Published:Updated:

ரிசார்ட்டில் கவுன்சிலர்கள்.. கோதாவில் பிரபலங்கள்! - நெல்லை மாநகராட்சி மேயர் ரேஸில் யார் யார்?

நெல்லை மாநகராட்சி மேயர் ரேஸ்

நெல்லை மாநகராட்சியை 16 வருடங்களுக்குப் பிறகு தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. மாநகராட்சித் தேர்தலில் அசுர பலத்துடன் வெற்றி பெற்றுள்ள தி.மு.க-வில் மேயராக தேர்வு செய்யப்பட இருப்பது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ரிசார்ட்டில் கவுன்சிலர்கள்.. கோதாவில் பிரபலங்கள்! - நெல்லை மாநகராட்சி மேயர் ரேஸில் யார் யார்?

நெல்லை மாநகராட்சியை 16 வருடங்களுக்குப் பிறகு தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. மாநகராட்சித் தேர்தலில் அசுர பலத்துடன் வெற்றி பெற்றுள்ள தி.மு.க-வில் மேயராக தேர்வு செய்யப்பட இருப்பது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Published:Updated:
நெல்லை மாநகராட்சி மேயர் ரேஸ்

நெல்லை மாநகராட்சி 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை ஐந்து முறை நடந்த நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் மூன்று முறை அ.தி.மு.க-வும் இரண்டு முறை தி.மு.க-வும் கைப்பற்றியுள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

மொத்தம் உள்ள 55 வார்டுகளில் தி.மு.க-வுக்கு 44 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் மூன்று வார்டுகளிலும் ம.தி.மு.க., முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட், சுயேச்சை ஆகியவை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க-வுக்கு நான்கு இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. தற்போது தி.மு.க கூட்டணி 51 கவுன்சிலர்களுடன் பெரும்பான்மை வகிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மக்கள் பிரச்னைகள்!

நெல்லை மாநகராட்சியில் சாலை வசதி மிகவும் மோசமாக உள்ளது. பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்திக்கிறார்கள். நெல்லையில் மாற்றுச் சாலைக்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவே இல்லை. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மாற்றுச் சாலைப்பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

நெல்லை மாநகராட்சி வளாகம்
நெல்லை மாநகராட்சி வளாகம்

பாதாள சாக்கடை திட்டப் பணிகளும் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவில்லை., அதனால் கழிவுகள் அனைத்தும் தாமிரபரணி ஆற்றில் கலக்கப்படுவதால் ஆறு மாசுபடுகிறது. நெல்லை மாநகராட்சிப் பகுதிகளீல் குடிநீர் பிரசனையும் தலைதூக்கி வருகிறது. கண்ணுக்கெட்டும் தூரத்தில் தாமிரபரணி ஆறு இருந்தபோதிலும், வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதும் பொதுமக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெல்லை மாநகரத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக மாநகரத்தையே உருக்குலைத்து வைத்துள்ளனர். அவசியமற்ற இடங்களில் எல்லாம் சாலையின் நடுவில் சுவர் போல மீடியன் அமைத்துள்ளதால் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக அமைந்திருக்கிறது.

மாநகராட்சியில் காலியாக கிடந்த இடங்களை எல்லாம் கட்டடங்களாகி உள்ளனர். ஒரே நேரத்தில் மூன்று பேருந்து நிலையங்களில் பணிகள் நடந்ததால் மக்கள் பட்ட துன்பத்துக்கு அளவே இல்லை.தற்போது இரு பேருந்து நிலையப் பணிகள் முடிவடைந்த நிலையில் சந்திப்பு பேருந்து நிலையம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

சமுதாய அடிப்படையில் மேயர் பொறுப்பு?

நெல்லை மாநகராட்சி மேயர் பொறுப்பு இந்தமுறை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ஆண், பெண் என்கிற பேதமின்றியும் சாதிய பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் போட்டியில் இருக்கிறார்கள். பலமுறை துணை மேயர் பொறுப்பைக் கைப்பற்றிய தேவர் சமூகத்துக்கு இந்தமுறை மேயர் பொறுப்பு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

மேயருக்கான போட்டியில் இருக்கும் பிரபா சங்கரி, ரேவதி, சுதா
மேயருக்கான போட்டியில் இருக்கும் பிரபா சங்கரி, ரேவதி, சுதா

அதே போல, இதுவரை மேயர், துணை மேயர் என எந்த பெரிய பொறுப்புகளும் வழங்கப்படாத நாடார் சமுதாயத்துக்கு மேயர் பொறுப்பைக் கொடுத்து அந்த சமுதாய மக்களை மகிழ்விக்க வேண்டுமென்று தெட்சண மாற நாடார் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நெல்லை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் சைவப் பிள்ளைமார், மற்றும் யாதவர் சமுதாயத்தினர் அதிகமாக வசிப்பதால் அவர்களில் ஒருவருக்கு மேயர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேயர் பொறுப்புக்குப் போட்டி பலமாக இருப்பதால் வெற்றி பெற்ற கவுன்சிலர்களில் அநேகரை மத்திய மாவட்ட தி.மு.க சார்பாக ரிசார்டுகளில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்களாம்.

கோகுலவாணி மற்றும் மகேஸ்வரி
கோகுலவாணி மற்றும் மகேஸ்வரி

பொதுப் பிரிவினருக்கு நெல்லை மாநகராட்சி மேயர் பொறுப்பு ஒதுக்கப்பட்டிருப்பதால், பெண்கள் பலரும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். மத்திய மாவட்ட மகளிரணி செயலாளரும் கனிமொழியின் சிபாரிசுக்கு உரியவருமான மகேஸ்வரி செந்தில் பெயர் பலமாக அடிபடுகிறது. யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவரும் நீண்டகால தி.மு.க உறுப்பினருமான கோகுலவாணி பெயரும் மேயருக்கான லிஸ்டில் இருக்கிறது.

மேயர் வேட்பாளர் பட்டியலில் இருப்பவர்கள்!

நெல்லை மேயர் வேட்பாளர் பட்டியலில் பணபலம் படைதத பலர் வரிசைகட்டி நிற்கிறார்கள். தலைமைச் செயற்குழு உறுப்பினரான கே.ராஜூ, முன்னாள் தச்சை மண்டல் செயலாளர் சுப்பிரமணியன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை ஆகியோர் இருக்கிறார்கள்.

சுப்பிரமணியன், கருப்பசாமி கோட்டையப்பன்
சுப்பிரமணியன், கருப்பசாமி கோட்டையப்பன்

இது தவிர, 25-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கிட்டு என்ற ராமகிருஷ்ணன், 13-வது வார்டில் வென்ற பகுதிச் செயலாளரான டாக்டர்.சங்கர் ஆகியோரும் மேயருக்கான ரேஸில் இருக்கிறார்கள். கலைஞரின் சமூகத் தொண்டு என்ற தலைப்பில் முனைவர் பட்டத்துக்கு ஆய்வு மேற்கொண்டு வருபவரும் முன்னாள் துணை மேயர் விஸ்வநாத பாண்டியனின் மருமகளுமான பிரபா சங்கரி, தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக தலைவர் மூர்த்தி தேவரின் மனைவி சுதா, தி.மு.க-வைச் சேர்ந்த மூளிக்குளம் பிரபுவின் மனைவி ரேவதி ஆகியோரும் மேயர் போட்டியில் இருக்கிறார்கள்.

அப்துல் வஹாப் போடும் கணக்கு!

நெல்லை மத்திய மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப், தன் ஆதரவாளர்களில் ஒருவருகே மேயர் பொறுப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கணக்குப் போட்டு வேலை செய்து வருகிறார். எம்.எல்.ஏ-வாக மட்டுமே இருக்கும் அவரை விடவும் மேயர் என்பது கூடுதலான பொறுப்பு என்பதால் எதிர்காலத்தில் தன்னை எதிர்த்து அரசியல் செய்யும் அளவுக்குச் சென்று விடாதவர்களுக்கே அவரது ஆதரவு இருக்குமாம்.

கே.ராஜு மற்றும் வில்சன் மணித்துரை
கே.ராஜு மற்றும் வில்சன் மணித்துரை

அந்த வகையில், மகளிரணி அமைப்பாளரான மகேஸ்வரி என்பதே அவரின் முதல் தேர்வாக அமையும். மகேஸ்வரியின் கணவரான மறைந்த செந்தில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் பிளஸ். ஆண்களுக்கே பொறுப்பு வழங்கக் கட்சித் தலைமை முடிவு செய்தால் ராமகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுப்பார். ஒருவேளை, யாதவ் சமுதாயத்துக்கு வாய்ப்பு வழங்கக் கட்சித் தலைமை முடிவெடுத்தால் டாக்டர் சங்கருக்கு மாவட்டச் செயலாளரின் ஆதரவு இருக்கும் என்ம்கிறார்கள்.

நெல்லை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பொறுப்புகளை தனக்கு விசுவாசமானவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் அப்துல் வஹாப் தீவிரம் காட்டி வருகிறார். இது தொடர்பாக சென்னைக்குச் சென்றுள்ள அவர் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மகேஸ்வரி, ராமகிருஷ்ணன், டாக்டர்.சங்கர்
மகேஸ்வரி, ராமகிருஷ்ணன், டாக்டர்.சங்கர்

அதே சமயம், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ-வான மாலைராஜா அகியோரின் கோரிக்கையை தேர்தல் சமயத்தில் அப்துல் வஹாப் நிராகரித்து விட்டதால் அவர்கள் அவருக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள்.எது எப்படி இருந்தாலும் நெல்லை மாநகராட்சி மேயர் பொறுப்பு என்பது மகேஷ்வரி, கிட்டு என்கிற ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பி.எம்.சரவணன், டாக்டர்.சங்கர் ஆகியோரில் ஒருவருக்குக் கிடைக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள், தி.மு.க-வினர்.

மேயருக்கான இறுதிப் பட்டியலில் மகேஸ்வரி மற்றும் பி.எம்.சரவணன் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருக்கின்றன. இவர்களில் ஒருவருக்கே மேயர் வாய்ப்பு கிடைக்கும் என்கிற பேச்சு வலுவாக இருக்கிறது. இருப்பினும் கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கப்போகிறதோ என்கிற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் உள்ளது.

பி.எம்.சரவணன் மற்றும் மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப்
பி.எம்.சரவணன் மற்றும் மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப்

இதனிடையே, மேயர் பொறுப்பு கிடைக்காதவர்கள், துணை மேயருக்கான போட்டியில் தீவிரம் காட்டுவார்கள். போட்டி பலமாக இருந்தாலும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவு கருப்பசாமி கோட்டையப்பனுக்கு இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தலைமை செயற்குழு உறுப்பினரான கே.ராஜூவின் பெயரை மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் பரிந்துரை செய்திருப்பதால் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என உள்ளூர் உடன்பிறப்புகள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism