Published:Updated:

யார் யாருக்கு பதவி?

ஸ்டாலின், துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், துரைமுருகன்

தி.மு.க-வில் நடக்கும் நாற்காலி யுத்தம்!

யார் யாருக்கு பதவி?

தி.மு.க-வில் நடக்கும் நாற்காலி யுத்தம்!

Published:Updated:
ஸ்டாலின், துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், துரைமுருகன்
தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் மறைவுக்குப் பிறகு தி.மு.க-வுக்குள் எழுந்துள்ள பதவிப் போட்டி, உடன்பிறப்புகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

43 ஆண்டுகள் தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவியை அலங்கரித்த அன்பழகன், மார்ச் 7-ம் தேதி மறைந்தார். அடுத்த சில தினங்களிலேயே, ‘அடுத்த பொதுச்செயலாளர் யார்?’ என்கிற கேள்வி தி.மு.க-வுக்குள் அலையடிக்க ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில், தான் வகித்துவந்த பொருளாளர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார் துரைமுருகன். அதையடுத்து, ‘துரைமுருகன்தான் அடுத்த பொதுச் செயலாளர்’ என்ற செய்தி தி.மு.க-வுக்குள் வேகமாகப் பரவ ஆரம்பித்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதை ஊர்ஜிதப்படுத்துவதுபோல், மு.க.ஸ்டாலினிடமிருந்து அறிவிப்பு வெளியானது. அதில், ‘கழகப் பொருளாளர் துரைமுருகன் அவர்கள், பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட விழைவதாகவும், எனவே தமது பொருளாளர் பொறுப்பிலிருந்து அவர் விலகுவதாகவும் கடிதம் வாயிலாக என்னிடம் தெரிவித்ததை ஏற்றுக்கொள்கிறேன். 29.3.2020 அன்று நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும்’ எனக் குறிப்பிடப் பட்டிருந்தது.

டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, பொன்முடி, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன்
டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, பொன்முடி, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன்

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தி.மு.க-வுக்குள் சலசலப்பு அதிகமாகியிருக்கிறது. தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளிடம் இதுகுறித்துப் பேசினோம்.

‘‘தி.மு.க-வில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளும் முக்கியமானவை. அதிலும் தலைவர், பொதுச்செயலாளர் ஆகிய இருவருக்கும் கட்சியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது. அதனால்தான், தனக்கு நம்பிக்கையான அன்பழகனையே கடைசிவரை அந்தப் பதவியில் அமரவைத்திருந்தார் கலைஞர். ஸ்டாலினும் தனக்கு நம்பிக்கையான ஒருவரே பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என நினைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படிப்பார்த்தால், துரைமுருகன்தான் ஸ்டாலினின் முதல் சாய்ஸ் என்பது எல்லோரும் எதிர்பார்த்ததுதான். அதுதான் நடக்கப்போகிறது. தனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என்று டி.ஆர்.பாலு எதிர்பார்த்தார். ஆனால், கருணாநிதியிடமும் முரசொலி மாறனிடமும் இருந்தளவுக்கான நெருக்கம், ஸ்டாலினிடம் டி.ஆர்.பாலுவுக்கு இல்லை. அதனால்தான் டி.ஆர்.பாலு வகித்துவந்த முதன்மைச் செயலாளர் பதவியைப் பறித்து நேருவிடம் வழங்கினார் ஸ்டாலின்.

துரைமுருகன், ஸ்டாலின்
துரைமுருகன், ஸ்டாலின்

இந்தச் சூழலில், கட்சிரீதியாக ஏதாவது ஒரு முக்கியமான பதவி தனக்கு வேண்டும் என டி.ஆர்.பாலு நினைக்கிறார். பொதுச்செயலாளர் பதவி இல்லை என்றால், பொருளாளர் பதவியாவது வேண்டும் என்று டி.ஆர்.பாலு விடாப்பிடியாக இருக்கிறார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், பொருளாளர் பதவிக்காக தான் வகித்துவரும் தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறார். ஒருவேளை அப்படி நடந்தால் தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவி தங்களுக்கு வழங்கப்படும் என்று தயாநதி மாறன், கனிமொழி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட்ட சிலர் காத்திருக்கின்றனர். தற்போது துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கும் ஐ.பெரியசாமிக்கும் பொருளாளர் பதவி மீது கண் இருக்கிறது.

முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசாவும் பொருளாளர் பதவிக்காகக் காய்நகர்த்தி வருகிறார். ‘சமத்துவம் சாதியத்துக்கு எதிராக மேடைதோறும் முழங்கிவரும் தி.மு.க-வில், மூன்று முக்கியப் பதவிகளில் ஒன்றை இதுவரை ஏன் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு வழங்காமல் இருக்கிறீர்கள்?’ என்று ஸ்டாலினிடமே கடிதம் கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம் ஆ.ராசா. கட்சியின் அன்றாட செலவு முதல் கலைஞர் டி.வி செலவு வரை நிர்வகிக்கும் எ.வ.வேலுவுக்கும் பொருளாளர் பதவி மீது ஆசை இருக்கிறது. அவரும் தனக்கு வாய்ப்பு கிடைக்காதா எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்.

பொன்முடி
எங்கள் பேராசிரியர்

மற்றொருபுறம் பொன்முடி ஆதரவாளர்கள், ‘கருணாநிதிக்கு எப்படி பேராசிரியர் துணையாக இருந்தாரோ, அதேபோல் ஸ்டாலினுக்கு எங்கள் பேராசிரியர் பொன்முடி துணையாக இருப்பார்’ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவர்களைத் தவிர, கட்சிக்காக கரன்சியை வாரி இறைப்பதில் முக்கியமான வரும், வட மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவருமான ஜெகத்ரட்சகன் ‘நாடாளுமன்றத்தில் கட்சிரீதியாக எனக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இப்போது கட்சிப் பதவி தரவில்லை யென்றால் எப்போது தரப்போகிறார்கள்? துணைப் பொதுச்செயலாளர் பதவி வகிக்கக்கூட நான் தகுதி இல்லாதவனா?’ என்று ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் மூலம் தூதுவிட்டுள்ளார். இப்படி தி.மு.க-வுக்குள் அதிகாரப் போட்டி உச்சத்தை எட்டிருயிருக்கிறது.

தேர்தல் நேரத்தில் பொன்முடி, ஜெகத்ரட்சகன், ஆ.ராசா உள்ளிட்டோரின் தேவை நமக்கு முக்கியம் என்பதை ஸ்டாலின் புரிந்துவைத்துள்ளார்.

அதற்கான மாற்றுத் திட்டத்தையும் அவர் யோசித்து வருகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் முன்மொழியப்படவே வாய்ப்புள்ளது. பதவிக்கு மல்லுக்கட்டும் பொன்முடி, ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, எ.வ.வேலு ஆகிய நால்வருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவியைக் கொடுத்து, மண்டலப் பொறுப்பாளர் என்ற அந்தஸ்தில் அமர்த்திவிடும் திட்டத்தில் இருக்கிறார் ஸ்டாலின்’’ என்கின்றனர்.

மார்ச் 29-ம் முடிவு தெரிந்துவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism