Published:Updated:

ஐ.ஏ.எஸ் டு ஆளுநர்: மேற்குவங்கத்தின் புதிய ஆளுநர் ஆனந்த போஸ் யார்?

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ்

சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த மேற்கு வங்கத்துக்கு, அவருடன் இணைந்து பணியாற்றியவரின் மகனை ஆளுநராக நியமித்திருக்கிறார்கள்.

ஐ.ஏ.எஸ் டு ஆளுநர்: மேற்குவங்கத்தின் புதிய ஆளுநர் ஆனந்த போஸ் யார்?

சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த மேற்கு வங்கத்துக்கு, அவருடன் இணைந்து பணியாற்றியவரின் மகனை ஆளுநராக நியமித்திருக்கிறார்கள்.

Published:Updated:
மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ்

மேற்கு வங்க ஆளுநராக சி.வி.ஆனந்த் போஸ் என்பவரை நியமித்திருக்கிறார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு. கடந்த ஜூலை மாதத்தில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கரை குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது பா.ஜ.க கூட்டணி. இதையடுத்து மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன், கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்கத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது ஆனந்த போஸ் மேற்கு வங்க ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

ஆனந்த போஸ்
ஆனந்த போஸ்

யார் இந்த சி.வி.ஆனந்த போஸ்?

* கேரளாவின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள மண்ணனம் (Mannanam) கிராமத்தில் பிறந்தவர் ஆனந்த் போஸ்.

* இவரின் தந்தை வாசுதேவன் நாயர், சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். எனவே, அவரின் நினைவாகத் தன் மகனுக்கு ஆனந்த போஸ் எனப் பெயரிட்டிருக்கிறார்.

* ராஜஸ்தான் பிட்ஸ்-பிலானி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் போஸ். 1977 பேட்ஜின் கேரளா கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இவர்.

* கேரளாவின் கொல்லம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர் போஸ்.

* காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கே.கருணாகரன் கேரள முதலமைச்சராக இருந்த காலத்தில், அவருக்கு முதன்மைச் செயலாளராக இருந்தார் ஆனந்த போஸ். மேலும், வேளாண் அமைச்சகத்துக்குக் கூடுதல் செயலாளராகவும் இருந்திருக்கிறார்.

* 2011-ல் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாக, புது டெல்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு இயக்குநராக இருந்தார்.

* கேரளாவின் திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் பொக்கிஷங்களைக் கணக்கெடுக்கும்படி உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவுக்குத் தலைமை தாங்கியவர் ஆனந்த போஸ்.

* 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

* கோவிட் தொற்றுக் காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்கான செயல்திட்டத்தை வகுத்துக்கொடுக்கும் பணியை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் போஸிடம்தான் ஒப்படைத்தது.

* நரேந்திர மோடி அரசின் வளர்ச்சித் திட்டங்களை வகுக்கும் குழுவின் தலைவராக இருந்தவர் போஸ்.

* மத்திய அரசின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்ததில் முக்கியப் பங்கு இவருடையது.

* 71 வயதாகும் போஸ், ஐ.நா பொதுச்சபை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில் சிறப்புரை ஆற்றியிருக்கிறார்.

* ஆங்கிலம், மலையாளம், இந்தி மொழிகளில் நாவல், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என 45 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மம்தாவுடன் மோதலைக் கடைப்பிடிப்பாரா?

ஏற்கெனவே மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கர், பல்வேறு சம்பவங்களில் மம்தா அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். இல.கணேசன் ஆளுநரான பிறகு அப்படியான மோதல்கள் நடைபெறவில்லை. இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து தேசிய அரசியல் நோக்கர்கள், ``சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த மேற்கு வங்கத்துக்கு, அவருடன் இணைந்து பணியாற்றியவரின் மகனை ஆளுநராக நியமித்திருக்கிறார்கள். மத்திய அரசுக்குத் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துவரும் மம்தாவுக்கு எதிரான காய்நகர்த்தலாகத்தான் இந்த நடவடிக்கையைப் பார்க்கவேண்டியிருக்கிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பல வருட அனுபவம் பெற்ற போஸ், மம்தா அரசுக்குக் குடைச்சல் கொடுக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன'' என்கிறார்கள்.

இது தொடர்பான கேள்விக்கு ஆனந்த போஸ் பதில் அளிக்கையில், ``மாநில அரசுடன் மோதும் எண்ணம் எனக்கு இல்லை. எதையும் மோதலாக நான் பார்க்கவில்லை. மக்களமைப்பில் ஆரோக்கியமான ஆலோசனைகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். அதையெல்லாம் பேலன்ஸ் செய்து முன்னேறிச் செல்வோம். அரசியலமைப்பு அதற்கெல்லாம் வழிகாட்டுகிறது” என்கிறார்.