் எங்கள் வீடு இடிக்கப்பட்டிருக்கிறது" எனக் கூறியிருக்கிறார். ஜாவேத்-தின் மகன் உமாம், "அவர்கள் அனுப்பியதாகக் கூறும் எந்த அறிவிப்பும் உண்மையான சொத்து உரிமையாளரின் பெயரில் வெளியிடப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கல்வியாளர் அஃப்ரீன் ஃபாத்திமா, தன்னையும், தன் பெற்றோர், சகோதரியையும் அநியாயமாகக் கடத்தி காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, தற்போது சமூக வலைதளங்களில் #StandWithAfreenFatima என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.

இந்த நிலையில், அஃப்ரீன் ஃபாத்திமாவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான குர்மெஹர் கௌர், அஃப்ரீன் ஃபாத்திமாவின் வீடு இடிக்கப்பட்டது "தனது சொந்தக் குடிமகன் மீது அரசு நடத்தும் தாக்குதல்" என்று கூறினார். செயற்பாட்டாளர் முகமது இர்ஷாத், "அஃப்ரீன் ஃபாத்திமா எங்களிடையே மிகவும் அழுத்தமாகக் குரல் கொடுப்பவர். அரசுக்கு எதிரான மறுப்புக் குரல்கள் அரசை வெறித்தனமாக ஆக்கியிருக்கின்றன. நீங்கள் எவ்வளவு பேரைக் கைது செய்வீர்கள்... எத்தனை வீடுகளை இடிப்பீர்கள்... எது நடந்தாலும் சரி, எந்த நிபந்தனையுமின்றி நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்கிறோம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

பத்திரிக்கையாளர் ஃபாத்திமா கான், "அஃப்ரீன் ஃபாத்திமாவின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் அனைத்து இஸ்லாமிய ஆர்வலர்களுக்கும் ஒரு சமிக்ஞை. இந்த நாட்டில் உங்கள் குரலை ஒடுக்க உங்கள் சொத்துகள் ஏதேனும் சாக்குப்போக்கினால் இடிந்து விழும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism