Published:Updated:

தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர், பொருளாளர் யார் யார்? எதிர்பார்ப்பும் பின்னணியும்

தி.மு.க
தி.மு.க

பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் காலமாகிவிட்ட நிலையில், அடுத்து எப்போது பொதுக்குழு கூட்டப்படும், யார் அடுத்த பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்படுவார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அது ஒன்றும் மாநில முதல்வர் பதவியல்ல. அந்தப் பதவியில் இருந்தவர் மறைந்ததும் உடனே தேர்வு செய்து, பதவியேற்றுக் கொள்ள வேண்டுமென்பது கட்டாயமுமல்ல. ஆனால், அந்தப் பதவியில் இருந்தவர் மறைவதற்கு முன்பே, அதுபற்றிய விவாதங்களும் கேள்விகளும் எழத் தொடங்கிவிட்டன. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது தி.மு.க பொதுச்செயலாளர் பதவி.

அ.தி.மு.க-வின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று கால் நுாற்றாண்டாகச் சொல்லிவந்தார்கள். அவர் மறைவுக்குப் பின், 2016 டிசம்பர் 29 அன்று அக்கட்சியின் பொதுக்குழு கூடி, சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்தனர். ஆனால், ஈ.பி.எஸ் அணி, ஓ.பி.எஸ் அணி இணைந்தபின், 2017 செப்டம்பர் 12 அன்று அ.தி.மு.க பொதுக்குழு கூட்டப்பட்டு, சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக மட்டுமின்றி, பொதுச் செயலாளர் பதவியே நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக அ.தி.மு.க. சட்ட திட்ட விதி எண் 43-ல் திருத்தம் செய்யப்பட்டு, பொதுச்செயலாளரின் அதிகாரங்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஓ.பன்னீர் செல்வம் - எடப்படி பழனிசாமி
ஓ.பன்னீர் செல்வம் - எடப்படி பழனிசாமி

அந்தப் பதவிகளில்தான் இப்போது பன்னீரும் பழனிசாமியும் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்ததைத் தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை. தற்போதுள்ள இரட்டைத்தலைமை எத்தனை நாளைக்கு நீடிக்குமென்றும் தெரியவில்லை. இந்த நிலையை உடைத்து, விரைவில் எடப்பாடி பழனிசாமியே பொதுச்செயலாளராகிவிடுவார் என்ற பேச்சும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது இதற்குத் தெளிவான விடை கிடைக்கலாம்.

ஜெயலலிதாவை அ.தி.மு.க-வின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று அக்கட்சியினர் கூறிவந்தாலும், அவர் அந்தப் பதவியில் இருந்தது, 1989-லிருந்து 2016 வரையிலான 27 ஆண்டுகள்தான். ஆனால் அவரையும்விட, அ.தி.மு.க-வின் தாய்க் கட்சியான தி.மு.க-வின் பொதுச்செயலாளராக அதிக காலம் பதவி வகித்தவர், பேராசிரியர் அன்பழகன். கடந்த 1977-லிருந்து 2020 மார்ச் 7 வரையிலுமாக மொத்தம் 43 ஆண்டுகள், தி.மு.க பொதுச்செயலாளராக இருந்திருக்கிறார் பேராசிரியர்.

அன்பழகன்
அன்பழகன்
கருணாநிதிக்கு நண்பர் மட்டுமல்ல ஆசிரியருமாகிய பேராசிரியர் க.அன்பழகன்!

மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரை, தலைவர் பதவியைவிட பொதுச்செயலாளர் பதவி என்பது மிகவும் மதிப்பு வாய்ந்த பதவியாகக் கருதப்படுகிறது. தி.மு.க-வில் கருணாநிதியால் தலைவர் பதவி முக்கியத்துவம் பெற்றது. ஆனால் அ.தி.மு.க-வில், பொதுச்செயலாளர் பதவிதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கிய பிறகு, அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவராக இருந்தார். பிறகு, பொதுச் செயலாளர் ஆனார். சில காலம் அந்த பொதுச்செயலாளர் பதவியில் மற்றவர்களையும் அமரவைத்தார் எம்.ஜி.ஆர். அவர் வழியிலேயே ஜெயலலிதா பொதுச்செயலாளர் ஆனார். பெயருக்கு அவைத்தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. இன்று வரையிலும் அது டம்மியான பதவியாகவே இருக்கிறது.

அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்று ஆட்சியைப் பிடித்து உச்சம் பெற்ற நிலையில்தான், தி.மு.க-விலிருந்து பிரிந்து ம.தி.மு.க-வை ஆரம்பித்த வைகோ, அக்கட்சியின் பொதுச்செயலாளராக தன்னை அறிவித்துக்கொண்டார். இப்படியாக, அரசியல் கட்சிகளில் பொதுச்செயலாளர் என்ற பதவியின்மீது பெரும் ஈர்ப்பு இருந்துவருகிறது.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி, மிகவும் அதிகாரம் வாய்ந்ததாக இருந்து, இப்போது இல்லாமலே போயிருக்கிறது. ஆனால், தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கு என்றைக்குமே ஒரே மாதிரியான அங்கீகாரமும் மரியாதையும் தரப்பட்டிருக்கிறது. கட்சியின் முக்கிய அறிவிப்புகள், ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே பொதுச்செயலாளர் வாயிலாகவே வெளியிடப்படுகின்றன. கருணாநிதியின் மகன் அழகிரி கட்சியை விட்டு கட்டம் கட்டப்பட்டபோது, அந்த அறிவிப்பை வெளியிட்டவர் அன்பழகன்தான். அன்பழகன் உடல் நலக்குறைவான பின்பே, பொதுச்செயலாளருக்கான சில அங்கீகாரங்கள் தலைவர் பெயருக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டன. ஆனாலும் தி.மு.க பொதுச்செயலாளர் பதவி, இப்போதும் பெரும் கெளரவமும் அதிகாரமும் மிக்க பதவியாகவே கருதப்படுகிறது. அந்த வகையில், தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி, இயற்கையாகவே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க தலைவராக கருணாநிதி இருந்தபோதே, கட்சியின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இடையில் அவ்வப்போது, மு.க.அழகிரியை முன்வைத்து அடுத்த தலைவராக அவருக்குதான் தகுதி இருக்கிறது என்று அரசியல் பரபரப்பு உருவாக்கப்பட்டது. ''கருணாநிதிக்குப் பிறகு தி.மு.க-வின் தலைவராக ஸ்டாலின் வருவதற்கு எல்லா தகுதியும் அவருக்கு உண்டு'' என வெளிப்படையாகவே பல தருணங்களில் சொன்னவர் அன்பழகன். ஆனாலும், தனக்குப் பின் ஸ்டாலின்தான் தலைவர் என்று அறிவிக்காமலே காலம் கடத்தினார் கருணாநிதி. இதன் காரணமாகவே, தி.மு.க வரலாற்றில் முன்னேயும் பின்னேயும் இல்லாத செயல் தலைவர் பதவி தோற்றுவிக்கப்பட்டது. கருணாநிதி மறைந்தபின் அந்தப்பதவியும் இல்லாமல் செய்யப்பட்டது. ஆனால், அன்பழகனுக்குப் பின் இவர்தான் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்லும் நிலை, தி.மு.க-வில் இல்லை.

அதனால்தான், பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் மறைந்துவிட்ட நிலையில், அடுத்து எப்போது பொதுக்குழு கூட்டப்படும், யார் அடுத்த பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுபற்றி தி.மு.க மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் பேசினோம்...‘‘அடுத்த ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சி என்ற வகையில், முறைப்படி பொதுக்குழுவைக் கூட்டி, புதிய பொதுச்செயலாளரைத் தேர்வுசெய்யவேண்டிய கட்டாயம், கட்சிக்கு இருக்கிறது. இல்லாவிடில், அதை வைத்தும்கூட ஆளும்கட்சிகளின் கூட்டணி ஏதாவது பிரச்னை கிளப்புவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் கூடிய விரைவிலேயே பொதுக்குழுவைக் கூட்டி, பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திவிடுவோம். முறைப்படியான தேர்தல் என்றாலும், தற்போதைய நிலையில் அடுத்த பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்படவே வாய்ப்பு அதிகம். ஸ்டாலினின் குறிப்பறிந்து செயல்படுபவர் என்பதோடு, கட்சியின் மூத்த தலைவர், பேச்சிலும் வல்லவர் என்பதால், அவரைத் தேர்வுசெய்வதே முக்கிய நிர்வாகிகளின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. அவரை எதிர்த்து யாரும் போட்டிபோட வாய்ப்பில்லை என்றே நினைக்கிறோம்.

துரைமுருகன்
துரைமுருகன்

துரைமுருகன் தான் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்படுவார் என்று எல்லோரும் நம்புவதால், அவர் தற்போது வகித்துவரும் பொருளாளர் பதவி யாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் எழுந்திருக்கிறது. ஸ்டாலின் வகித்த பதவி என்பதோடு, பெருமளவு சொத்துள்ள கட்சி என்ற வகையிலும் தி.மு.க பொருளாளர் பதவி, மிகவும் மதிப்பு வாய்ந்த பதவியாக உள்ளது. இப்போது, கட்சியின் பொருளாளராக துரைமுருகன் இருந்தாலும், கட்சியின் பெரும்பான்மை வரவு–செலவு விவகாரங்களைக் கையாள்வது எ.வ.வேலுதான். கட்சித் தலைவரின் சுற்றுப்பயணச் செலவுகள், போராட்டத்துக்கான செலவுகள், தேர்தல் செலவுகள் என எல்லாவற்றையும் கவனமாகக் கையாள்வதோடு, பெரிய அளவில் சிக்கல் வராமலும் பார்த்துக்கொள்பவர் அவர்தான். இதுவரை மறைமுகமாக, அறிவிக்கப்படாத பொருளாளராக இருந்த எ.வ.வேலுவை, அதிகாரபூர்வமாகவே பொருளாளராகத் தேர்வு செய்துவிடுவார்கள் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால், பொதுச்செயலாளர் பதவியின்மீது டி.ஆர்.பாலுவுக்கும் ஒரு கண் இருக்கிறது. அதேபோல, பொருளாளர் பதவியைக் கைப்பற்றும் ஆசை பொன்முடிக்கு இருக்கிறது’’ என்றார்கள். ஆனால், திட்டமிட்டபடி எந்தச் சிக்கலும் இல்லாமல் இந்தத் தேர்வுகள் நடந்து முடியுமா என்பது இன்னும் சிலருக்கு சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது. குறிப்பாக, கனிமொழி தரப்பிலிருந்து இந்தத் தேர்வுகளுக்கு எதிர்ப்பு கிளம்புமா என்று தி.மு.க-விற்குள் மட்டுமின்றி, ஆளும்கட்சி தரப்பிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

`தி.மு.க - காங்கிரஸ் மனக்கசப்பு உண்மைதான்!'- கூட்டணி சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.எஸ்.அழகிரி

முந்தைய பி.ஜே.பி ஆட்சியின்போது, அக்கட்சியுடன் கூட்டணி இல்லாதநிலையிலும், 37 தொகுதிகளை வென்று தேசத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க இருந்ததால், தம்பிதுரைக்கு துணை சபாநாயகர் பொறுப்பை பி.ஜே.பி வழங்கியது. அதேபோன்று, கடந்த ஆண்டு நடந்த தேர்தலில், அதே மூன்றாவது இடத்தை தி.மு.க பிடித்தது. அதனால் துணை சபாநாயகர் பதவியை கனிமொழிக்கு வழங்குவதற்கு பி.ஜே.பி அரசு தயாராக இருந்தது. ஆனால், அதற்கு தி.மு.க தலைமை ஒப்புக்கொள்ளவில்லை. இது, கனிமொழி தரப்புக்கு பெரும் அதிருப்தியையும் வேதனையையும் உண்டாக்கியது. கனிமொழிக்கு இந்தப் பதவியைக் கொடுத்து, அதன் மூலமாக கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பி.ஜே.பி முயல்வதாக தி.மு.க தலைமை நினைத்ததும், இதை மறுத்ததற்கு ஒரு காரணமாகக் கூறப்பட்டது. அதை கனிமொழி தரப்பும் ஏற்றுக்கொண்டது. ஆனால் இப்போது, காலியாகும் பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பதவிகளைத் தருவது, தி.மு.க-வுக்குள்ளேயே எடுக்கும் முடிவுதான் என்பதால், இந்தப் பதவிகளில் ஒன்றை கனிமொழிக்குத் தர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, அவரது ஆதரவாளர்களிடம் எழுந்திருக்கிறது.

எ.வ.வேலு
எ.வ.வேலு

இதுபற்றி நம்மிடம் பேசிய கனிமொழி ஆதரவாளர் ஒருவர், ‘‘கனிமொழியை திட்டமிட்டு புறக்கணிப்பது தொடர்ந்து வருகிறது. கனிமொழிக்கு துணை சபாநாயகர் பதவியை வேண்டாமென்று சொன்னதற்குக் கூறிய காரணத்தைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இடைத்தேர்தலில் அவரை பிரசாரத்துக்கு வரவிடாமல் தடுத்தது, நாடாளுமன்ற தி.மு.க தலைவராக அவரை நியமிக்க மறுத்தது என அடுத்தடுத்து அவருடைய வளர்ச்சியைத் தடுப்பதற்கான வேலைகள் நடப்பதைத்தான் எங்களால் ஏற்க முடியவில்லை. இப்போது கட்சியில் முக்கியப் பொறுப்புக்கு ஒருவரைத் தேர்வுசெய்ய வேண்டுமென்ற நிலையில், இதிலாவது கனிமொழியைப் பரிசீலிப்பார்களா என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், கனிமொழிக்கு அப்படியொரு எதிர்பார்ப்பு இருக்கிறதா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை’’ என்றார். தேர்தலுக்குத் தயாராவதற்கு முன்பு, இந்தத் தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்கவேண்டிய கட்டாயம் தி.மு.க தலைமைக்கு ஏற்பட்டிருக்கிறது. இதை எப்படி ஸ்டாலின் சமாளிப்பார் என்பதை அறிந்துகொள்வதற்கு தி.மு.க-வினரைவிட அதிக ஆர்வமாக இருப்பது, ஆளும்கட்சி உள்ளிட்ட மற்ற கட்சியினர்தான்.

அடுத்த கட்டுரைக்கு